கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் விண்ணப்பிப்பதற்காக தமிழகம் முழுவதும் இன்று(ஆகஸ்ட் 18) முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில், தி. மு. க ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகையாக வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டது.
மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இத்திட்டம், முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று செயல்படுத்தப்படும் என கடந்த 2023 – 24 பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
மேலும், இத்திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ என பெயர் வைக்கப்பட்டு, 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த உரிமைத் தொகை பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஆண்டு மின் நுகர்வு 3,600 யூனிட்டுக்கு கீழ் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தொடர்ந்து மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு குடும்ப அட்டை, ஆதார் அடிப்படையில் தரவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
முதல்கட்டமாக கடந்த ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை முகாம் நடத்தப்பட்டது. 20,765 நியாயவிலை கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைத்தாரர்கள் மூலம் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இரண்டாவது கட்ட முகாம் ஆகஸ்ட் 5 முதல் கடந்த 14 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் மூலம் இதுவரை பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 1.54 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 2 முகாம்களிலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் தங்கள் விண்ணப்பங்களை செலுத்த வசதியாக இன்று முதல் ஞாயிற்றுகிழமை வரை என மூன்று நாட்களுக்கு மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்த திட்ட செயலாக்கத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சிறப்பு முகாமில் விண்ணப்பப்பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்களாக, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின்கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை விண்ணப்பதாரர்கள் எடுத்துச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை, மாநகராட்சியில் உள்ள 1,428 நியாயவிலை கடைகளிலும் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு முகாம்கள் காலை 9.30 முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் 5.30 மணி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
நெடுஞ்சாலையில் இறங்கி வெடித்து சிதறிய விமானம்: திகில் வீடியோ!
வரலாற்று சாதனை படைத்த பிரக்ஞானந்தா: வாழ்த்திய முதல்வர்!