பாலியல் குற்றச்சாட்டு: ஹெச்.டி.ரேவண்ணா கைது!

அரசியல்

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரணைக்கு அனுப்பாமல் கடத்திய புகாரில் கர்நாடகா முன்னாள் முதல்வர் தேவகவுடாவின் மகனும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சட்டமன்ற உறுப்பினருமான ஹெச்.டி.ரேவண்ணாவை எஸ்ஐடி போலீசார் இன்று (மே 4) கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி-யும், முன்னாள் முதல்வர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பிரஜ்வல் பாலியல் தொந்தரவு செய்ததாக 25 வயது பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஹாசன் போலீசார் பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை ரேவண்ணா ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோல, ஹெச்.டி.ரேவண்ணாவின் இல்லத்தில் வேலை செய்த பணிப்பெண் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி காணாமல் போனதாக அப்பெண்ணின் மகள் மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் போலீசில் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் ஹெச்.டி.ரேவண்ணா மீது போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த இரண்டு வழக்குகளையும் சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில், பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றுள்ளார். அவருக்கு எதிராக எஸ்ஐடி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

பணிப்பெண்ணை கடத்திய வழக்கில் இருந்து முன் ஜாமீன் கோரி ஹெச்.டி.ரேவண்ணா பெங்களூரு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் ஹெச்.டி.ரேவண்ணாவுக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்தனர். மேலும், வழக்கு விசாரணையை மே 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதனையடுத்து ரேவண்ணா இல்லத்திற்கு விரைந்த எஸ்ஐடி போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நீட் எழுதப் போறீங்களா? இதெல்லாம் மறந்துறாதீங்க!

விஜய்யின் பாலிடிக்ஸ் புடிச்சிருக்கு: பாராட்டிய சிவராஜ் குமார்

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *