கடந்த சட்டமன்றத் தேர்தலில் வட மாவட்டங்களில் குறிப்பாக சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் அதிமுக-பாமக கூட்டணி கணிசமான வெற்றியைப் பெற்றிருந்தது. தர்மபுரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 தொகுதிகளையும் அதிமுக-பாமக கூட்டணியே கைப்பற்றியது. அதேபோல் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுக-பாமக கூட்டணி வெற்றி பெற்றது.
இதன் காரணமாக இந்த முறையும் பாமக அதிமுகவோடு கூட்டணி சேரும் என்று அப்பகுதிகளைச் சேர்ந்த பாமகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், பாஜக கூட்டணியில் பாமக இணைந்ததால் ஏற்பட்ட அதிருப்தியிலிருந்து அவர்களால் இன்னும் வெளியில் வர முடியவில்லை.
பாமகவில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட பலரும் இதே நிலையில் தான் இருக்கிறார்கள். இந்நிலையில், அப்படிப்பட்ட வேட்பாளர்களை சைலண்ட் செய்ய திமுக வேட்பாளர்கள் தரப்பிலிருந்து விலை வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அதில் ஒரு வேட்பாளர் திமுகவின் டிமாண்டை ஏற்றுக் கொண்டிருப்பதாக அப்பகுதியின் அரசியல் வட்டாரங்களிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் இன்னொரு பக்கம் அதிமுக வேட்பாளர்களும் பாமக வேட்பாளர்களிடம் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
வேட்பாளர்கள் மட்டுமல்லாமல் பாமகவின் நிர்வாகிகள், ஊழியர்கள் மட்டத்திலும் இத்தகைய திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நெல்லை, விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!