முருகனை பாஜக தலைவராக்கியதில் முரசொலிக்கும் பங்கு!

politics

தமிழக பாஜக தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அரசியல் பதவியில் இருந்த தமிழிசையை அரசுப் பதவிக்கு அனுப்பிய பாஜக, அதன் பிறகு ஆறு மாதங்களாக தமிழக பாஜகவுக்கு தலைவர் யாரென்று தேடி, கடைசியில் அரசுப் பதவியில் இருக்கும் எல். முருகனை அரசியல் பதவிக்குக் கொண்டு வந்திருக்கிறது.

தேசிய எஸ்.சி.,எஸ்.டி.ஆணைய துணைத் தலைவராக தற்போது பதவி வகித்துக் கொண்டிருக்கும் முருகன், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர். இளம்பருவத்தில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்தவர். நாமக்கல்லில் தன் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கியவர், பின் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். 15 வருட வழக்கறிஞர் அனுபவம் கொண்ட எல்.முருகன் பாஜகவின் எஸ்.சி.எஸ்.டி. பிரிவின் தேசிய செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஜேபி நட்டாவின் இந்த மூவ் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசையின் ஆதரவாளராகக் கருதப்படுபவர் முருகன். தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தின் துணைத் தலைவர் என்னும் முக்கியமான பதவிக்கு முருகனை பரிந்துரைத்ததில் தமிழிசைக்கும் பெரும் பங்குண்டு என்கிறார்கள் தமிழக பாஜகவினர். இந்தப் பதவியில் இருந்தபோது இந்தியாவெங்கும் தலித் மக்கள் தாக்கப்பட்டபோது பல இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியவர் முருகன். ஆனாலும் இவரை தமிழக பாஜக தலைவர் அளவுக்குக்கொண்டு வந்ததில் முக்கியப் பங்கு வகித்தது இரு விஷயங்கள்.

**முரசொலி பஞ்சமியில் முருகனின் பங்கு!**

திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புகார் கூறிய சில நாட்களில், பாஜகவின் மாநிலப் பொதுச் செயலாளர் மதுரை சீனிவாசன் இது தொடர்பாக தேசிய எஸ்சி.எஸ்.டி ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று புகார் அளித்தார். அந்த புகாரைப் பெற்ற ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் உடனடியாக இந்த விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் எஸ்.சி.,எஸ்.டி. ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜனவரி மாதம் சம்மன் அனுப்பினார்.

இந்த சம்மனுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அந்த வழக்கு விசாரணையிலேயே முருகன் யார் என்பது பற்றியும் அவரது அரசியல் பின்னணி பற்றியும் கூறினார். இவ்வழக்கில் திமுக சார்பில் வாதாடிய பி.வில்சன், “ தற்போது ஆணையத்தின் துணைத் தலைவராக இருக்கும் முருகன் கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். அவர் பாரதிய ஜனதா கட்சியின் எஸ்சி,எஸ்டி அணியின் தேசிய செயலாளராக பதவி வகித்தவர். அவர் தற்போது தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் துணைத் தலைவராக செயல்பட்டு வருகிறார். முரசொலி நில விவகாரம் தொடர்பாக முருகன் விசாரணை மேற்கொண்டால் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விசாரணை மேற்கொள்வார். எனவே முருகன் இதிலிருந்து விலகியிருக்க வேண்டும்” என்று வாதாடினார்.

இது தொடர்பாக உயர் நீதிமன்றம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டியதில்லையென உத்தரவிட்டது. மேலும், தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் இந்த விவகாரத்தை விசாரிப்பதிலிருந்து அதன் துணைத் தலைவர் முருகன் விலகியிருக்க வேண்டும் என்றும் கூறியது.

**திருச்சி பாஜக பிரமுகர் கொலை**

ஜனவரி 27 ஆம் தேதி திருச்சி பாஜக பிரமுகர் விஜய் ரகு மிட்டாய் பாபு என்கிற முகமது பாபு என்பவரால் வெட்டிக் கொல்லப்பட்டார். இது குறித்து திருச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கொல்லப்பட்டவர் பாஜக, கொலை செய்தவர் இஸ்லாமியர் என்பதால் பதற்றம் ஏற்பட்டது.

உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று விஜயரகுவின் உடலைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய மண்டல ஐஜியும், மாநகர காவல் பொறுப்பு ஆணையருமான அமல்ராஜ் ,

“பா.ஜ.க பிரமுகர் விஜயரகு கொலை மதரீதியிலான கொலை அல்ல. கொலையில் 3 பேர் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொலைக் குற்றவாளிகள் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை, இரண்டுக்கும் மேற்பட்ட மதத்தினர் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது நபர் என்ன மதம் என்பது தெரியவில்லை. குற்றவாளிகள் யார் என அடையாளம் கண்டுள்ளோம். குற்றவாளிகளைப்பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குற்றவாளிகளில் ஒருவர் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு போன 10-ம் தேதிதான் வெளியில் வந்துள்ளார். அவர் பிணையில் வந்து அதன் நிபந்தனைகளை அனுசரிக்கவில்லை என்பது குறித்து விசாரிப்போம். கொலை நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன. அதில் அவர்கள் வருவது தெரிகிறது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.

ஆனால், இரு நாட்கள் கழித்து திருச்சிக்கு வந்த தேசிய எஸ்.சி,எஸ்டி. ஆணைய துணைத் தலைவர் முருகன், கொலை செய்யப்பட்ட விஜய் ரகு தாயார், மனைவி தங்கா, மகள் காயத்ரி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முருகன்,

“விஜயரகு குறித்து அவரது வீட்டில் விசாரிக்கையில், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக விஜய் ரகு தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கேரளத்திடமிருந்து தமிழகத்திலும் லவ் ஜிகாத் கலாச்சாரம் பரவி இருக்கிறது. அதற்கு விஜய் ரகு கொலை வழக்கு ஒரு உதாரணம். அவரது 17 வயது நிரம்பிய மகளைத் திருமணம் செய்துதர வேண்டும் என்று தொடர்ச்சியாக ரவுடி மிட்டாய் பாபு வற்புறுத்தியதாகவும், இதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதன் காரணமாகவே இந்த கொலை நடந்திருக்கலாம்”என்று தெரிவித்தார்.

முரசொலி பஞ்சமி நில விவகாரம், திருச்சி பாஜக பிரமுகர் கொலை இரண்டு விவகாரங்களிலுமே தேசிய எஸ்.சி., எஸ்டி. ஆணைய துணைத் தலைவர் என்ற பொறுப்பான அரசியல் சாசன பதவியில் இருந்தபோதும் பாஜக காரராகவே அரசியல் செய்தார் முருகன். இவை டெல்லியால் கவனிக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே இவருக்கு பாஜக மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

தமிழக பாஜகவிலேயே சிலர் நம்மிடம், “முழுக்க முழுக்க டெல்லியிலேயே இருக்கும் முருகன் இனி தமிழக பாஜக தலைவராக எதிர்கொள்ள நிறைய சவால்கள் இருக்கின்றன. குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துக்கும் இவர் மிக நெருக்கமானவர். சில மாதங்களாக தெலங்கானா ஆளுநர் தமிழிசையை ஹைதரபாத் சென்று அடிக்கடி சந்தித்துப் பேசிவந்தார். அதனால் தமிழிசை விட்டுப் போன வெற்றிடத்தை தமிழிசை மூலமாகவே டெல்லி நிரப்பியிருக்கிறது என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. முருகன் எளிமையானவர், பழகுவதற்கு இனியவர் என்றாலும் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்காக ஆறு மாதம் போரிட்டுக் கொண்டிருந்த மற்ற பாஜக தலைவர்கள் முருகனுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார்களா என்பது இனி போகப் போகத்தான் தெரியும்” என்கிறார்கள்.

**-ஆரா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *