Shakib Al Hasan blurred vision
உலகக்கோப்பை தொடர் முழுவதும் ஒற்றைக்கண் பார்வை குறைபாட்டுடன் தான் விளையாடியதாக பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறியது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு 2007ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவை தோற்கடித்து லீக் சுற்றுடன் வெளியேறியது அப்போது கத்துக்குட்டியாக இருந்த பங்களாதேஷ் அணி. அந்த போட்டி முதல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனி கவனமும் பெற்றது.
எனினும் இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் மிக மோசமாக விளையாடியது ஆல்ரவுண்டர் ஹகிப் அல் ஹசன் தலைமையிலான பங்களாதேஷ் அணி. அதாவது இந்த தொடரில் விளையாடிய 9 ஆட்டங்களில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது.
அதற்கு, அந்த அணியின் கேப்டனும், ஆல்ரவுண்டருமான ஹகிப் அல் ஹசனின் மந்தமான ஆட்டமும், மோசமான கேப்டன்ஷிப்பும் தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், மன அழுத்தம் மற்றும் ஒற்றைக்கண் பார்வை குறைபாட்டுடன் தான் ’2023 உலகக்கோப்பை தொடர் முழுவதும் விளையாடியதாக ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிரிக்பஸ் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “உலகக் கோப்பை தொடர் முழுவதும் எனக்கு ஒற்றைக்கண் பார்வை குறைபாடு இருந்தது. பவுலரின் ஒரு குறிப்பிட்ட திசையை அனுமானித்து ஒரு கண்ணால் தான் பந்துகளை எதிர்கொண்டேன். இதனால் எனக்கு பெரும் அசௌகரியம் இருந்தது.
விஷயம் என்னவென்றால், உலகக் கோப்பைக்கு முன்பு நான் மருத்துவரிடம் சென்றபோது என் விழித்திரையில் தண்ணீர் இருந்தது. அவர்கள் சொட்டு மருந்து கொடுத்து, என் மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
ஆனால் உலகக் கோப்பைக்குப் பிறகு நான் மீண்டும் அமெரிக்காவில் சோதனை செய்தபோது எந்த மன அழுத்தமும் இல்லை. ஆனால் அது ஏற்படும் அளவுக்கு உலகக்கோப்பையில் பங்களாதேஷ் அணி விளையாடியது.
நான் நினைத்த மாதிரி அணி தயாராக இல்லை
நான் கேப்டன் பதவியில் இருந்ததால் மன அழுத்தத்திற்கு ஒரு சாக்குப்போக்கு என்று சொல்ல தயாராக இல்லை. ஆனால் எனக்கு அது தொடருக்கு முன்பே கிடைத்திருந்தால், அது எளிதாக இருந்திருக்கும்.
ஒரு கேப்டனாக நான் நினைக்கும் விதத்திலோ அல்லது நான் விளையாட விரும்பும் தத்துவத்திலோ விளையாட அணியினர் தயாராக இல்லை. உலகக் கோப்பை மட்டுமல்ல, இந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டி முழுவதுமே நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை” என்று ஷகிப் அல் ஹசன் கூறினார்.
கடந்த 2019 உலகக்கோப்பை தொடரில் 606 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகளை எடுத்து ஆல்ரவுண்டராக ஜொலித்தார். ஆனால் 2023 உலகக்கோப்பையில் 7 போட்டிகளில் 26.57 சராசரியுடன் வெறும் 186 ரன்கள் மட்டுமே ஷகிப் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நெல்லையில் ரூ.6,000 டோக்கன் விநியோகம்: ரேஷன் கடைகளில் அலைமோதும் கூட்டம்!
IND vs SA 1st Test: 5 ரன்களுக்கு ஆட்டமிழந்த ரோஹித்… கனவாகவே போயிரும் போல புலம்பும் ரசிகர்கள்!
பாஜகவுடன் கூட்டணி இல்லை : பொதுக்குழுவில் எடப்பாடி பேச்சு!
Shakib Al Hasan blurred vision