தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதை அடுத்து முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகத்திற்கு சீல் வைத்து, ஒலி ஒளி காட்சி அமைப்பை நிறுத்த வேண்டும் என்று அதிமுக சார்பில் இன்று (மார்ச் 31) மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளரும், கட்சியின் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான பாபு முருகவேல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, “கலைஞர் என்று அன்புடன் அழைக்கப்படும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு ஆளுங்கட்சியினர் மெரினா கடற்கரையில் கலைஞர் உலகம் என்ற பெயரில் நினைவு அருங்காட்சியகம் அமைத்துள்ளனர். இந்த இடம் மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
இங்கு தினமும் சுமார் 5,000 பேர் வந்து சென்று பார்க்கும் வகையில் அருங்காட்சியகத்தில் கலைஞரின் திரைப்படம், இலக்கியம் மற்றும் அரசியல் வாழ்க்கை ஆகியவை பொது மக்களுக்காக காணொளி காட்சிப்படுத்தப்படுகிறது.
இதில் கலைஞரின் அரசியல் பயணம் மட்டுமின்றி, திமுகவின் கட்சிக் கொடி, சின்னம், சித்தாந்தம் என ஆளும் கட்சியையும் ஊக்குவிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
ஒரு அக்கறையுள்ள குடிமகன் என்ற முறையில், இந்த விதி மீறல்களை முன்னிலைப்படுத்துவதும், மக்களவை 2024 தேர்தலையொட்டி நடத்தை விதிகள் விதிக்கப்பட்டு அமலில் உள்ளதால் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல் சூழலை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நான் வலியுறுத்துகிறேன்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பெயர், சின்னம், சிலை, புகைப்படம், வீடியோ போன்றவை ஏதேனும் அரசியல் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் அடையாளமாக இருந்தால், தேர்தல் நடத்தை விதிகளின்படி அவை அகற்றப்பட வேண்டும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.
ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக, தேர்தல் செயல்முறையின் புனிதத்தை நிலைநிறுத்துவது மற்றும் அனைத்து வேட்பாளர்களுக்கும் பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கடைபிடிப்பதை உறுதி செய்வது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்.
எனவே, இந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரித்து, மீறல்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், கலைஞர் நினைவிடம் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு, தமிழக அரசின் கீழ் வருகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்படும் வரை கலைஞர் அருங்காட்சியகத்தை மூடி சீல் வைக்க வேண்டும், திமுகவின் சின்னத்தை பிரதிபலிப்பது போல் உள்ள ஒளி அமைப்பையும் நிறுத்த சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், தேர்தல் ஆணையம் தனது கண்காணிப்பு முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் மற்றும் தேர்தல் நடத்தை விதிகளின் எதிர்கால மீறல்களைத் தடுக்க கடுமையான அமலாக்க வழிமுறைகளை செயல்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
நமது தேசத்தின் ஆட்சியின் அடிப்படைக் கல்லாக இருக்கும் ஜனநாயக விழுமியங்கள் மற்றும் கொள்கைகளைப் பாதுகாப்பது இன்றியமையாததாகும்.
தேர்தல் ஆணையம் இவ்விவகாரத்தில் தகுந்த பரிசீலனை செய்து, இது தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ரூ.1,740 கோடி அபராதம்: ஐடி நோட்டீஸ்!
CSK Vs DC: டெல்லிக்கு எதிராக களமிறங்கும் இளம்வீரர்… தோனிக்கு என்னாச்சு?