தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற ஏக்கத்தினை ரோஹித் தலைமையிலான இந்திய அணி தீர்க்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. India vs south Africa 1st test match
இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி2௦ தொடர் சமனில் முடிய, ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா வென்றது.
இதையடுத்து இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் 2 டெஸ்ட் தொடர்களில் மோதுகின்றன. அதில் முதலாவது டெஸ்ட் இன்று (டிசம்பர் 26) பிற்பகல் 2 மணிக்கு செஞ்சுரியன் மைதானத்தில் தொடங்கியுள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாள் நடைபெறும் போட்டி என்பதால் இது ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி என்றே அழைக்கப்படுகிறது.
டாஸ்
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளது.
இந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் டி2௦, ஒருநாள் போட்டி, டெஸ்ட் என மூன்றிலுமே இந்திய அணி டாஸ் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
31 ஆண்டுகள்
சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ராகுல் டிராவிட், தோனி, விராட் கோலி ஆகிய கேப்டன்களின் கீழ் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் விளையாடி டெஸ்ட் போட்டியை வென்றுள்ளன.
ஆனால் இந்த 31 ஆண்டுகளில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அதனால் தான் இன்று நடைபெறும் இந்த டெஸ்ட் தொடர் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வலுவாகவே காணப்படுவதால், சிறப்பாக விளையாடி 31 ஆண்டு கால ஏக்கத்தை தீர்த்து வைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.
தென் ஆப்பிரிக்கா
அதே நேரம் பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியையும் நாம் குறைத்து எடை போட முடியாது. அதோடு சொந்த மண் என்ற கூடுதல் தகுதியும் அவர்களுக்கு உள்ளது.
செஞ்சுரியன் மைதானத்தை பொறுத்தவரை இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி ஒன்றிலும், தென் ஆப்பிரிக்கா அணி இரண்டிலும் வென்றுள்ளது.
எனவே இந்த டெஸ்ட் தொடரில் எந்த அணி வெற்றியை பறிக்கப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பிரசித் கிருஷ்ணா
டெஸ்ட் தொடரில் இன்று (டிசம்பர் 26) அறிமுகம் காணும் பிரசித் கிருஷ்ணா இந்திய அணிக்காக அறிமுகம் செய்யப்படும் 309-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ரோஹித் சர்மா
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இளம்வீரர் யஷஸ்வி ஜெய்சால், கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர்.
5 ஓவர்கள் முடிவில் அணியின் ஸ்கோர் 13 ஆக இருந்தபோது கேப்டன் ரோஹித் சர்மா, ரபாடா பந்தில் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் 31 வருஷ கனவு, வெறும் கனவாகவே போய்டும் போல என சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர். தற்போது ஜெய்ஸ்வால் 8 ரன்களுடனும் கில் ரன்கள் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
இந்தியா அணி விவரம் : ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில்,விராட் கோலி, கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயஸ் ஐயர், ஷர்துல் தாகூர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
தென் ஆப்பிரிக்கா: டெம்பா பவுமா (கேப்டன்), எய்டன் மார்க்ரம், டோனி டே ஜோர்ஸி, டீன் எல்கர், கீகன் பீட்டர்சன், நந்த்ரே பர்கர், கைல் வீரரைன் (விக்கெட் கீப்பர்), மார்க்கோ யான்சன், காகிசோ ரபாடா, லுங்கி நிகிடி, டேவிட் பெடிங்ஹாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மஞ்சுளா
நெல்லையில் ரூ.6,000 டோக்கன் விநியோகம்: ரேஷன் கடைகளில் அலைமோதும் கூட்டம்!
உதயநிதிக்கு நாவடக்கம் தேவை : எடப்பாடி பழனிசாமி
India vs south Africa 1st test match