யூடியூபர் இர்ஃபான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவிக்கும் வீடியோவை வெளியிட்டது பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், அந்த வீடியோவை தற்போது நீக்கியுள்ளார்.
பிரபல யூடியூபரான இர்ஃபான் ‘Irfan’s View’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இதில், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு உணவு வகைகளை சுவைத்து ரிவியூ சொல்வதும், திரைபிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை பலரை பேட்டி எடுப்பது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
இந்த சேனலை யூடியூபில் 4.26 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். அத்தோடு மற்ற சமூகவலைதளங்களின் மூலமாக 60 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இர்ஃபானை பின் தொடர்கிறார்கள்.
இர்ஃபான் 2023 மே மாதம் ஆலியாவை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண விழாவில் பல யூடியூப் பிரபலங்கள், திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் இர்ஃபான் தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் ‘Boy or Girl’ என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்டார். இதன்மூலம், தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.
தொடர்ந்து, நேற்று (மே 20) இர்ஃபான், தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதற்கு முன்னதாக, துபாய் சென்ற இர்ஃபான் – ஆலியா தம்பதியினர் அங்குள்ள மருத்துவமனையில் பிறக்க போகும் குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேன் எடுத்து தெரிந்துகொண்டனர்.
இதனை அனைவருக்கும் அறிவிக்கும் விதமாக குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஒரு பார்டியை ஏற்பாடு செய்திருந்தார் இர்ஃபான். குழந்தையின் பாலினம் குறித்து ஒரு பலூன் சுடும் விளையாட்டு வைத்து, அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோவை சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்தியாவில் பிறக்கப்போகும் குழந்தைகளின் பாலினத்தை வெளியிட தடைவிதித்து ‘பாலினத் தேர்வுத் தடைச் சட்டம்’ 1994ல் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டத்தை மீறி இந்தியாவில் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவிக்கப்பட்டால், அவர்களுக்கு அபராதம் அல்லது 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
அந்த வகையில், இர்ஃபான் குழந்தையின் பாலினம் தொடர்பாக வெளியிட்ட வீடியோ தவறு என்றும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, இந்த வீடியோ தொடர்பாக இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த வீடியோவை நீக்க யூடியூப் நிறுவனத்திற்கு மருத்துவத்துறை கடிதம் அனுப்பி இருந்தது.
தொடர்ந்து, பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் அறிவித்தது தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட மருத்துவக்குழு நியமிக்கப்பட்டது. இந்நிலையில், குழந்தையின் பாலினம் தொடர்பாக வெளியிட்ட வீடியோவை இர்ஃபான் தற்போது நீக்கியுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…