IPL 2024: பஞ்சாபை பஞ்சு பஞ்சா பிச்சுப்போட்ட சின்ன பையன்… போட்டிபோட்டு தேடும் ரசிகர்கள்!

விளையாட்டு

ஜெயிக்க வேண்டிய போட்டியை பஞ்சாப் கிங்ஸ் அணி தோற்பதற்கு, 21 வயது இளம்வீரர் ஒருவர் காரணமாக இருந்துள்ளார்.

நேற்று (மார்ச் 3௦) ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, நிக்கோலஸ் பூரான் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொண்டது.

சொந்த மண் சாதகத்துடன் களமிறங்கிய லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

குயிண்டன் டி காக் (55), நிக்கோலஸ் பூரான் (44), குருனால் பாண்டியா (43*) ஆகியோரின் அதிரடியால் 2௦ ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை அந்த அணி குவித்தது.

தொடர்ந்து 2௦௦ ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது.

ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ இருவரும் பந்துகளை நாலாபுறமும் சிதறவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.

11 ஓவர்கள் வரை விக்கெட்டுகள் எதுவும் விழவில்லை. அதோடு பஞ்சாப் அணியும் விக்கெட் இழப்பின்றி 1௦௦ ரன்களை கடந்து அசத்தியது.

இதனால் வெற்றி பஞ்சாப் அணிக்குத் தான் என போட்டியை பார்த்துக் கொண்டிருந்த அனைவருமே நினைத்தனர்.

ஆனால் 12-வது ஓவரின் நான்காவது பந்தில் லக்னோ அணியின் 21 வயது அறிமுக வீரர் மயங்க் யாதவ் வீசிய பந்து, 42 ரன்களில் இருந்த பேர்ஸ்டோவின் விக்கெட்டினை காவு வாங்கியது.

அதுதான் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஆட்டத்தின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

தொடர்ந்து 19 ரன்களில் இருந்த பிரப்சிம்ரன் சிங் 6 ரன்களில் இருந்த ஜிதேஷ் சர்மா ஆகியோரின் விக்கெட்டுகளையும், மயங்க் யாதவ் கைப்பற்றினார்.

அங்கு தொடங்கிய பஞ்சாபின் சரிவினை அதற்குப்பிறகு யாராலும் மீட்க முடியவில்லை.

தன்னுடைய பங்கிற்கு மோசின் கான் 7௦ ரன்களில் இருந்த ஷிகர் தவானையும், அபாயகரமான சாம் கரனை (௦ ) டக் அவுட் செய்தும் வெளியேற்றினார்.

2௦ ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணியால் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பார்முக்கு திரும்பியது.

இந்த போட்டியில் மயங்க் யாதவ் அதிகபட்சமாக 155.8 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி அசத்தினார். அறிமுக போட்டியில் இளம்வீரர் ஒருவரின் அதிகபட்ச சாதனையாக இது உள்ளது.

டெல்லியை சேர்ந்த மயங்க் யாதவ் இதுவரை 51 விக்கெட்டுகளை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி கைப்பற்றி இருக்கிறார்.

காயம் காரணமாக கடந்த சீசனில் லக்னோ அணிக்காக மயங்க் ஆடவில்லை. என்றாலும் களமிறங்கிய முதல் போட்டியிலேயே பயங்கரமாக அசத்தி இருக்கிறார்.

இவரின் வேகத்தை பார்த்த ரசிகர்கள், ”மயங்க் யாதவ் இந்திய அணிக்காக ஆடும் தூரம் தொலைவில் இல்லை. இவரின் வேகம் அசாத்தியமாக உள்ளது”, என வெகுவாக அவரைப் பாராட்டி வருகின்றனர்.

அதோடு கூகுளிலும் மயங்க் யாதவ் குறித்து ரசிகர்கள் போட்டிபோட்டு தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எம்.பி சீட் கிடைக்காமல் போக முயன்றவர்களுக்கு நன்றி: திருநாவுக்கரசர்

ஹாட் ஸ்பாட்: விமர்சனம்!

தேர்தலில் போட்டி… நிர்மலா சீதாராமனுக்கு சுப்பிரமணியன் சுவாமி பதில்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *