முன்னாள் முதல்வர், நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோருக்குக் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 15 முக்கிய நபர்களுக்குக் கொலை மிரட்டல் வந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் இந்த 15 பேருக்குக் கொலை மிரட்டல் வந்துள்ளது.
அம்மாநிலத்தைச் சேர்ந்த நிஜகுணாந்தன சுவாமி, முன்னாள் பஜ்ரங்தள் தலைவர் மகேந்திர குமார், நடிகர் சேதன் குமார், பி.டி.லலிதா நாயக், மகேஷ் சந்திரகுரு, பேராசிரியர் பகவான், முன்னாள் முதல்வர் குமாரசாமி, நடிகர் பிரகாஷ் ராஜ், பத்திரிகையாளர் அக்னி ஸ்ரீதர் மற்றும் பிருந்தா காரத் உள்ளிட்டோருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் வரும் ஜனவரி 29ஆம் கொல்லப்படுவார்கள் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சிக்கு எதிராக இவர்கள் பேசியதாகக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.
ஒரே சமயத்தில் 15 பேருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாகவும் அக்கடிதம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் கர்நாடக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் குமாரசாமிக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். தற்போதைய முதல்வர் எடியூரப்பா பதவியில் இல்லாத காலத்தில் அவருக்கு எந்தவிதமான பாதுகாப்பு வழங்கப்பட்டதோ அதுபோல இசட் பிரிவு பாதுகாப்பு, முன்னாள் முதல்வர்களான சித்தராமையா மற்றும் குமாரசாமி ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. வேண்டுமானால் குமாரசாமிக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு வலியுறுத்தப்படும். எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
�,