நெல்லையில் வெள்ள நிவாரண நிதியாக ரூ.6 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி இன்று (டிசம்பர் 26) தொடங்கியுள்ளது.
தென்மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடியில் கடந்த 17,18ஆம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத அதி கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் இருமாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களும் உடைந்ததால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, நிவாரண பொருட்களை வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு டோக்கன்களை வழங்கி ரூ.6,000, குமரி தென்காசி மாவட்டங்களுக்கு ரூ.1000 நிவாரண தொகையாக வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
அதன்படி, பாளையங்கோட்டை மற்றும் சேரன்மகாதேவி தாலுகாக்களில் முழுமையாகவும், அம்பாசமுத்திரத்தில் 12 வருவாய் வட்டங்களிலும், நாங்குநேரியில் 30 வருவாய் வட்டங்களிலும், ராதாபுரத்தில் 10 வருவாய் வட்டங்களிலும் டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தற்போது ரேஷன் கடைகளில் 6000 ரூபாய்கான டோக்கன்களை வாங்குவதற்காக பொதுமக்கள் ரேஷன் கடைகளில் குவிந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா