Thailand Open 2024: அசத்தும் சாத்விக், சிராக், அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிராஸ்டா

விளையாட்டு

2024-ஆம் ஆண்டுக்கான தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடர், தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் கடந்த மே 14 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில், ஆடவர் இரட்டையர் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்தியாவின் நட்சத்திர இணையான சாத்விக் ரங்கிரெட்டி – சிராக் செட்டி இணை, தற்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

மே 17 அன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், மலேசியாவை சேர்ந்த யாப் ராய் கிங் மற்றும் ஜுனைதி ஆரிஃப் இணையை 21-7, 21-14 என நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அரையிறுதியில் இவர்கள் சீனாவின் தைபேவைச் சேர்ந்த டேங் கய் வெய் – மிங் சே லு இணையை எதிர்கொள்ள உள்ளனர். இப்போட்டி மே 18 அன்று நடைபெறுகிறது.

கடைசியாக மார்ச் மாதம் நடைபெற்ற பிரென்ச் ஓபன் தொடரில் பட்டம் பெற்ற சாத்விக் – சிராக் இணை, அதன்பிறகு விளையாடிய ஆல் இங்கிலாந்து ஓபன், பாட்மிண்டன் ஆசியா சாம்பியன்ஷிப் ஆகிய தொடர்களில் காலிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, இந்த தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா – தனிஷா கிராஸ்டா இணை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்த இணை காலிறுதியில் லீ யூ லிம் – ஷின் ஸுயுங் சான் இணையை 21-15, 21-23, 21-19 என போராடி வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்த ஆண்டில், இந்த இணை முதல் முறையாக ஒரு தொடரின் அரையிறுதிக்கு முன்னேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மே 18 அன்று நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 21வது இடத்தில் உள்ள அஸ்வினி – தனிஷா இணை, 10வது இடத்தில் உள்ள தாய்லாந்தை சேர்ந்த ஜோங்கோல்பான் கிடிதரக்குல் – ரவின்டா பிரஜோங்ஜெய் இணையை எதிர்கொள்ள உள்ளது.

மணிப்பூரை சேர்ந்த 21 வயது இளம் இந்திய வீரரான மெய்ரபா லுவாங் மய்ஸ்னாம், இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்திலேயே இந்தியாவின் நட்சத்திர வீரரான எச்.எஸ்.பிரணாயை 21-19, 21-18 என வீழ்த்தி காலிறுதி வரை முன்னேறினார்.

தரவரிசையில் 84வது இடத்தில் உள்ள மய்ஸ்னாம், காலிறுதியில் தரவரிசையில் 8வது இடத்தில் உள்ள தாய்லாந்தை சேர்ந்த குன்லவுட் விடிட்சர்னை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் மய்ஸ்னாம் 12-21, 5-21 என நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எத்தனை நம்பர் 1 ஸ்டேட்? அப்டேட் குமாரு

IPL 2024: இது நடந்தால் சிஎஸ்கே 2வது இடத்திற்கு செல்லுமா? எப்படி?

தென்காசி: ஆர்ப்பரித்த வெள்ளம்…. பறிபோன உயிர்!

டிஜிட்டல் திண்ணை: மாசெக்கள் மாற்றமா? பெங்களூரு பயணமா? ஸ்டாலின் நடத்திய முக்கிய ஆலோசனை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0