மன்சூரை சேர்த்துக்கொள்ள தயங்கும் காங்கிரஸ் : ஏன்?

Published On:

| By christopher

Why Congress reluctant to include Mansoor ali khan

காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்பி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் நடிகர் மன்சூர் அலிகான் இன்று (ஏப்ரல் 25)  கடிதம் கொடுத்துள்ளார். ஆனால், அவரை உடனடியாக கட்சியில் சேர்க்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 89 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நாளை (ஏப்ரல் 26) நடைபெற உள்ளது. இந்த நிலையில் நடிகரும், வேலூர் மக்களவை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டவருமான மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை நேரில் சந்தித்து கடிதம் அளித்துள்ளார். அதில் தன்னை ராகுல் காந்தி முன்னிலையில் கட்சியில் சேர்த்துக்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து மன்சூர் அலிகான் அளித்த பேட்டியில், “பிரதமர் மோடி விஷப்பாம்பை விட மோசமாக பிரிவினைவாதத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தும் விதத்தில் பேசி வருகிறார். முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங்கின் கால்தூசிக்கு மோடி ஈடாக மாட்டார்.

மன்மோகன் சிங் கருணை அடிப்படையில் பேசியதை, ராஜஸ்தானில் எழை மக்கள் முன்பாக விஷம் கக்கும் விதமாக கீழ்த்தரமாக பேசியுள்ளார். தேர்தல் ஆணையத்திற்கு  திராணி இருந்தால் மோடியை கைது செய்து திகார் சிறையில் அடைக்க வேண்டும். அதன் பிறகு தான் தேர்தல் நடத்த வேண்டும்.

காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான கடிதம் கொடுத்துள்ளேன். முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன். மீண்டும் தாய் கட்சியில் இணைய உள்ளேன். இதன்மூலம் எனது ‘இந்திய ஜனநாயக புலிகள்’ கட்சியை காங்கிரஸ் உடன் இணைத்து அதன் உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளனர்” என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை மறுப்பு!

ஆனால், தேர்தல் நேரம் என்பதால் காங்கிரஸ் கட்சியில் இணைய முடியாது எனவும், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மன்சூர் அலிகான் கடிதம் ஏற்றுக் கொள்ளப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

ஆசையுடன் கட்சியில் இணைவதற்கு வந்த மன்சூர் அலிகானை தேர்தலை காரணமாக வைத்து மறுப்பு தெரிவித்து விட்டாலும், அதற்கு பின்னர் வேறு சில காரணங்கள் உள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, நடிகர் மன்சூர் அலிகான், மனதில் பட்டதை அப்படியே பேசக்கூடியவர். சமீபத்தில் லியோ திரைப்படத்தில் தன்னுடன் நடித்த சக நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக போராட்டம் வெடித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றமே கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில், மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் அவரை சேர்த்து கொண்ட பிறகு, அவர் சர்ச்சையாக ஏதும் பேசினால் அது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேசுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்பதால் அவரை கட்சியில் சேர மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் அக்கட்சியின் நிர்வாகிகள்.

கிறிஸ்டோபர் ஜெமா

பதட்டத்துடன் வாக்களித்த விஜய்… காரணம் என்ன தெரியுமா?

ஆவணங்களை அமலாக்கத் துறைக்கு தர முடியாது : விஜயபாஸ்கர் வழக்கில் வாதம்!