Xஆஸ்கர் 2019: படம் சொல்லும் பாடங்கள்!

public

சிவா

2019ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் விழா, இந்திய நேரப்படி வருகிற திங்கள் காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. எந்தப் படங்களெல்லாம் ஆஸ்கர் விருதில் பெருமைப்படப் போகின்றன, எந்த விருதுகளெல்லாம் மக்களிடையே விமர்சனங்களை எதிர்கொள்ளப் போகின்றன என்ற சூடான நிலைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது உலகம்.

ஆஸ்கருக்கு நாமினேட் ஆகியிருக்கும் திரைப்படங்கள, இம்முறை ஓரளவுக்கு விமர்சன வளையத்திலிருந்து தப்பியிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். காரணம், ஆஸ்கருக்கு நாமினேட் ஆன படங்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்பே, நிகழ்ச்சித் தொகுப்பாளர் இல்லாதது, சில விருதுகளை ஒளிபரப்பாமல் தவிர்ப்பது என வெவ்வேறு பிரச்சினைகளை ஆஸ்கர் உருவாக்கியதால் மக்களின் கவனம் அதிலிருந்து விலக்கிவைக்கப்பட்டது. எனவே, ஒப்பீட்டளவில் விமர்சனத்துக்கு ஆளாகப் போவது ஆஸ்கர் வழங்கவிருக்கும் விருதுகளாகவே இருக்கப்போகின்றன. அதேசமயம், பாராட்ட வேண்டிய பல திரைப்படங்களையும் ஆஸ்கர் நாமினேஷனில் காணமுடிகிறது.

ஒரு அரசாங்கம், தனது குடிமக்களின் உணர்வுகளுடன் விளையாடவும், அந்த அரசாங்கத்தில் இடம்பெற்றிருக்கும் அதிகாரிகள் எடுக்கும் முடிவுகள் எப்படிப்பட்டவையாக இருக்கின்றன என்பதைப் பற்றியும் ஜனரஞ்சகமாக; அதேசமயம் பொலிடிகல் சட்டைர் வகையறாவில் கையாண்டிருக்கும் திரைப்படம் VICE. ஆடம் மெக்கே இயக்கத்தில் கிறிஸ்டியன் பேல், ஏமி ஆடம்ஸ் ஆகியோர் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் 8 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

ஒற்றை மனிதர் நினைத்தாலே அமெரிக்க அரசாங்கத்தையும், அதன் ஆயுத பலத்தையும் உலகின் எந்த மூலைக்கும் தான் விரல் நீட்டும் இடத்துக்கு திசைதிருப்ப முடியும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது VICE. அத்தனை சர்வவல்லமை பொருந்திய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதியை, மக்கள் எத்தனை கவனத்துடன் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதையும் இந்தப்படம் உணர்த்துகிறது. அதிக வேலை இருக்காது என்று நினைக்கப்படும் ‘துணைப் பதவி’களுக்கு இருக்கும் உண்மையான சக்தியை சுவைக்க விரும்பும் நபரால் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதே இப்படத்தின் கதைக்களம். அது ஆஃப்கானிஸ்தானில் பல ஆயிரம் உயிர்களையும், ஈராக்கில் பல கோடி உயிர்களையும் கொத்து கொத்தாக எடுக்கக்கூடிய அளவுக்கு சட்டங்கள் இடம் கொடுத்திருக்கின்றன என்பதையும் அழுத்தமாகவும், நகைச்சுவையாகவும் சொல்கிறது இப்படம். படம் உருவாக்கப்பட்ட விதம் நகைச்சுவையாக இருந்தாலும், அந்த நகைச்சுவைக் காட்சிகளின் பின்விளைவு இரத்த பூமிகளை உருவாக்குகின்றன எனும்போது விரலில் இடப்படும் மை இரத்த நிறத்தில் கற்பனையில் தெரிகிறது.

VICE திரைப்படம் வெளிப்புற தீவிரவாதத்தைப் பேசியது என்றால், BLACKKKLANSMAN திரைப்படம் அமெரிக்காவின் உள்நாட்டு தீவிரவாதத்தின் கோரமுகத்தை சிலுவைகளில் அறைகிறது. ஆனால், இதனை அமெரிக்கா என்ற ஒற்றை நாட்டுடன் அடைத்துவிட முடியாது. இன வெறி, நிற வெறி, மத வெறி, சாதி வெறி என ஒவ்வொரு மண்ணிலும் வெவ்வேறு விதத்தில் இந்தத் தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது.

கலாச்சாரம் வளர்ந்துகொண்டிருந்த காலத்திலேயே பெரும்பான்மையின் மூலம் மற்றவர்களின் மீது அதிகாரம் செலுத்தியவர்கள், தற்போதைய உலகில் சமூக நீதி மற்றும் மனித உயிர்களுக்கான அடிப்படை உரிமைகள் ஆகியவற்றின் தெளிவான கோட்பாடுகளால் ஓய்ந்து கிடக்கின்றனர். ஆனாலும், அவ்வப்போது தங்களது இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள சில கோர செயல்களில் ஈடுபடுகின்றனர். அதற்காக தங்களை தயார்படுத்திக்கொள்வது எப்படி? என்பதை அமெரிக்காவில் நிலவும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மீதான நிற வெறி மற்றும் யூதர்களின் மீதான இன வெறி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது BLACKKKLANSMAN.

கொலராடோ ஸ்பிரிங்ஸ் மாகாணத்தின் முதல் கறுப்பினத்தைச் சேர்ந்த போலீஸாக பொறுப்பேற்கிறார் ரான் ஸ்டால்வொர்த். ஆவணக் காப்பகத்தில் உட்கார்ந்துகொண்டு பேப்பர்களைத் தேடும் வேலையை விரும்பாத ரான் ஸ்டால்வொர்த், களத்தில் இறங்கி வேலை செய்ய விரும்புகிறார். ஆனால், அவரது நிறம் கொலராடோ ஸ்பிரிங்க்ஸில் சதி வேலைக்கு திட்டமிடும் கூட்டத்தில் நுழையவிடவில்லை. எனவே, வேறொரு வெள்ளை நிற போலீஸ் நண்பனை ரான் ஸ்டால்வொர்த்தாக அனுப்புகிறார். டெலிஃபோனில் ஒரு ரானாகவும், நேரில் ஒரு ரானாகவும் இருவர் சேர்ந்து நடத்தும் விசாரணையின் முடிவில், அவர்களது உயிரையே அவர்களால் காப்பாற்றிக்கொள்ள முடிகிறதா என்பதை நோக்கி கதை நகர்கிறது.

தமிழகத்தில் எப்படி சாதியை அடிப்படையாக வைத்து கொலைகள் நிகழ்கிறதோ, அதுபோலவே நிறத்தையும் இனத்தையும் அடிப்படையாக வைத்து மேற்கு நாடுகளில் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. சிறந்த அமெரிக்காவை உருவாக்குவோம் என முன்வைக்கப்படும் பிரகடனம், வெள்ளையர்கள் மட்டுமே வாழ்வோம் என்ற குரல்களாக இன வெறி, மத வெறியால் இறந்தவர்களின் சவப்பெட்டிகளின் மீது பட்டு எதிரொலிக்கின்றது. ஏதோ சாலையில் செல்லும் ஒரு ஆதரவற்ற கறுப்பினத்தவருக்கு மட்டும் இப்படி நடைபெறுவதில்லை என்பதை, ஆஸ்கருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இன்னொரு திரைப்படமான Green Book சொல்கிறது.

எவ்வளவு பிரபலமாக இருந்தாலும், எவ்வித எல்லைகளும் இல்லாத கலைஞனாக இருந்தாலும், எத்தனையோ சாதனைகளை செய்தாலும், எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் உங்கள் நிறம் கறுப்பாக இருந்தால் ஒரு பொது இடத்தில் நீங்கள் அவமானத்துக்கு ஆளாக நேரிடும். அதிலும், மிக நீண்டதொரு இசைப் பயணத்தை நடத்தும்போது செல்லக்கூடிய இடங்கள் எல்லாம் வரவேற்கும் தன்மையுடையவையாக இருக்காது என்பதை Green Book திரைப்படம் இசைக்கிறது.

பியானோவில் கைதேர்ந்த கறுப்பினத்தைச் சேர்ந்த கலைஞனான டான் ஷிர்லே மற்றும் அவரது டிரைவர் டோனி லிப் ஆகிய இருவரின் எட்டு வார இசைப் பயணத்தைப் பற்றிய கதை தான் Green Book. கறுப்பினத்தவர்களுக்கு உணவு கொடுக்கும் மோட்டல்கள் எவை? எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் எவை? தங்க அறை கொடுக்கும் ஹோட்டல்கள் எவை? எனத் தனித்தனியாக பிரித்து வைத்திருக்கும் பாதையில் எப்படிப்பட்ட நிற வெறி தாக்குதல்களுக்கு இருவரும் ஆளாகிறார்கள் என்பதை படமாக்கியிருக்கிறார்கள். உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் நிற வெறி மட்டுமல்லாமல் பாலின பாகுபாடு, ஓரினச் சேர்க்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என தற்போதைய மனித இனத்தில் எதிர்கொள்ளப்படும் பலதரப்பட்ட பிரச்சினைகளைப் பேசுகிறது இத்திரைப்படம்.

Roma, BOHEMIAN RHAPSODY, THE FAVOURITE, A STAR IS BORN, BLACK PANTHER ஆகியவை குறித்து மாலை பதிப்பில் பார்க்கலாம்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *