திரும்பிப் பார்க்க வைக்கும் திரைப்படம்!
ஒரு திரைப்படத்திற்கான சிறந்த ட்ரெய்லர் எப்படி இருக்க வேண்டும்? சாதாரணமாக அதனைப் பார்க்கத் தொடங்கும் ஒருவர் நிமிர்ந்து உட்காரும் அளவுக்கு இருந்தாலே போதும். அந்த காரணத்திற்காகவே, ட்ரெய்லர் வழியே சர்ச்சைகளை ஏற்படுத்திக் கவனம் ஈர்ப்பதும் காலம்காலமாகத் தொடர்கிறது.
இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள ‘ஹாட் ஸ்பாட்’ படத்தின் ட்ரெய்லர் முழுக்கவே அருவெருக்கத்தக்க வார்த்தைகளும், ஆபாசமான கதாபாத்திர வடிவமைப்பும் நிரம்பி வழிந்தது. அதனைப் பார்த்தவர்கள் யூடியூப்பில் கழுவி ஊற்ற, அந்த கமெண்ட்களை கொண்டே படத்தின் இரண்டாவது ட்ரெய்லரையும் வெளியிட்டது படக்குழு.
அதன் முடிவில், ‘ஒரு புத்தகத்தின் அட்டையை வைத்து அதன் உள்ளடக்கத்தை முடிவு செய்ய வேண்டாம்’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. உண்மையிலேயே ‘ஹாட் ஸ்பாட்’ திரைப்படம் அப்படியொரு சிறப்பான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறதா?
நான்கு கதைகள்!
முதல் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெறுவதற்காக, ஒரு தயாரிப்பாளரிடம் இளம் இயக்குனர் கதை சொல்வதில் இருந்து ‘ஹாட் ஸ்பாட்’ திரைக்கதை தொடங்குகிறது. அதற்கு முன்னதாகவே, ’க்ளிஷே’வான கதைகளைக் கேட்டுக் கேட்டு தயாரிப்பாளர் அயர்ச்சியுற்றதாகக் காட்டப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, நான்கு கதைகளை அடுத்தடுத்து சொல்கிறார் அந்த இயக்குனர்.
முதல் கதையான ‘ஹேப்பி மேரீட் லைஃப்’பில் காதலி தான்யா (கௌரி கிஷன்) வீட்டிற்குத் தனது குடும்பத்தினரைப் பெண் பார்க்க அழைத்துச் செல்கிறார் விஜய் (ஆதித்யா பாஸ்கர்). அதற்கு முன்னதாக, அவர் சிறிதாகக் கண் அயர்கிறார். அப்போது, யதார்த்தத்திற்குப் புறம்பாகப் பெண் வீட்டிற்கு ஒரு ஆண் வாழச் சென்றால் எப்படியிருக்கும் என்று கனவு காண்கிறார். தூக்கத்தில் இருந்து விழித்தபிறகும் அந்த கனவு அவரது சிந்தனையை ஆக்கிரமிக்கிறது. அதன்பிறகு, பெண் பார்க்கும் படலத்தில் விஜய்யின் நடவடிக்கை என்னவாக இருந்தது என்று சொல்கிறது இக்கதையின் மீதி.
’கோல்டன் ரூல்ஸ்’ எனும் இரண்டாவது கதையில் தீப்தியும் (அம்மு அபிராமி) சித்தார்த்தும் (சாண்டி) ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். முதலில் தான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்று பெற்றோரிடம் சொல்லும் தீப்தி, பின்னர் அது பொய் என்று சொல்லித் தனது காதலர் குறித்த விவரங்களை அவர்களிடம் தெரிவிக்கிறார். அதன்பிறகு சித்தார்த்தின் வீட்டிற்குத் தீப்தி செல்கிறார். அங்கு, தீப்தியின் பெற்றோர் குறித்த பேச்சு எழுகிறது. அப்போது அவர் சொல்லும் விவரங்களைக் கேட்டதும் சித்தார்த்தின் பெற்றோர் அதிர்ச்சியடைகின்றனர். தனது சகோதரி மகள் தான் தீப்தி என்று சொல்கிறார் சித்தார்த்தின் தாய். இருவரும் சகோதரன் சகோதரி என்று கூறுகிறார். இறுதியில் தீப்தியும் சித்தார்த்தும் என்ன முடிவெடுத்தார்கள் என்பதோடு அக்கதை நிறைவுறுகிறது.
‘தக்காளி சட்னி’ எனும் மூன்றாவது கதையானது அனிதா (ஜனனி) எனும் பத்திரிகையாளர் திருநங்கைகளின் பாலியல் வாழ்க்கை குறித்து ஆய்வு செய்யச் செல்வதில் இருந்து தொடங்குகிறது. அவரது காதலர் வெற்றி (சுபாஷ் செல்வம்) தான் பார்த்த ஐடி வேலையைப் பறி கொடுக்கிறார். வேறு வேலை கிடைக்காமல் அல்லாடும்போது, ஆண் பாலியல் தொழிலாளி ஆகும் வாய்ப்பினை ஏற்கிறார். அதன் வழியே நன்றாகப் பணம் சம்பாதிக்கிறார். இந்த நிலையில், ஒருநாள் ஒரு பெண்மணியைச் சந்திக்கச் செல்கிறார். அந்த இடத்தில் அவரது தாய் இருக்கிறார். அதன்பிறகு வெற்றி என்ன மனநிலைக்கு ஆளானார் என்றும், அனிதாவுக்கு அவரைப் பற்றிய உண்மை தெரிய வந்ததா என்றும் சொல்கிறது மீதி.
நான்காவது பகுதியான ‘ஃபேம் கேம்’ கதையானது, தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் குழந்தைகள் பங்கேற்பதைப் பற்றிப் பேசுகிறது. ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் ஏழுமலை (கலையரசன்) தனது மகன், மகள் இருவரும் குழந்தைத்தனத்துடன் வளர வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். அவரது மனைவி லட்சுமியோ (சோபியா) தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வருபவர்கள் தனது குழந்தைகளும் புகழ் வெளிச்சம் பெற வேண்டுமென்று நினைக்கிறார். இந்த நிலையில், ஒரு நிகழ்ச்சியில் அவர்களது மகனும் மகளும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதனால், அவர்களது பொருளாதார வாழ்க்கையும் மாறுகிறது.
ஆனால், குழந்தைகள் பெரியமனுஷத்தனத்துடன் நடந்துகொள்வது போன்று அந்த நிகழ்ச்சி அமைந்திருப்பதைக் கண்டு பொருமுகிறார் ஏழுமலை. ‘அது நமக்கு தேவையில்லை’ என்று லட்சுமியிடம் கூறுகிறார். அவர் எண்ணத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு அசம்பாவிதத்தை அந்தக் குடும்பம் எதிர்கொள்கிறது. அதன்பிறகு ஏழுமலை என்ன செய்தார் என்பதோடு அக்கதை முடிவடைகிறது.
சமூகத்தில் ஆண் – பெண் சமநிலை, சகோதர உறவுக்குள் முளைக்கும் காதல், பாலியல் சமத்துவம் ஆகியவற்றை முதல் மூன்று கதைகள் பேசுகின்றன. அவற்றைத் தாண்டி குழந்தைமையைச் சிதைக்கும் இன்றைய ஊடக உலகின் அத்துமீறலைப் பேசும் நான்காவது கதை நம் மனதைத் தொடுகிறது.
இயக்குனரின் சாமர்த்தியம்!
ஒவ்வொரு கதையிலும் சுமார் ஐந்தாறு பிரதான பாத்திரங்கள் என்று வைத்துக்கொண்டால், ’ஹாட் ஸ்பாட்’டில் தலை காட்டியிருக்கும் நடிப்புக் கலைஞர்களின் எண்ணிக்கை நிச்சயம் இரண்டு டஜனை தாண்டும். சிலரது நடிப்பு தொழில்முறை கலைஞர்களைப் போன்று இல்லாமலிருப்பது இப்படத்தின் பலவீனம். ஆனால், அக்குறையை ஈடுகட்டி விடுகின்றனர் மையப் பாத்திரங்களில் நடித்தவர்கள்.
முதல் கதையில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் அவரது மாமனராக நடித்தவரின் நடிப்பு கொஞ்சம் மிகையாக உள்ளது. அதேநேரத்தில், கௌரி கிஷன் அடக்கி வாசித்திருக்கிறார். இரண்டாவது கதையில் அம்மு அபிராமி, சாண்டி மாஸ்டர் நடிப்பு சிறப்பானதாக இருந்தாலும், உடன் நடித்தவர்கள் அதற்கு ஈடு கொடுக்கவில்லை.
மூன்றாவது கதையில் ஜனனி, சுபாஷ் செல்வம், அவரது நண்பராக வருபவர் மட்டுமல்லாமல் புரோக்கராக வரும் நபரும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். இந்த படத்தில் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் பகுதியும் அதுவே.
நான்காவது கதையில் கலையரசன், சோபியா உடன் அவர்களது குழந்தைகளாக நடித்தவர்களும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஓரிரு பிரேம்களில் தலைகாட்டும் வாய்ப்பு கிடைத்தபோதும் தொலைக்காட்சி நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களாக வருபவர்கள் நம்மில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.
குறைந்த பட்ஜெட்டில், குறிப்பிட்ட சில இடங்களில் படம்பிடிக்கப்பட்டபோதும், ரசிகர்கள் அயர்ச்சி அடையக்கூடாது என்ற வகையில் ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார் கோகுல் பினோய். கனகச்சிதமான ‘வெட்டு’களுடன் செறிவானதொரு காட்சியனுபவத்தை உணரச் செய்கிறார் படத்தொகுப்பாளர் முத்தையன். இயக்குனரின் எண்ணத்திற்கு முடிந்தவரை உருவம் கொடுக்கும் வகையில் கலை வடிவமைப்பைக் கையாண்டிருக்கிறார் சிவசங்கரன்.
வான் இசையமைத்துள்ள ‘ஹேய்.. ஐய்யய்யோ’ பாடல் குதூகலத்துடன் குபீரென்ற அதிர்ச்சியையும் சேர்த்தே நம்முள் விதைக்கிறது. சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ள ‘உன் முன்னோர்கள் யாருமே முட்டாள்கள் இல்லையே’ பாடல் படம் முழுக்க ஆங்காங்கே வருகிறது. குறிப்பாக, அப்பாடலின் தொடக்க இசை முக்கியமான காட்சிகளில் பின்னணியில் ஒலிக்கிறது.
அதனைத் தாண்டி தனித்துவமானதாகப் பின்னணி இசை நம் உணர்வுக்குப் புலப்படுவதில்லை. டிஐ ஆனது , ஒட்டுமொத்தப் படமும் சீரான வண்ணக்கலவையைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. நடிப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பைத் தாண்டி, இப்படத்தில் நம் கவனத்தைக் கவரும் முதல் நபராக விளங்குகிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.
‘ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல’, ‘திட்டம் இரண்டு’, ‘அடியே’ ஆகியவற்றில் பின்னிரண்டும் சில ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. அடுத்தகட்டமாகப் பெருமளவு ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் உத்வேகத்துடன் சர்ச்சைகளுக்குரிய கதைகளை ‘ஹாட் ஸ்பாட்’டில் தந்திருக்கிறார் இயக்குனர்.
அவற்றைக் கண்டு அருவெருப்படையாத வகையில் சாமர்த்தியமாகக் காட்சிகளை வடிவமைத்த வகையில் வெற்றி பெற்றிருக்கிறார். ‘இந்த படம் பார்க்குற பத்து பேராவது மனசு மாறணும்’ என்று திரைக்கதையின் தொடக்கத்தில் குறிப்பிடுவது போலவே படமும் அமைந்திருப்பது சிறப்பு.
பிரச்சாரம் தேவை இல்லை!
ஆண்கள் கழுத்தில் தாலி அணிந்துகொண்டு உலாவும் காட்சியமைப்பே, அது ஒரு கனவென்பதை நமக்குச் சொல்லிவிடுகிறது. அதையும் மீறிக் கனவில் இருந்து விழிக்கும் நாயகன் ‘பெண் சமத்துவம்’ பற்றிப் பெரியவர்களுக்குப் பாடம் எடுப்பதெல்லாம் பிரச்சாரத் தொனியில் இருக்கிறது. அதனைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.
அதேநேரத்தில், அக்காட்சியே இன்னும் சில நாட்கள் கழித்து வாட்ஸ்அப்பிலும் இன்ஸ்டாரீல்ஸிலும் பேசுபொருளாக இருக்கும் என்று படக்குழு வாதிட்டால் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ’நான் ஒரு லெஸ்பியன்’ என்று அம்மு அபிராமி சொல்லுமிடம் தன்பாலினத்தவர்களைக் காயப்படுத்தக் கூடும். ஆனால், இயக்குனருக்கு அது நோக்கம் இல்லை என்பதை அக்கதையின் மையம் சொல்லிவிடுகிறது.
ஜனனி – சுபாஷ் செல்வம் சம்பந்தப்பட்ட ஒரு காட்சி மட்டுமே இப்படத்தில் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்ததை உறுதிப்படுத்துவதற்கான சான்றாக உள்ளன. அக்காட்சியில் கூட வசனங்கள் தான் எல்லை மீறியிருக்கின்றன. சமகாலத் தமிழ் திரைப்படங்களை ஒப்பிடுகையில் ‘ஹாட் ஸ்பாட்’டில் வரும் பெண் பாத்திரங்கள் ஆபாசமாக உடை அணியவில்லை. பாடல் காட்சியில் நடன அசைவுகளின் வழியே பாலியல் அழைப்புகளை விடுக்கவில்லை. அந்தரங்க உறவைச் சொல்லும் காட்சியமைப்புகள் சுத்தமாக இல்லை. ஆனால், பாலியல் உறவு குறித்து சமூகத்தில் தற்போதிருக்கிற சிந்தனையைக் கேள்விக்குட்படுத்தும் உள்ளடக்கமே இப்படத்திற்கு ‘ஏ’ முத்திரையைப் பெற்றுத் தந்திருக்கிறது என்பது ரசிகர்கள் உற்றுநோக்க வேண்டிய முரண்.
அனைத்தையும் தாண்டி, ‘குழந்தைகளின் குழந்தைத்தனத்தைச் சிதைக்கும்விதமாகச் செயல்படாதீர்கள்’ என்று ஊடக உலகை நோக்கிக் கல்லெறிந்த வகையில் ‘ஹாட் ஸ்பாட்’ முக்கியமான படமாக மாறியிருக்கிறது. குறிப்பாக, ‘இந்தக் கதையை எல்லாம் எப்படிப் படமா எடுக்க முடியும்’ என்ற கேள்விகளை அனாயாசமாகக் கடந்த வகையில் நம்மை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். அதனாலேயே, இதிலுள்ள குறைகளை நாம் புறந்தள்ள வேண்டியிருக்கிறது.
ஓடிடி தளத்தில் வெளியாகும்போது நிச்சயம் இப்படம் இதர மொழி ரசிகர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது. வாழ்த்துகள் ‘ஹாட் ஸ்பாட்’ டீம்!
உதய் பாடகலிங்கம்