குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் தியாகம் செய்யும் “அன்னையர்”களை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு வருடமும் மே 2ஆம் வாரம் ஞாயிற்றுக்கிழமை “அன்னையர் தினம்”ஆக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், இன்று மே 12ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
அன்னையர் தினத்தை முன்னிட்டு, மின்னம்பலம் யூடியூப் சேனல் சார்பில் பொதுமக்களிடம் பேசினோம்.
அப்போது, அவர்கள் தங்களது அம்மாவை பற்றிய பல உணர்வுப்பூர்வமான மற்றும் மறக்கமுடியாத நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.
அதை இந்த செய்தியில் பார்க்கலாம்…
ரேணுகா தேவி கூறுகையில், “எனக்கு அம்மான்னு சொன்னாலே அழுகை வந்துவிடும். எங்க அம்மா பெயர் அம்பிகா. எனக்கு இந்த உலகத்தில் எது முக்கியம் என்று கேட்டால் முதலில் என் அம்மா தான். அவருக்கு பிறகுதான் யாராக இருந்தாலும்…
எனக்கு என் அம்மாவும், தெய்வமும் ஒன்னு. மிகவும் கஷ்டப்பட்டு என்னை வளர்த்தார். எந்த நிலையிலும் அவர் தளர்ந்துபோகவில்லை. அவரை பார்த்துதான் தற்போது நான் வளர்ந்து கொண்டு இருக்கிறேன்” என மிகவும் உணர்ச்சி பூர்வமாக பேசினார்.
அஸ்வினி
“என் அம்மா பெயர் ரூபா. எனக்காக என் அம்மா அவரது வாழ்க்கையையே தியாகம் செய்துள்ளார். எனக்கு அப்பா கிடையாது. என்னை ஒரு வயதில் இருந்து தற்போது வரை தனியாளாக என் அம்மா வளர்த்து வருகிறார். எங்கள் குடும்பத்தில் சாப்டீயா என்று கேட்பதற்கு கூட ஆள் கிடையாது. இருந்தாலும் வீட்டு வேலை செய்து அம்மா என்னை கவுரவமாக வளர்த்து வருகிறார். என் குடும்பத்திலேயே யாரும் படிக்க முடியாத பெரிய பள்ளியில் என்னை படிக்க வைக்கிறார். இத்தனை நாட்கள் அவர் எனக்காக இருந்துள்ளார், நான் படித்து முடித்ததும் அவருக்காக கண்டிப்பாக இருப்பேன்.”
நாயகம்
“அம்மா என்றால் என்னைப் பொறுத்தவரை உலகமே அம்மாதான். அம்மா என்ற வார்த்தைக்கு இந்த உலகில் எதுவும் ஈடில்லை. என் அம்மா எனக்கு சொன்னது, ‘நான் பட்டினியாக இருந்தாலும், உன்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்யவேண்டும்’ என்பது தான்.
ரூபா
“அம்மாக்கு ஈடாகுமா?. எது என்றாலும் அம்மாதான். எவ்வளவு பெரிய விசயம் நடந்தாலும், அதை தூக்கிப்போட்டு போறது அம்மாவினால் தான் முடியும். அம்மாவை தவிர இந்த உலகத்தில் நமக்கு வேறு யாரால் ஆறுதல் சொல்ல முடியும். அம்மா நிறைய சொல்லி கொடுத்துருக்காங்க. ஒழுங்கா இருக்கனும், நேர்மையா இருக்கனும், பொய் சொல்லக்கூடாது. உயிரே போற நிலைமை வந்தாலும் பொய் சொல்லக்கூடாது”
சோமசுந்தரம்
“அம்மா மறைந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. இப்போதும் அவர் என்னுடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். என் அம்மா சொல்லி கொடுத்தது, யாரையும் ஏமாற்றக்கூடாது. யார் மீது அன்பு வைத்தாலும், அன்பை உண்மையாக வைக்க வேண்டும். என் அம்மாவை நான் சாகும்வரையில் மறக்க மாட்டேன்.”
ராஜு
கடவுளுக்கு அடுத்தது அம்மா, அப்பாதான். அவர்கள் இருக்கும்வரை நமக்கு எல்லாமே இருக்கும். அவர்கள் இல்லை என்றால் எதுவுமே நமக்குன்னு இல்லாத மாதிரி இருக்கும்.”
அனைவருக்கும் “அன்னையர் தின” வாழ்த்துகள்…
பேட்டி : ஸ்ருதி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தல் ஆணையம் மிரட்டுகிறது – கார்கே
இனிமேல் ஜோசப் விஜய் தான்… தவெக நிர்வாகிகள் லிஸ்ட் ரிலீஸ்!