சென்னையில் மது போதையில் அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணா நகர், கொளத்துார் பகுதியைச் சேர்ந்தவர் தீபா. 38 வயதான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று , அண்ணா நகர் மூன்றாவது பிரதான சாலை வழியாக காரில் சென்றுள்ளார்.
அப்போது, அவ்வழியாக சென்ற, எம்.கே.பி நகர் – கோயம்பேடு செல்லும் தடம் எண்: ’46ஜி’ மாநகர பேருந்து, தீபாவின் காரில் உரசியபடி சென்றுள்ளது. அதேநேரம் அந்த மாநகர பேருந்து சாலையில் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீதும் லேசாக மோதிய படி சென்றுள்ளது.
இதனைக்கண்ட பயணிகள் அலறிய படி பேருந்தை நிறுத்துமாறு கூச்சலிட்டுள்ளனர். அப்போது பேருந்தை தொடர்ந்து வந்த தீபா ஓட்டுனரை கீழே இறங்கும்படி கூறியுள்ளார். பின்னர், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மது போதையில் இருந்துள்ளனர்.
அங்கிருந்தவர்கள் போக்குவரத்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல் துறையினர் ஓட்டுநர் தேவராஜ் மற்றும் நடத்துனர் பாலாஜி ஆகியோரிடம் விசாரனை செய்தனர்.
பின்னர், சம்பவ இடத்திலேயே இருவரையும் மது சோதனைக்கு உட்படுத்த போலீசார் முடிவு செய்தனர். நடத்துனரை ப்ரீத் அனலைசர் பயன்படுத்தி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்த போது, ஓட்டுநர் தேவராஜ் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இச்சூழலில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பெருநகர போக்குவரத்து கழகம் ( எம்டிசி ) தெரிவித்துள்ளது. இருவருக்கும் 20,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை சாலையில் அரசு மாநகர பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரே மதுபோதையில் வாகனத்தை இயக்கிய சம்பவம் பேருந்து பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
உரிமை தொகை விண்ணப்பிக்க இன்று முதல் சிறப்பு முகாம்!
அதிமுக பொதுக்குழு எதிரான வழக்கு: தேர்தல் ஆணையம் பதில்!