பாலிவுட் நடிகை கரினா கபூருக்கு மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், அவரது புத்தக தலைப்புக்காக நோட்டீஸ் அனுப்பி பதிலளிக்கக் கேட்டுள்ளது.
கடந்த 2000 ஆம் ஆண்டு பாலிவுடில் “Refugee” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இன்றுவரை டாப் பாலிவுட் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை கரீனா கபூர்.
இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அதிதி ஷா பீம்ஞானி என்பவருடன் இணைந்து ஓர் புத்தகம் எழுதினார். கரீனா கபூர் கர்ப்பமாக இருந்த காலகட்டத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட அந்த புத்தகம் “கரீனா கபூர் கானின் பிரெக்னன்சி பைபிள்: தி அல்டிமேட் மேனுவல் ஃபார் மாம்ஸ் டு பி” என்ற டைட்டிலுடன் வெளியானது.
இந்த புத்தகத்தின் டைட்டிலுக்கு எதிராக வழக்கறிஞர் கிறிஸ்டோபர் அந்தோணி என்பவர் கீழ் கோர்ட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கரீனா கபூர் எழுதிய புத்தகத்தின் டைட்டிலில் உள்ள பைபிள் என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
மேலும் அந்தப் புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றும் கோரினார்.
கிறிஸ்தவ சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அந்த டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி நடிகை கரீனா கபூருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஆம்தி காவல் நிலையத்தில் பதிவான புகாருடன் தொடர்புடைய விசாரணை அறிக்கையை போலீசார் தாக்கல் செய்யவில்லை. இதனை தொடர்ந்து இந்த மனு கோர்ட்டில் தள்ளுபடி ஆனது.
இந்நிலையில் மத்திய பிரதேச ஐகோர்ட்டில் நடிகை கரீனா கபூருக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு, நீதிபதி ஜி எஸ் ஹலுவாலியா இந்த வழக்கை விசாரித்தார்.
இதில் நடிகை கரீனா கபூர், அதிதி ஷா, அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம், புத்தக வெளியீட்டாளர் ஜக்கர்நாட்டி புக்ஸ், ஜபல்பூர் போலீஸ் சூப்பிரெண்டு மற்றும் ஆம்தி காவல் நிலைய பொறுப்பு அதிகாரி ஆகியோருக்கு இந்த விவகாரத்தில் பதிலளிக்கும் படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கரீனா கபூருக்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் இந்த வழக்கும், நீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸும் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகவும் மாறி வருகிறது.
– கார்த்திக் ராஜா