“வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு ஒரு கட்சியில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால், எந்த ஒரு மதத்தை போற்றும் கட்சியுடன் இணைய எனக்கு விருப்பமில்லை” என்று திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி அதன் பிறகு ஹீரோவாக பல மெகா பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தவர் நடிகர் சத்யராஜ். கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் சத்யராஜ் “பாகுபலி” படத்தில் “கட்டப்பா” கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலக புகழ் பெற்ற நடிகராக மாறினார். இன்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் மிக பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவரது மகன் சிபிராஜ் நடிகராக உள்ளார். மகள் திவ்யா சத்யராஜ், இந்திய ஊட்டச்சத்து நிபுணராவார். மேலும் இவர் மகிழ்மதி இயக்கத்தின் நிறுவனராக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றார்.
இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஒரு கட்சியிலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ள தகவல் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது என்று சில பத்திரிக்கை நண்பர்களிடம் கூறி இருந்தேன்.
அதன் பிறகு என்னை சந்திக்கும் போதெல்லாம் நான்கு கேள்விகள் அடிக்கடி கேட்கிறார்கள். நீங்கள் எம்பி ஆவதற்காக அரசியலுக்கு வருகிறீர்களா? ராஜ்ய சபா எம்பி ஆக ஆசையா? அமைச்சர் பதவி மீது ஆர்வம் உள்ளதா? சத்யராஜ் சார் உங்களுக்காக பிரச்சாரம் செய்வாரா? போன்ற கேள்விகள் தான் அடிக்கடி கேட்கப்படுகிறது.
அதற்கு எனது பதில், பதவிக்காகவோ தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவோ அரசியலுக்கு நான் வர வேண்டும் என்று எண்ணவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வர நினைக்கிறேன். நான் களப்பணிகள் செய்ய ஆரம்பித்து சில வருடங்கள் ஆகிறது.
மகிழ்மதி இயக்கம் என்ற அமைப்பை மூன்று வருடங்களுக்கு முன் தொடங்கினேன். அதன் மூலம் தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்கி வருகின்றோம். நான் தனிக்கட்சி தொடங்கப் போவதில்லை.
மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு ஒரு கட்சியில் இருந்து அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால், எந்த ஒரு மதத்தை போற்றும் கட்சியுடன் இணைய எனக்கு விருப்பமில்லை.
ஏனென்றால், எனக்கு சாதி மதத்தில் நம்பிக்கை இல்லை. எந்த கட்சியில் இணைய போகிறேன் என்பதை தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பேன்.
நடிகர் சத்யராஜ் மகளாகவும் ஒரு தமிழ் மகளாகவும் தமிழகத்தின் நலன் காக்க உழைப்பேன்” என்று திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பே திவ்யா சத்யராஜ் அரசியலில் நுழையப் போகிறார் என்று தகவல்கள் வெளியானது. அதுவும் அவர் தி.மு.க-வில் இணைவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், அதன் பிறகு இதுவரை எந்த கட்சியிலும் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோடி நாளை சென்னை வருகை: பயணத்திட்ட விவரங்கள் இதோ!
IPL 2024 : ரூ.3.60 கோடிக்கு வாங்கிய குஜராத் அணி வீரர் விபத்தில் சிக்கினார்!