நிதி நிறுவன மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக ஹெலிகாப்டர் சகோதரர்களிடம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் தஞ்சாவூர் காவல் ஆய்வாளர் மற்றும் துணை காவல் ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ்-எம்.ஆர்.சுவாமிநாதன். தொழிலதிபர்களான இரண்டு சகோதரர்களும் கும்பகோணத்தில் நிதி நிறுவனம், கும்பகோணம் அடுத்த கொற்கை கிராமத்தில் பால் பண்ணை நடத்தி வந்தனர். வெளிநாடுகளிலும் தொழில் செய்து வந்த இவர்கள் சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்திருப்பதால் `ஹெலிகாப்டர் சகோதரர்கள்’ என்றும் அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகின்றனர்.
இவர்கள் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணம் ஓராண்டில் இரட்டிப்பாக திருப்பி கொடுக்கப்படும் என்று அறிவித்ததை அடுத்து கும்பகோணம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
ஆனால் கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி ஹெலிகாப்டர் சகோதரர்கள் அறிவித்தபடி முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதனால் துபாயை சேர்ந்த தம்பதி ஜபருல்லா – பைரோஜ்பானு தங்களிடம் 15 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர் சகோதரர்களை தேடி வந்தனர்.
அப்போது புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த இவர்களை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர்.
நிதி மோசடி புகாரில் சிக்கிய ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க தஞ்சை காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், உதவி காவல் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் ரூ.6 கோடி லஞ்சம் கேட்டு ரூ.10 லட்சம் அட்வான்ஸ் வாங்கியதாக புகார் அளிக்கப்பட்டது.
தற்போது இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை, வழக்குப் பதிவு செய்து இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்துள்ளது.
மோனிஷா
தங்கம் விலை உயர்ந்தது: இன்றைய நிலவரம்!
நீங்கள் வேலை செய்யும் இடம் சிறப்பாக இருக்க சில டிப்ஸ்!