தமிழ் வழியில் படித்த மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு: முத்தரசன் வேண்டுகோள்!

Published On:

| By Selvam

20 Percent of employment for doctors

12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மருத்துவர்களுக்கு, வேலைவாய்ப்பில், 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘தமிழ்நாடு அரசின், பல்வேறு துறைகளில் வேலையைப் பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வி தகுதி வரை, தமிழ்மொழி வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் 20 சதவிகித இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த ஒதுக்கீடு, தமிழ் வழியில் படிக்க வேண்டும் என்ற உணர்வை அதிகரிக்கும். தமிழ் வழியில் படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்காது என்ற தவறான கருத்தை தகர்க்கும். வேறு மாநிலத்தவர் தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பை பெறுவதையும் தடுக்க உதவும்.

அதுமட்டுமின்றி, தமிழ் வழியில் படிப்பவர்கள் பெரும்பாலும் அரசு பள்ளியை சார்ந்தவர்களாக உள்ளனர்.

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மிக மிக பின்தங்கிய, கிராமப்புற குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

எனவே, இந்த இடஒதுக்கீடு என்பது தமிழ் வழிக் கல்வியை பாதுகாப்பதுடன், சமூக ரீதியாக, கல்வி ரீதியாக மிகவும் பின்தங்கிய, ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கிராமப்புற குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பை பெறவும் உதவுகிறது.

எனவே, இந்த ஒதுக்கீடு வரவேற்புக்குரியது.

மருத்துவப் பணியாளர் பணி நியமன ஆணையம் (எம்.ஆர்.பி) சில பணிகளில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிட நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. இவை பாராட்டத்தக்கது. அதே போல், மருத்துவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீடு, அரசு மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்பில் வழங்கிட வேண்டும்.

மருத்துவக் கல்வி, தமிழ் வழியில் இல்லாத நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மருத்துவர்களுக்கு, 20 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும்.

அதற்கு தகுந்த நடவடிக்கைகளை, தமிழ்நாடு அரசு எடுத்திட வேண்டும்.

கொரோனா பரவிய காலத்தில் மக்களுக்கு அர்ப்பணிப்போடு சேவை புரிந்த மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு, அவர்களது சேவையை போற்றும் வகையில்,

அரசுப் பணியில் சேர்வதற்கான, எம்.ஆர்.பி தேர்வு மதிப்பெண்ணோடு, கூடுதல் ஊக்க மதிப்பெண்ணை வழங்கிட வேண்டும். நிரந்தர வேலை வாய்ப்பு பெற வழி வகை செய்ய வேண்டும்.

இது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டு விசாரணையில் உள்ளது.

இரண்டு ஆண்டுகள் கொரோனா பணி முடித்தவர்களுக்கே ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத் தரப்பில் கூறுவது, இதில் யாருக்கும் பயனளிக்காது எனக் கூறப்படுகிறது.

எனவே, அத்தகைய முடிவை கைவிட்டு, கொரோனா பணியாற்றிய காலத்திற்கேற்ப ஊக்க மதிப்பெண்களை வழங்கிட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது’ என்று அதில் கூறியுள்ளார்.

ராஜ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

HACT2023: அனல் பறந்த ஆட்டம்… பாகிஸ்தானை பந்தாடி இந்தியா அபார வெற்றி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share