ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் ஒரு அரசியல் சூழ்ச்சி என பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்ரல் 25) தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.3.99 கோடி எடுத்துச் சென்ற சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூவரையும் தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணிபுரிபவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
அதேபோல், நெல்லை கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் ரூ.28.51 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து, நெல்லை சுயேட்சை வேட்பாளர் சி.எம்.ராகவன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது, அதில், நயினார் நாகேந்திரன் மற்றும் ராபர்ட் புரூஸ் ஆகியோர் மீது அமலாக்கத்துறையின் பிஎம்எல்ஏ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரியிருந்தார்.
இந்நிலையில், நயினார் நாகேந்திரன் மற்றும் ராபர்ட் புரூஸ் ஆகியோருக்கு எதிரான மனுவை நேற்று (ஏப்ரல் 24) சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “ரூ.4 கோடி விவகாரம் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்வதற்காக தான். இது ஒரு அரசியல் சூழ்ச்சி. தமிழகத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் ரூ.200 கோடிக்கும் மேல் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், தொடர்ந்து இந்த 4 கோடி ரூபாய் விவகாரத்தில் யாரோ, எங்கேயோ கொண்டு சென்ற பணத்துடன் என்னை தொடர்புப்படுத்துகிறார்கள்.
தேர்தல் பறக்கும் படையினரால் 200 கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகள் தொழிலுக்காக வைத்திருந்த பணத்தை எல்லாம் பறிமுதல் செய்துள்ளனர். அந்த 4 கோடி விவகாரத்திற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அந்த பணம் என்னுடையது இல்லை.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை எனக்குதெரியும். ஆனால், அவர்கள் எடுத்து சென்ற பணத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இந்த வழக்கில் நான் நேரில் ஆஜராகி எனது தரப்பு நியாயத்தை சொல்வேன். சம்மன் அனுப்பப்பட்டுள்ளது, நிச்சயமாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன்.
ரூ.4 கோடி விவகாரத்தில் யாரையும் தனிப்பட்ட முறையில் நான் குறைகூற விரும்பவில்லை. பாஜகவில் உட்கட்சி பூசல் காரணமாக நயினார் நாகேந்திரன் சிக்க வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுவது முற்றிலும் தவறான செய்தி. வரும் மே 2ஆம் தேதி நேரில் ஆஜராக உள்ளேன்.
யாரும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும்.” என பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…