Crew: தபு, கரீனா, க்ரிதி சனோனின் நடிப்பு ஈர்க்கிறதா? – திரை விமர்சனம்!

சினிமா

முழுக்கப் பெண்களை மையமாக வைத்து ஆக்‌ஷன், காமெடி வகைமையில் ஒரு படம் இருந்தால் எப்படியிருக்கும்? 1990, 2000, 2010 என்று வெவ்வேறு காலகட்டத்தில் முன்னணியில் இருந்த நடிகைகள் அதில் இடம்பெற்றுக் கவர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்துவது எந்த வகையில் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும்?

நட்சத்திர ஜொலிப்பை மீறிச் சுவாரஸ்யமான திரைக்கதை அதில் இருக்குமா? இப்படிப் பல கேள்விகளுக்குப் பதில் சொல்லும்விதமாக அமைந்திருக்கிறது இந்திப் படமான ‘க்ரூ’.

தபு, கரீனா கபூர், க்ரிதி சனோன், தில்ஜித் தோசன்ஞ், சாஸ்வதா சாட்டர்ஜி, ராஜேஷ் சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ராஜேஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்தப் படம் எப்படிப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது?

மூன்று பெண்களின் கதை

கீதா சேதி (தபு), ஜாஸ்மின் கோஹ்லி (கரீனா கபூர்), திவ்யா ராணா (க்ரிதி சனோன்) மூவரும் கோஹினூர் ஏர்லைன்ஸில் ஏர்ஹோஸ்டஸ் ஆகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தவிர்த்து ஒரு சூப்பர்வைசர், இரண்டு பெண்கள், ஒரு ஆணும் அந்தக் குழுவில் உண்டு.

பெற்றோரைப் பிரிந்து தாத்தா உடன் வாழும் ஜாஸ்மின், ஆறு மாதங்களாக வீட்டு வாடகை கட்ட முடியாமல், கடனை அடைக்க முடியாமல் தவிக்கிறார். கோவாவில் கணவர் ஒரு ரெஸ்டாரெண்ட் திறக்க விரும்ப, அதற்கு உதவ முடியாத வருத்தத்தில் இருக்கிறார் கீதா.

ஹாட் ஸ்பாட்: விமர்சனம்!

பைலட் ஆவதற்கான பயிற்சியை மேற்கொண்ட பிறகும், தனது பெற்றோர் வாங்கிய கடனை அடைப்பதற்காக ஏர் ஹோஸ்டஸ் ஆகப் பணியாற்றுகிறார் திவ்யா. அவர்களது குழுவில் பணியாற்றும் பலரும் அது போன்ற பிரச்சனைகளில் சிக்கி அல்லாடுகின்றனர்.

கோஹினூர் ஏர்லைன்ஸ் பாக்கி வைத்துள்ள சம்பளம் மற்றும் இதர பணிப்பலன் தொகையை வழங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்பதே அவர்களது எண்ணம். ஒருநாள் கீதா, ஜாஸ்மின், திவ்யா மூவரும் பணியில் இருக்கும்போது, உடன் பயணிக்கும் சூப்பர்வைசர் மாரடைப்பினால் இறந்து போகிறார்.

முதலுதவி அளிக்க முயற்சிக்கும்போது, அவரது உடலில் தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருப்பது தெரிய வருகிறது. அதனைத் திருடலாம் என்று சொல்கிறார் ஜாஸ்மின்; ஆனால் கீதாவும் திவ்யாவும் அதற்குச் சம்மதிப்பதில்லை.

விமான நிலையத்தில் அந்த நபரின் உடலை கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைப்பற்ற, விஷயம் ஊடகங்களில் வெளியாகிறது. இந்தச் சூழலில், கோஹினூர் நிறுவனம் திவால் ஆகப் போவதாகச் செய்திகள் வருகின்றன.

தங்க கடத்தல் 

ஆனால், அதன் உரிமையாளர் விஜய் வாலியாவோ (சாஸ்வதா சாட்டர்ஜி) ‘அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை’ என்று ஊடகங்களில் விளக்கம் தெரிவிக்கிறார். என்றாலும், அந்த தகவலைக் கேள்விப்பட்டதுமே நாயகிகள் மூவரும் அதிர்ச்சியடைகின்றனர். அந்த சூப்பர்வைசர் போலவே தாமும் தங்கக் கடத்தலில் ஈடுபடத் திட்டமிடுகின்றனர்.

இறந்துபோனவரின் மொபைலை திருடிய ஜாஸ்மின், அதன் வழியே அவருக்கு தங்கம் தந்தவர் தங்களது நிறுவனத்தின் மனிதவளப் பிரிவில் பணியாற்றுபவர் என்பதைக் கண்டறிகிறார். அவரை மிரட்டி, தாங்களும் அந்த தங்கத்தை எடுத்துச் சென்று பணம் சம்பாதிக்க முடிவு செய்கின்றனர்.

தங்கத்தை கட்டிகளாக அல்லாமல் உருண்டையாக உருக்கி, அதனை சாக்லேட் பாக்ஸில் அடைத்து எடுத்துச் செல்கின்றனர். அடுத்தடுத்த பயணங்களை அவ்வாறு மேற்கொண்ட பிறகு, அவர்கள் கைவசம் கணிசமாகப் பணம் சேர்கிறது.

Aadujeevitham: படைத்த புதிய சாதனை… யாராலும் தடுக்க முடியாது போல!

ஆனால், யாரோ ஒரு ஏர் ஹோஸ்டஸ் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஒருநாள் திவ்யா, கீதா, ஜாஸ்மின் மூவரையும் கைது செய்கின்றனர் கஸ்டம்ஸ் அதிகாரிகள். அவர்கள் வசம் தங்கம் இல்லாத காரணத்தால் மூவரும் விடுவிக்கப்படுகின்றனர். ஆனாலும் ஊடகங்களில் அவர்களது பெயர்கள் வெளியாகின்றன.

கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு தகவலைச் சொன்னது யார் என்று மூவரும் விசாரிக்கும்போது, அந்த நபரைச் சுற்றி வளைக்கின்றனர். அதன்பிறகே, தாங்கள் கடத்திய தங்கம் எங்கிருந்து வந்தது என்ற உண்மை அம்மூவருக்கும் தெரிய வருகிறது. தங்களது விமான நிறுவனம் திவால் ஆனதற்கும் அந்த தங்கத்திற்குமான தொடர்பு தெரிகிறது.

அதன்பின்னர், தங்களால் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்ட தங்கத்தைத் திருட அம்மூவரும் திட்டமிடுகின்றனர். அதில் அவர்கள் வெற்றி கண்டார்களா? என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

கவர்ச்சி தாரகைகள்

‘க்ரூ’ படத்தின் பெரும்பாலான காட்சிகளில் தபு, கரீனா, க்ரிதி மூவரும் சேர்ந்தே தென்படுகின்றனர். பாத்திர வடிவமைப்பு மட்டுமல்லாமல், அவர்கள் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட காட்சிகளும் கூட சம அளவிலேயே உள்ளன. அதனால், இப்படம் ’மல்டி ஸ்டாரர்’ அந்தஸ்தை எளிதில் பெறுகிறது. யாருக்கு அதிக முக்கியத்துவம் என்ற கேள்விக்கே இடமில்லாமல் போகிறது.

க்ரிதி சனோனுக்கு போட்டியாகப் பல காட்சிகளில் கரீனா கபூரும், சில காட்சிகளில் தபுவும் கவர்ச்சியாகக் காட்சி அளிக்கின்றனர். அவர்களுக்கான வசனங்களிலும் கூட, மூவரது நகைச்சுவை உணர்ச்சிக்கு சம அளவில் மதிப்பளிக்கப்பட்டுள்ளது. அவர்களது நடிப்பு ஒட்டுமொத்த திரைக்கதையையும் தாங்கிப் பிடிக்கிறது.

இப்படத்தில் க்ரிதியின் ஜோடியாக தில்ஜித் தோசஞ்ச், தபு ஜோடியாக கபில் சர்மா ‘கௌரவ’ தோற்றத்தில் தலை காட்டியிருக்கின்றனர். என்னதான் இக்கதை கற்பனையானது என்று ‘டிஸ்க்ளெய்மர்’ வாசித்தாலும், இப்படத்தில் குறிப்பிடும் தொழிலதிபர் யார் என்பதை சாஸ்வதா சாட்டர்ஜி ஏற்ற விஜய் வாலியா எனும் பாத்திரப் பெயர் அனைத்தையும் புட்டுப் புட்டு வைத்துவிடுகிறது.

IPL 2024: பஞ்சாபை பஞ்சு பஞ்சா பிச்சுப்போட்ட சின்ன பையன்… போட்டிபோட்டு தேடும் ரசிகர்கள்!

ராஜேஷ் சர்மாவும் அவரது மனைவியாக நடித்தவரும் இரண்டொரு காட்சிகளில் தலைகாட்டி நம்மைச் சிரிக்க வைக்கின்றனர். விமானம், ஹோட்டல் அறைகள், முன்னணி பாத்திரங்களின் வீடுகளைத் திரையில் பளிச்சென்று காட்டிய வகையில் அசர வைக்கிறது திஷா டேயின் தயாரிப்பு வடிவமைப்பு.

பளிச்சென்று திரை முழுவதும் வெளிச்சம் பரவி நிற்க, ஒவ்வொரு காட்சியையும் ‘பளிங்குக் கல்’ போன்று செதுக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அனுஜ் ராகேஷ் தவான். மனன் சாகரின் படத்தொகுப்பானது முன்பாதியில் பல காட்சிகளின் நீளத்தை ‘ட்ரிம்’ செய்து திரைக்கதையைச் செறிவாக்கியுள்ளது.

டிஐ, விஎஃப்எக்ஸ், சவுண்ட் எபெக்ட்ஸ், ஆடை வடிவமைப்பு போன்ற நுட்பங்கள் திரையில் இப்படம் எப்படி வெளிப்பட வேண்டுமென்பதைத் தீர்மானிக்கும் வகையில் அமைந்துள்ளன. தபு, கரீனா இருவரும் சில காட்சிகளில் அதீத ஒப்பனையுடன் தென்பட்டிருப்பது திரையில் துருத்தலாகத் தெரிகிறது.

தில்ஜித், பாதுஷா, ராஜ் ரஞ்சோத், விஷால் மிஷ்ரா, அக்‌ஷய் -ஐபி, பார்க் – ரோகித் இப்படத்தில் பாடல்களுக்கு இசையமைத்திருக்கின்றனர். ’சோளி கே பீச்சே க்யா ஹை’, ‘சோனா இத்னா சோனா ஹை’ பாடல்களின் ரீமிக்ஸ் வெர்ஷன் நம்மை ஆட்டுவிக்கின்றன. இதர பாடல்கள் ஓகே ரகம்.

அதனை ஈடு செய்யும்விதமாக, விறுவிறுப்பான பின்னணி இசை தந்து அசத்தியிருக்கிறார் ஜான் ஸ்டூவர்ட் எடூரி. இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை நிதி மெஹ்ரா, மெகுல் சூரி இருவரும் இணைந்து எழுதியிருக்கின்றனர்.

விமான நிறுவனம் திவால், பணியாளர்கள் வேலை நிறுத்தம், தங்கம் கடத்தல், பணம் உள்ளிட்ட நிறுவன சொத்துகள் மாயம் போன்ற விஷயங்கள் இப்படத்தின் கதையோடு ரசிகர்களை எளிதாகப் பிணைக்கின்றன.

கிளைமேக்ஸ் காட்சியை மனதில் கொண்டு, யதார்த்தத்திற்கு முக்கியத்துவம் தராமல் ‘சினிமேட்டிக் ட்ரீட்மெண்ட்’டை பயன்படுத்தியிருக்கிறார் ராஜேஷ் கிருஷ்ணன். அது பெருமளவு பயனளித்திருக்கிறது. ‘லூட்கேஸ்’ என்ற காமெடி, ஹெய்ஸ்ட், த்ரில்லர் வகைமை படத்தைத் தந்து இவர் ஏற்கனவே நம்மை மகிழ்வித்திருக்கிறார்.

ஒருமுறை பார்க்கலாம்

ஆங்கிலத்தில் வெளியான ‘சார்லீஸ் ஏஞ்சல்ஸ்’ போன்ற ஆக்‌ஷன், ஹெய்ஸ்ட், த்ரில்லர் படங்களைப் பார்த்து ரசித்தவர்களுக்கு, இப்படம் நிச்சயம் நல்லதொரு பொழுதுபோக்கு அனுபவத்தைத் தரும். அதேநேரத்தில் இதனை ‘கிளாசிக்’ ஆகக் கொண்டாட முடியாது.

அந்த தெளிவு இருக்குமானால் தபு, கரீனா, க்ரிதியின் அழகை பார்த்தவாறே இந்த ‘க்ரூ’வின் பயணத்தை ஒரு முறை அண்ணாந்து ரசிக்கலாம்!

-உதய் பாடகலிங்கம் 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Rain Update: கொளுத்தும் ‘கோடை’ வெயிலுக்கு இதமாக… ‘ஜில்லுன்னு’ அப்டேட் கொடுத்த வானிலை மையம்!

கலைஞர் நினைவிடத்திற்கு சீல் வைக்க வேண்டும் : அதிமுக கோரிக்கை!

காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ரூ.1,740 கோடி அபராதம்: ஐடி நோட்டீஸ்!

CSK Vs DC: டெல்லிக்கு எதிராக களமிறங்கும் இளம்வீரர்… தோனிக்கு என்னாச்சு?

+1
2
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *