நாடாளுமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 26 அன்று நடைபெறுகிறது. இந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில்… தென் கர்நாடக பகுதியைச் சேர்ந்த 14 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது.
கர்நாடக நாடாளுமன்றத் தேர்தல்களில் கடந்த 4 தேர்தல்களில் பாஜகவே ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. காங்கிரசால் இரட்டை இலக்க எண்ணிக்கையைக் கூட தொட முடியவில்லை.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 28 இல் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. மற்றொரு தொகுதியில் வெற்றி பெற்ற குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இப்போது பாஜக கூட்டணியில் உள்ளது.
ஆனால், 2023 இல் நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் தோல்வியை சந்தித்தது.
எனவே கர்நாடகாவில் இப்போது நடைபெறும் தேர்தல், கடும் போட்டி மிகுந்த ஒன்றாக நாடு முழுதும் பார்க்கப்படுகிறது. மேலும் தென்னிந்தியாவில் பாஜக செல்வாக்கு பெற்ற ஒரே மாநிலமாக கர்நாடகா இருப்பதால் அதை விட்டுவிடக் கூடாது என்று பாஜக கடுமையாக வேலை செய்து வருகிறது.
லிங்காயத்து-ஒக்கலிகர் கையில் கர்நாடகா
கர்நாடக தேர்தலைப் பொறுத்தவரை வெற்றி தோல்வியில் சாதி ரீதியான கணக்குகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கர்நாடக அரசியலில் இரண்டு சமூகங்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஒக்கலிகர் மற்றும் லிங்காயத் ஆகியவையே அந்த சமூகங்கள். கர்நாடகாவில் மொத்தமுள்ள எம்.எல்.ஏ மற்றும் எம்.பி சீட்டுகளில் இந்த இரண்டு சமூகங்களைச் சேர்ந்தவர்களே 50% சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை வைத்திருக்கிறார்கள். இந்த இரண்டு சமூகங்களும் சேர்ந்து கர்நாடகாவின் மக்கள் தொகையில் 20-25% இருக்கிறார்கள்.
கர்நாடகாவில் கவுடா, ஹெக்டே உள்ளிட்ட சாதிகள் இந்த ஒக்கலிகர் வகையைச் சேர்ந்தவையே. இவர்கள் தென் கர்நாடகா பகுதியில் அதிகமாக இருக்கிறார்கள். கர்நாடகாவின் முதல்கட்டத் தேர்தல் தென் கர்நாடகா பகுதியிலேயே நடப்பதால் ஒக்கலிகர் சமூகத்தின் வாக்குகளை யார் பெறுவது என்ற போட்டியே இப்போது கர்நாடகாவில் அதிகம் இருக்கிறது.
இரண்டாவதாக லிங்காயத்துகள். வட மற்றும் மத்திய கர்நாடகாவில் லிங்காயத்துகள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அடுத்தகட்டமாக கர்நாடகாவில் நடைபெறும் தேர்தல் லிங்காயத்துகளை மையப்படுத்தி இருக்கும். பட்டியலினத்தவர் 19.5% சதவீதமும், முஸ்லீம்கள் 16% சதவீதமும், ஓ.பி.சி 20% சதவீதமும் இருந்தாலும் அரசியலில் இவர்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே இருக்கிறது.
பாஜக சார்பாக இந்த தேர்தலில் போட்டியிடும் 25 தொகுதிகளில் 9 வேட்பாளர்கள் லிங்காயத்துகள் மற்றும் 3 வேட்பாளர்கள் ஒக்கலிகர்கள். அதேபோல் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் 6 வேட்பாளர்கள் ஒக்கலிகர்கள், 5 வேட்பாளர்கள் லிங்காயத்துகள். மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டியிடும் 3 தொகுதிகளில் 2 வேட்பாளர்கள் ஒக்கலிகர்கள்.
நீண்டகாலமாக கர்நாடக அரசியலில் ஒக்கலிகர் சமூகத்தினர் பெரும்பான்மையாக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள். லிங்காயத்துகள் கணிசமாக பாஜக ஆதரவாளர்களாக இருந்திருக்கிறார்கள்.
இந்த தேர்தலில் காங்கிரசில் டி.கே.சிவகுமாருக்கு இருக்கும் பாப்புலாரிட்டியின் காரணமாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி பாஜகவுடன் கூட்டணியில் இணைந்துவிட்டதாலும், ஒக்கலிகர்கள் பெரும்பான்மையாக காங்கிரசுக்கு ஆதரவளிக்கவே வாய்ப்பு இருப்பதாக கர்நாடக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். 2023 சட்டமன்றத் தேர்தலில் ஒக்கலிகர் சமூகத்தின் பெரும்பான்மை வாக்குகளை காங்கிரசே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேவே கவுடாவின் எமோஷனல் முயற்சி!
அதேசமயம் ஒக்கலிகர் சமூகத்தின் வாக்குகளைப் பெற மதச்சார்பற்ற ஜனதா தளம் பல கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வாக்கு சதவீதம் பெரும் சரிவை சந்தித்ததால் இந்த தேர்தலை வாழ்வா சாவா தேர்தல் என்பதைப் போலவே அக்கட்சி பார்க்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவே கவுடாவும், அவரது மகனான குமாரசாமியும் இதுதான் தேவே கவுடாவின் கடைசி தேர்தலாக இருக்கும், இது உங்களுக்கு அவரை ஆதரிக்க கடைசி வாய்ப்பு என்று எமோஷனலாக வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
ஆனால் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனது பெயருக்கு நேர் எதிராக லவ் ஜிகாத், ராமர் கோவில், மோடியின் கேரண்ட்டி என்று பிரச்சாரங்களை செய்து வருகிறது.
பட்டியல் சமுதாய வாக்குகள் யாருக்கு?
பட்டியலினத்தைப் பொறுத்தவரை கர்நாடகாவில் SC left, SC right என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. SC left பிரிவில் இருக்கும் தலித்துகள் மிகவும் நலிவடைந்த பிரிவினராகவும், SC right பிரிவில் இருக்கும் தலித்துகள் கொஞ்சம் மேம்பட்ட பிரிவினராகவும் இருக்கிறார்கள். பட்டியலின வாக்குகளில் SC Right வாக்குகள் பெரும்பான்மையாக காங்கிரசுக்கும், SC left வாக்குகள் பெரும்பான்மையாக பாஜகவுக்கும் பிரியும் என்று கர்நாடக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அமைச்சர்கள் மகாதேவப்பா, பரமேஷ்வரா, பிரியங் கார்கே உள்ளிட்டோர் SC Right பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் வியூகத்தைப் பொறுத்தவரை, கடந்த காலங்களில் லிங்காயத்து வாக்குகளைப் பெறுவதற்காக லோக் சக்தி கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தது பாஜக. இப்போது அந்த வாக்கு வங்கி பாஜகவிற்கே மாறிவிட்டது. அடுத்ததாக பழைய மைசூர் பகுதிகளில் ஒக்கலிகர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. வட கர்நாடகாவில் லிங்காயத் வாக்குகளைப் பெற முடிந்த பாஜக, தென் கர்நாடகாவில் ஒக்கலிகர் வாக்குகளைக் குறிவைத்தே குமாரசாமியுடன் கூட்டணி வைத்துள்ளது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. இதனைத் தாண்டி கடற்கரை கர்நாடகா பகுதிகளில் சமீப காலங்களில் பாஜக மிகவும் வலுப்பெற்றிருக்கிறது.
வட கர்நாடகாவைப் பொறுத்தவரை லிங்காயத்துகள் தவிர்த்து குருபா மற்றும் ஈடிகா ஆகிய ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமய்யா குருபா சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு அச்சமூகத்தினர் மத்தியில் இருக்கும் ஆதரவின் காரணமாக குருபா சமூகத்தின் பெரும்பான்மை வாக்குகள் காங்கிரசுக்கே செல்லும் என்று கணிக்கப்படுகிறது. மற்ற சமூகத்தினரின் வாக்குகள் பெரும்பான்மையாக பாஜகவிற்கே செல்லும் என்கிறது கர்நாடக அரசியல் வட்டாரங்கள். லிங்காயத் சமூகத்தில் எடியூரப்பா குடும்பத்தினர் பெரும் செல்வாக்கு செலுத்துவதால் பாஜக பெரும் நம்பிக்கையுடன் களத்தில் நிற்கிறது.
கர்நாடக தேர்தலைப் பொறுத்தவரை கடும் போட்டி நிலவுவதால் கருத்துக்கணிப்புகள் வெவ்வேறு முடிவுகளைச் சொல்கின்றன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜகவிற்கு சாதகமாக இருக்கின்றன. ஆனால் கடந்த 2023 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெறும், எத்தனை சதவீதம் வெற்றி பெறும் என்று சரியான முடிவை கருத்துக்கணிப்பில் சொல்லிய ஈடினா(eedina) ஊடகத்தின் கருத்துக்கணிப்பு இந்த முறை காங்கிரசுக்கு சாதகமான முடிவை சொல்லியிருக்கிறது. 13 முதல் 18 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும், 10 முதல் 13 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று ஈடினா கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக பார்த்தோமென்றால் கடந்த தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றதால், கர்நாடகாவில் காங்கிரசுக்கு கூடுதலாக கிடைக்கும் ஒவ்வொரு தொகுதியும் அவர்களுக்கு ப்ளஸ் தான். பாஜக இழக்கும் ஒவ்வொரு தொகுதியும் அவர்களுக்கு மைனஸ் தான் என்பது கவனிக்கத்தக்கது.
விவேகானந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நயினார் நாகேந்திரன் மீது ED விசாரணை கோரிய மனு : உயர் நீதிமன்றம் உத்தரவு!
கேரளா, கர்நாடகா… தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது!
ராகுல் vs பினராயி: கேரளாவில் நடக்கும் போர்…கிறித்தவர் வாக்குகளை குறிவைக்கும் பாஜக!