கடந்த மே 16-ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டத்தில் தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-ஆவது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று (மே 21) டெல்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் நேரிலும், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் காணொலி காட்சி மூலமாகவும் கலந்துகொண்டனர்.
“கர்நாடகாவில் உள்ள நான்கு முக்கிய அணைகளில் 19.17 டிஎம்சி தண்ணீர் உள்ளது. ஆனால், அவர்களது குடிநீர் தேவைக்கு 4 டிஎம்சி தண்ணீர் மட்டுமே போதுமானது. எனவே நிலுவையில் உள்ள தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும்” என்று தமிழக அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
“கர்நாடகா அணைகளில் போதிய நீர் இல்லை. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருவதால், அவர்களுக்கு தேவையான நீர் கிடைத்துவிடும்” என்று கர்நாடகா அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு மே மாதம் 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டமானது ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘லாலேட்டன்’ – என்றும் இனிக்கும் இளமைத் துள்ளலின் அடையாளம்!
ஈரான் அதிபர் இறுதி ஊர்வலம்: பொதுமக்கள் அஞ்சலி!