பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்துகிறேன் என்று அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். No alliance with BJP Edappadi
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 26) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “இந்தியா கூட்டணியில் புகைச்சல் வந்துவிட்டது. நிதிஷ் குமார் இந்தியில் பேசுகிறார். அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்குமாறு டி.ஆர்.பாலு கேட்கிறார்.
அதற்கு மறுப்புத் தெரிவித்த நிதிஷ் குமார், என்னுடைய பேச்சை மொழி பெயர்க்க கூடாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார். இதுதான் நிலைமை. இந்தியா கூட்டணியில் புகைச்சல் ஆரம்பித்துவிட்டது” என்றார்.
“உங்களுக்கு யார் பிரதமர் என்று கேட்கிறார்கள், எங்களை பொறுத்தவரை மக்கள் தான் எஜமானர்கள். மக்களுக்காகத்தான் கட்சி, அவர்களுக்காகத்தான் அரசாங்கம். பிரதமருக்காக அல்ல.
மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை மீட்டெடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவை. அவர்களுடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். மக்களின் குரல் அங்கு ஒலிக்க வேண்டும்.
தேசிய கட்சிகளை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை. நாம் பாஜகவில் இருந்து விலகிய பிறகு ஸ்டாலினுக்கு தூக்கம் போய்விட்டது. ஏனென்றால் சிறுபான்மை மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக்கொண்டிருந்தார். ஆட்சிக்கு வந்தது முதல் சிறுபான்மை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தற்போது சிறுபான்மை மக்களின் வாக்கு சிதறிவிடும் என்ற அச்சத்தில் ஏதேதோ புலம்பிக் கொண்டிருக்கிறார்.
பாஜகவுடன் நாங்கள் கூட்டணியில் இல்லை. ஏற்கனவே 25.9.2023 அன்று தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுவிட்டது. அதன்படி இனி பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்று அன்றே தெளிவுபடுத்திவிட்டோம்.
சிறுபான்மை மக்கள் விழித்துக்கொண்டார்கள். அதிமுகதான் அவர்களை அரண்போல் காக்கிறது” என கூறினார்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி அறிவித்தது. ஆனால் பாஜகவுடன் அதிமுக மறைமுகமாக கூட்டணி வைத்திருக்கிறது என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் விமர்சித்து வந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளார் எடப்பாடி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நெல்லையில் ரூ.6,000 டோக்கன் விநியோகம்: ரேஷன் கடைகளில் அலைமோதும் கூட்டம்!
உதயநிதிக்கு நாவடக்கம் தேவை : எடப்பாடி பழனிசாமி
No alliance with BJP Edappadi