தேர்தல் ஆணையர் ஆலோசனை : அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் என்ன?
மக்களவை தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று (பிப்ரவரி 23) சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய 10 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, அதிமுக சார்பில் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “தேர்தல் ஆணையத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தோம்.
கடந்த தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், வாக்குப்பதிவு இயந்திரத்திற்கும், கண்ட்ரோல் யூனிட்டுக்கும் இடையில் விவிபேட் வைக்க வேண்டும் என்ற புது நிலையை கொண்டு வந்துள்ளனர். இது சட்டத்திற்கு புறம்பானது. விவிபேட் வைக்கும் போது எண்ணிக்கையில் 100% சதவிகிதம் துள்ளியமாக பார்க்க முடியாது என்று சொல்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற முறையை பின்பற்றினால் ஒன்று அல்லது இரண்டு சதவிகிதம் தவறு நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என தேர்தல் ஆணையமே ஒத்துகொள்கிறது.
இதையெல்லாம் மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தால், அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம்.
எத்தனை கட்டமாக தேர்தல் நடத்தினாலும் நாங்கள் தேர்தலை சந்திக்க தயார் என்பதால் அதுகுறித்து எதுவும் கேட்கவில்லை” என்றார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். இறந்தவர்கள், வீடு மாறியவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. தகுதியான வாக்காளர்களின் பெயர் சேர்க்கப்படவில்லை. இதுதொடர்பாக கோரிக்கை வைத்தோம்.
பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பு பணிக்கு வரும் உள்ளூர் காவல்துறை பெரும்பாலும் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது.
அதனால் கூடுதல் மத்திய காவல்படை, துணை ராணுவ படையை அனுப்பி சுதந்திரமாக தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
திமுக பலவீனமாக உள்ள மாவட்டங்களில், ஆளுங்கட்சிக்கு சாதமாக நடந்து கொள்ளும் அதிகாரிகளை கண்டறிந்து அந்த மாவட்டங்களுக்கு மாற்றுகிறார்கள். இதில் தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றுகிறார்கள்.
உதாரணத்துக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திருவண்ணாமலைக்கு மாற்றப்படுகிறார். ஆனால் அந்த தொகுதியில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை பகுதிகள் வருகிறது. இதுபோன்ற விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்.
ஒவ்வொரு வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்களை வைக்க மாநில அளவில் டெண்டர் விடப்படும். அந்த டெண்டரை கட்சி சார்பில்லாதவர்களுக்கு அளிக்க வேண்டும். ஆனால் திமுக அனுதாபிகளுக்கு டெண்டர் கொடுத்தால், வாக்குப்பதிவில் முறைகெடு நடக்கும் சூழல் ஏற்படும்” என தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பி.சம்பத் கூறுகையில், “ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். பணப்பட்டுவாடா செய்யப்படுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்” என கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியின் மாநில பொதுச்செய்லாளர் ஜோசப் ராஜா, “60 சதவிகிதத்துக்கு குறைவாக வாக்குகள் பதிவாகும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜெயம் ரவி இல்லாமல் நடைபெற்ற ‘தனி ஒருவன் 2’ பட பூஜை… காரணம் என்ன?
அடுத்தடுத்து ரெய்டு… தமிழ்நாட்டு நிறுவனங்கள் பாஜகவில் கொட்டிய கோடிகள் – பாகம் 2