”பயங்கரவாதத்தைவிட பெரிய ஆபத்து நீதித்துறையின் சுதந்திரம் இழப்பு!”

public

முன்னாள் அட்வகேட் ஜெனரல் பி. வி. ஆச்சார்யா சிறப்புப் பேட்டி

– எஸ்.ராஜேந்திரன்

பி. வி. ஆச்சார்யா கர்நாடகத்தில் பல பத்தாண்டுகள் பிரபல வழக்கறிஞராகவும் ஐந்து முறை அந்த மாநிலத்தின் தலைமை அரசு வழக்கறிஞராகவும் (அட்வகேட் ஜெனரலாகவும்) விளங்கிய மூத்த வழக்கறிஞர். மத்திய புலனாய்வுத் துறையும் அமலாக்கத் துறையும் தங்கள் நடத்தை மூலம் மக்கள் மனங்களில் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்ற கருத்தை இவர் கொண்டுள்ளார்.

சில முதல்வர்கள் மற்றும் உயர் அரசியல் தலைவர்களுக்கு எதிரான வழக்குகள் உள்பட பல ஊழல் வழக்குகளை கையாண்டிருக்கும் ஆச்சார்யா, போலீசாரிடம் தங்குதடையற்ற முழுமை அதிகாரத்தை ஒப்படைப்பது அபாயகரமானது, ஏனெனில் ஒரு போலீஸ் அரசு முறைக்கு அது வழிவகுக்கும் என்ற கருத்தைக் கொண்டுள்ளார்.

ஒரு வலுவான மற்றும் சுதந்திரமான நீதித்துறை இருந்ததனால் தான் நம் நாட்டில் ஜனநாயகம் பிழைத்திருந்தது, ஆனால் இன்றோ நிலைமை வேறு”, என்று இன்னமும் தீவிரமாக வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு வரும் 85 வயது முதியவரான ஆச்சார்யா அரசியல் மற்றும் பொதுக்கொள்கைக்கான தி ஹிந்து மையத்தைச் சேர்ந்த மூத்த ஆய்வாளரான எஸ்.ராஜேந்திரனுக்கு அளித்த இந்த நேர்காணலில் கூறுகிறார்.

நேர்காணலிலிருந்து சில பகுதிகள்:

**பிரபல அரசியல் தலைவர்களுக்கு எதிரான வழக்குகள் புலனாய்வில் இருப்பதால் மத்திய புலனாய்வுத் துறை (CBI) மற்றும் அமலாக்கத் துறை (ED) ஆகியவற்றின் பாத்திரம் இப்போது கூர்ந்து கவனிக்கப் படுகிறது. நீண்ட காலம் மூத்த வழக்கறிஞராகவும் கர்நாடகத்தின் அட்வகேட் ஜெனரலாகவும் கூட நீங்கள் பணியாற்றியிருப்பதால் இது குறித்து நீங்கள் எதுவும் கூற விரும்புகிறீர்களா? அதிலும் குறிப்பாக பொது வாழ்க்கையில் ஊழல் மலிந்திருப்பதால் இது பற்றி எதுவும் கூற விரும்புகிறீர்களா?**

பொது வாழ்க்கையிலிருந்து ஊழலைக் களையவோ அல்லது குறைக்கவோ நேர்மையான மற்றும் அக்கறையுடன் கூடிய முயற்சியை எந்த அமைப்பு எடுத்தாலும் அது வரவேற்கத் தக்கதே. ஆனால் சில பிரபல அரசியல் தலைவர்களுக்கு எதிரான வழக்குகளில் சமீபத்தில் நடைபெற்ற புலன் விசாரணை ,புலனாய்வுக் கழகத்தின் தரப்பில் ஊழலை ஒழிப்பதற்கான பாரபட்சமற்ற நேர்மையான விசாரணையாகத் தென்படவில்லை.

அரசியல் கட்சியொன்று தனது அரசியல் எதிராளிகளை வேண்டுமென்றே பிரத்யேகமாக குறிவைக்க அவர்களுக்கு எதிராக பொய் வழக்குகளை பதிவுசெய்து புலனாய்வு துறையை தவறாகப் பயன்படுத்துவது என்பது ஒன்றும் புதிதல்ல. இந்த பழிவாங்கல் அரசியல் சில காலமாகவே செயல்பாட்டில் உள்ளது. மத்தியிலும் மாநிலங்களிலும் அதிகாரத்திற்கு வந்த எந்த அரசியல் கட்சியுமே இந்த குற்றச்சாட்டிலிருந்து தப்பவில்லை. மத்தியில் அதிகாரத்திலிருந்த எல்லா கட்சிகளும் இந்த தவறான நடைமுறையில் ஈடுபட்டு வந்துள்ளன.

கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசாங்கம் ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கான லோக் ஆயுக்தா போலீஸ் பிரிவின் அதிகாரத்தைப் பறித்து அரசியல் நிர்வாகத்துறையின் நேரடி கட்டுப்பாட்டிலிருக்கும் ஊழல் எதிர்ப்புத் துறையிடம் (Anti-Corruption Bureau) ஒப்படைத்தது என்பது புலனாய்வுத் துறையை அரசியல்வாதிகள் தம் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு செய்யப்பட்ட முயற்சிகளுக்கான பட்டவர்த்தனமான ஒரு எடுத்துக்காட்டு ஆகும். ஊழல் எதிர்ப்புத் துறை நிறுவப்பட்டதையடுத்து அதிகாரபூர்வமற்ற முறையில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை முறைப்படுத்தி அந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கே வழங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த கமிட்டி தரப்பில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம் சாட்டி அந்த கமிட்டிக்கு தலைமை தாங்கிய பாரதீய ஜனதா கட்சியின் பிரபல தலைவர் [முன்னாள் துணை முதல்வர்] ஒருவருக்கு எதிராக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. புகாரளித்தவர் காங்கிரஸ் தலைவர் ஒருவர். குற்றமாகக் கூறப்படும் இந்த விவகாரமோ 15 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒன்று. அரசியல் பழிவாங்கலுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.

**ஊழலுக்கு எதிரான சமீப வழக்குகள் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன ஆளும் கட்சித் தலைவர்களுக்கு எதிராக இல்லை. இது தற்செயலாக நிகழ்ந்த ஒன்றாக இருக்க முடியாது. அரசியல்வாதிகள் மத்தியில் ஊழல் எதிர்க் கட்சியை சேர்ந்தவர்களிடையே மட்டுமே நிலவுகிறது என்று கூற முடியுமா?**

மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத் துறை போன்ற புலனாய்வுக் கழகங்கள் தங்கள் நடத்தையின் மூலம் மக்கள் மனங்களில் நம்பிக்கையைத் தோற்றுவிக்க வேண்டும். சில குறிப்பிட்ட தனிநபர்களை அவர்களுடைய நடவடிக்கைகளுக்காக குறிவைக்கையில் கூட நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் தாங்கள் நடந்துகொள்வதாக இந்த அமைப்புகள் நிலைநிறுத்த வேண்டும். துரதிருஷ்டவசமாக இப்படி நடைபெறுவதில்லை. இதற்கு நேர்மாறாக, பல எதிர்கட்சித் தலைவர்களை ஆளும் கட்சியில் சேர வரிசைகட்டி நிற்கவைக்குமளவுக்கு இவற்றின் நடத்தை இருக்கிறது. ஏனெனில் புலனாய்வுத்துறையின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க இது ஒன்றே பாதுகாப்பான வழி என்று அவர்கள் கருதுகின்றனர். எனவே அரசியல் எஜமானர்களின் கட்டளைகளுக்கேற்ப வழக்கு விசாரணைகள் தொடரப்படுகின்றன. மற்றும் இப் புலனாய்வுத் துறைகளின் நடவடிக்கைகள் நேர்மையாக இல்லை என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றதொன்று அல்ல.

**ஊழல் வழக்குகளில் முன்ஜாமீன் மனு வழங்குவதற்கான சட்டப்பிரிவுகள் புலனாய்வுக்கு தடையாக விளங்குகின்றனவா? சம்பந்தப்பட்ட சட்டங்களில் சாதகமான மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டுமா?**

ஊழல் வழக்குகளில் முன் ஜாமீன் வழங்கப்படுவது புலன் விசாரணைக்கு தடையாக விளங்குகிறது என்ற கருத்தோடு நான் உடன்படவில்லை. உண்மையில் பார்த்தால் என்னுடைய கருத்துப்படி ஊழல் வழக்குகளில் புலனாய்வுக்கழகங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து அவர்களை நீண்ட காலம் காவலில் வைப்பது முற்றிலும் அவசியமற்றது. உண்மையில், சமீப காலம் வரை ஊழல் வழக்குகளில் அவை பொறிவைத்தது பிடிக்கப்பட்ட வழக்குகளாக இருந்தாலும் சரி வருவாய்க்கு புறம்பாக சொத்து வைத்திருக்கும் வழக்காக இருந்தாலும் சரி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படுவதில்லை; விசாரணைக்காக அழைக்கப்படுவது மட்டுமே நடந்தது. இருப்பினும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணை நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக தண்டனை பெறுவதற்கு முன்னரே கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுவது இல்லாமலே பல ஊழல் வழக்குகள் திறம்படவும் வெற்றிகரமாகவும் புலனாய்வு செய்யப்பட்டு நீதிமன்றம் முன்பு வழக்காடப்பட்டதை பார்த்துள்ளோம்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் வேறு சிலரும் சம்பந்தப்பட்ட வழக்கில் கூட முன்கூட்டியே கைதோ காவலோ இல்லாமலேயே வழக்கு வெற்றிகரமாக நீதிமன்றத்தில் வாதிடப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனையளிப்பதிலும் இறுதியில் உச்ச நீதிமன்றம் இந்த தண்டனையை உறுதிசெய்வதிலும் போய் முடிந்தது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) எம்பிக்கள் லஞ்சம் பெற்ற வழக்கு மற்றொரு எடுத்துக்காட்டு. கர்நாடகத்தில் வருவாய்க்கு மாறாக சொத்து சேர்த்திருப்பதாகவோ அல்லது ஊழல் தவிர்ப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இதர பல வழக்குகளிலோ குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யாமலேயே அல்லது வழக்கு முடிவதற்கு முன்னர் நீண்ட காலம் சிறையில் வைக்காமலேயே வெற்றிகரமாக வழக்காடப்பட்டன. இத்தகைய பின்னணியில், முன்ஜாமீன் வழங்குவது குறித்து சட்டத்தில் மாற்றம் எதுவும் செய்யத் தேவை இல்லை என்ற கருத்தில் நான் தெளிவாக இருக்கிறேன்.

சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை என்பதையும் தண்டனை பெறுவதற்கு முன்னரே தண்டனையளிக்கும் முகமாக ஒரு நபர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படக்கூடாது என்பதையும் ஒருவர் மனதில் கொள்ள வேண்டும். எனவே கைது செய்வதையும் காவலில் வைப்பதையும் ஒரு வழமையான நடைமுறையாக கடைப்பிடிப்பது தவிர்க்கப்பட வேண்டும். புலனாய்வுக் கழகங்கள் தங்கள் கையாலாகாத்தனத்தையோ, சில விஷயங்களில் நேர்மையின்மையையோ, மூடிமறைக்க முன்ஜாமீன் சட்டப்பிரிவை குறைகூற முடியாது.

நீதிமன்றங்கள் முன்னதாக அளித்த பல தீர்ப்புகள் சட்டங்களுக்கு போதிய கவனம் செலுத்தாமலேயே அளிக்கப்பட்ட தீர்ப்புகள், ஏனெனில் அரசியல் சட்ட அமர்வு நீதிமன்றம் குர்பக்ஷ் சிங் சிப்பா வழக்கில் (1980, 2 SCC 565) 1 கூறிய தர்க்கம் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது அல்லது புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் சித்தராம் சத்லிங்கப்பா மேத்ரேவுக்கும் மகாராஷ்டிரா மற்றும் இன்னும் சிலருக்குமிடையிலான வழக்கின் போது (211, SCC 694) 2 கருத்து தெரிவிக்கையில் முன்ஜாமீன் வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் ஜாமீன் வழங்குவதற்கு உள்ள அதே வழிகாட்டுதல்கள் தானேயன்றி வேறல்ல, முன்ஜாமீன் வழங்குவதை பிரத்யேகமான விஷயமாக எவரும் கருத வேண்டியதில்லை என்றும் சுட்டிக்காட்டியது. அதை வழக்கத்திற்கு மாறான தீர்வுமுறையாக கருத முடியாது, ஒரு சில விதிவிலக்கான விஷயங்களில் மட்டுமே முன்ஜாமீன் மறுக்கப்படலாம்.

**முன்ஜாமீன் மனுவை நிராகரிப்பது தனிநபர் ஒருவரின் உரிமையை நிர்வாகத்துறையின் தயவுக்கேற்ப அடகுவைப்பதற்கு நிகரானதாகும், அதுவும் பொருளாதாரக் குற்றங்கள் என்று வரும் போது என்ற கருத்துடன் நீங்கள் உடன்படுகிறீர்களா?**

முன்ஜாமீன் வழங்குவதா அல்லது மறுப்பதா என்பது நீதியரசரின் சீரிய சீர்தூக்கிப்பார்க்கும் உணர்வுக்கு உட்பட்டது. அவர் அந்த வழக்கு குறித்த அனைத்து விவரங்களையும் சூழ்நிலைகளையும் கணக்கிலெடுத்து ஒரு முடிவெடுக்க வேண்டும். தனிநபர் சுதந்திரமென்பது அரசியல் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள ஒரு குடிமகன் அல்லது குடிமகளின் மிகவும் போற்றிப் பேணப்படும் அடிப்படை உரிமையாகும். கைது செய்வதற்கு போலீசாருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உரிமை புறக்காரணங்களுக்காக பெரும்பாலும் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. அர்னேஷ் குமாருக்கும் பிஹார் மாநிலம் மற்றும் இன்ன சிலருக்கும் இடையிலான வழக்கில் (2014, 8 SCC 273) 3 , புலனாய்வுக் கழகத்திற்கு அதற்கான அதிகாரம் இருக்கிறது என்பதனாலேயே குற்றம் சாட்டப்பட்ட நபரொருவர் கைது செய்யப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. எங்கு முற்றிலுமாகத் தேவையோ அங்கு மட்டுமே கைது செய்வதற்கான உரிமை பயன்படுத்தப்படவேண்டும். கைது செய்வதற்கான உரிமை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை உணர்ந்து பாராளுமன்றம் 41A என்ற சட்ட உட்பிரிவை அறிமுகப்படுத்துவதன் மூலம் குற்றவியல் நடைமுறை சட்டத்தை நிறுத்தியுள்ளது. இந்த உட்பிரிவின் படி, அதில் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் நிறைவேறாத பட்சத்தில் கைது செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தங்கள் எல்லாம் செய்யப்பட்டிருந்தாலும் கைதுசெய்வதற்கான இந்த அதிகாரம் இன்றளவில் பெரும்பாலும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் உச்ச நீதிமன்றம் முன்வைத்துள்ள வழிகாட்டுதல்கள் மீறப்படுகின்றன என்பதையே எமது அனுபவம் காட்டுகிறது.

முன்ஜாமீன் வழங்கும் ஒரு நீதிமன்றம் கைது செய்வதற்காக விதிக்கப்பட்டிருக்கும் முன்நிபந்தனைகளை குறைந்தபட்சம் மனதில் கொள்ளவேண்டும். குறிப்பிட்ட வழக்கு ஒன்றில் கைது தேவையில்லை என்று நீதிமன்றம் கருதினால் வழக்கமாக முன்ஜாமீன் வழங்கப்படவேண்டும். முன்ஜாமீன் வழங்குவது ஒரு விதியாகவும் வழங்க மறுப்பது ஒரு விதிவிலக்காகவும் இருக்க வேண்டும். சாதாரண நிலைமைகளில் கூட முன்ஜாமீன் வழங்க மறுப்பது தனிநபர் சுதந்திரத்தை நிர்வாகத்துறையின் மனம்போனபோக்கிற்கு சரணடைய வைப்பதற்கு ஒப்பானதாகும் என்ற கருத்தோடு நான் உடன்படுகிறேன். நபரொருவரின் தனிநபர் சுதந்திரத்தை உயர்த்திப்பிடிப்பது நீதிமன்றங்களின் கடமையாகும். துரதிருஷ்டவசமாக முன்பு கூறப்பட்டபடி குர்பக்ஷ் சிங் சிப்பா வழக்கில் அரசியல் சட்ட அமர்வு முன்வைத்த மற்றும் அதையடுத்து நன்கு அறியப்பட்ட சித்தராம் சத்லிங்கப்பா மேத்ரே வழக்கிலும் பின்பற்றப்பட்ட இந்த விஷயத்தில் நிலவவேண்டிய நீதிமன்றத்தின் அடிப்படைக் கடைமை உச்ச நீதிமன்றத்தின் சில சமீப கால முடிவுகளில் புறக்கணிக்கப்படுகின்றது. முந்தைய முடிவுகள் குடிமக்களின் தனிநபர் சுதந்திரத்திற்கு பெரும் முக்கியத்துவம் வழங்கியிருக்கையில் சில சமீப முடிவுகள் புலனாய்வுக் கழகங்களுக்கு ஆதரவாக இருக்கத் தலைப்படுகின்றன.

உச்ச நீதிமன்றம் தனிநபர் சுதந்திரத்தை நீர்த்துப்போகச்செய்யும் முயற்சியில் சில விதிவிலக்குகளை உருவாக்க முயற்சிக்கிறது. பொருளாதாரக் குற்றங்கள் அத்தகையதோர் விதிவிலக்காகும். உச்ச நீதிமன்றம் சமீபத்தில் நடைபெற்ற ப.சிதம்பரத்திற்கும் அமலாக்கத்துறைக்குமிடையிலான வழக்கில் மேற்குறிப்பிட்ட அரசியல்சட்ட அமர்வின் தீர்ப்பு உள்பட முந்தைய தீர்ப்புகளால் உத்திரவாதம் செய்யப்பட்ட பாதுகாப்புகளை முற்றிலும் செல்லாக்காசாக்கிவிட்டது. பொருளாதாரக் குற்றங்கள் குறித்த விசாரணை மிகவும் கடினமானதொன்று என்பதால் அத்தகைய வழக்குகளில் முன்ஜாமீன் மறுக்கப்படவேண்டும் என்ற நிர்வாகத்துறையின் வாதத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் ஒரு தனிநபரின் உரிமையை பறிக்க அரசியல்சட்ட அமர்வின் தீர்ப்பைகூட உதாசீனப்படுத்துவது வரவேற்கத்தக்க ஒன்று அல்ல. முன்ஜாமீனை வழக்கமான ஜாமீனுக்கு சமமாகக் கருதிய முடிவுகள் புறக்கணிக்கப்பட்டு அதற்கு நேரெதிரான கருத்து தெரிவிக்கப்படுகிறது. சுருங்கக் கூறுவதானால், சிதம்பரத்திற்கும் அமலாக்கத்துறைக்குமிடையிலான வழக்கு 4 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (Cr.P.C.) பிரிவு 438ஐ செல்லாக்காசாக்கிவிட்டது.

(பேட்டி தொடர்ச்சி மதியம் ஒரு மணி பதிப்பில்)

தமிழாக்கம்: சிவராமன்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *