கடலூர் மாவட்டத்தில் மீண்டும் ஏற்பட இருந்த சாதி கலவர அபாயத் தீயை சாதுர்யமாக கையாண்டு அணைத்துள்ளது காவல்துறை.
25 வருடங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் சாதி கலவரம் பற்றி எரிந்தபோது அப்போதிருந்த எஸ்.பி.க்கள் சைலேந்திரபாபு மற்றும் டேவிட்சன் தேவாசீர்வாதம் இருவரும் இரும்புக்கரம் கொண்டு அமைதிப்படுத்தினார்கள்.
அதன் பிறகு பெரிய அளவில் மாவட்டத்தில் கலவரம் இல்லை. தேர்தல் நேரத்தில் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரச்சினைகள் ஏற்படும்.
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி குள்ளஞ்சாவடி அருகில் உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அம்பேத்கர் சிலை மீது நள்ளிரவில் நான்கு பேர் கொண்ட டீம் பெட்ரோல் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் மாவட்டத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
என்ன மோட்டிவ், சாதி கலவரத்திற்கு சதியா? என விசாரணையில் இறங்கினோம்.
இதுதொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது,
“அம்பலவாணன் பேட்டை ஊராட்சியில் தலித் மக்கள் வாழும் பகுதியில் பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அருகில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
ஏப்ரல் 23 இரவு 11.45 மணியளவில் இரண்டு பைக்கில் வந்த நான்கு இளைஞர்கள் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் பாட்டில் வெடிகுண்டு வீசியுள்ளனர். அது தவறி சிலையின் அருகே இருந்த பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் விழுந்து வெடித்துள்ளது.
சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், யாழ்திலீபன், கௌசல்யா ஆகியோர் பைக்கில் வந்தவர்களை அடையாளம் கண்டு போலீசிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்ட போலீஸார் பலரும் திருவண்ணாமலை கிரிவல பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்தனர். என்றாலும் எஸ்.பி. ராஜாராம் ஸ்டேஷனில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை உடனடியாக ஸ்பாட்டுக்கு அனுப்பினார். சம்பந்தப்பட்டவர்களை இரவோடு இரவாக கைது செய்தனர் போலீஸார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கிருஷ்ணனை பிடித்து விசாரித்த போலீஸார், பின்னர் சதீஷ், வெற்றி, விஜயராஜ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்” என்றனர்
கிருஷ்ணன் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், “ஒரு மாதத்திற்கு முன்பு குள்ளஞ்சாவடியில் உள்ள டீ கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தேன். அப்போபோது, தலித் சமூகத்தைச் சேர்ந்த அம்பலவாணன்பேட்டை அப்பு நான் உட்கார்ந்திருந்த ஸ்டூலை இழுத்ததால் தவறி கீழே விழுந்து விட்டேன்.
அப்போது கோபத்தில் அப்புவை அடித்தேன். அந்தப் பகையை மனதில் வைத்துக்கொண்டு, அவர்கள் (தலித்) வசிக்கும் பகுதி வழியாக பைக்கில் சென்றபோது என்னை வழிமறித்து, நான்கு பேர் சேர்ந்து அடித்துவிட்டனர். அப்போதே காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு பிரச்சினை பெரிதாக வேண்டாம் என்று இரு தரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
ஏப்ரல் 23 ஆம் தேதி இரவு ஊர் பக்கத்தில் நான் சதீஷ், வெற்றி, விஜயராஜ் நான்கு பேரும் மது அருந்தினோம். அப்போது, அப்பு என்னை அடித்தது பற்றி மன வருத்தத்துடன் என் நண்பர்களிடம் பேசிக்கொண்டிந்தேன்.
அப்புவை சும்மா விடக்கூடாது என்று பெட்ரோல் வெடிகுண்டு வீச முடிவு செய்தோம். டூ வீலரில் இருந்து ஒரு குவாட்டர் பாட்டிலில் பெட்ரோல் பிடித்தோம். பின்னர் அதில் திரி வைத்து பெட்ரோல் குண்டை ரெடி செய்தோம். இரண்டு பைக்கில் நான்கு பேர் சென்று அம்பேத்கர் சிலை மீது வீசினோம், ஆனால், பாட்டில் பக்கத்து பில்டிங்கில் விழுந்து வெடித்தது” என்று கிருஷ்ணன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
டீக்கடையில் தனிப்பட்ட அப்பு என்பவர் மீதான தனது கோபத்துக்கு பழி வாங்க அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசும் அளவுக்கு சென்றிருப்பதன் காரணம் அம்பேத்கரை பற்றிய அறியாமைதான் என்று நொந்துகொள்கிறார்கள் போலீஸார்.
இதுதொடர்பாக விசிக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் அறிவுடை நம்பியிடம் நாம் பேசியபோது, “சாதி வெறி இருந்தால் சமுதாயம் சீரழிந்து விடும். அம்பேத்கர் சிலை மீது வெடிகுண்டு போடுவது எவ்வளவு பெரிய கேவலம். உடனடியாக காவல் துறை நடவடிக்கை எடுத்ததால் பெரும் கலவரம் தவிர்க்கப்பட்டுள்ளது” என்றார்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கொளுத்தும் வெயில்… வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஆட்சியர் அறிவுறுத்தல்!
நயினார் நாகேந்திரன் மீது ED விசாரணை கோரிய மனு : உயர் நீதிமன்றம் உத்தரவு!