நெம்மேலியில் அமைக்கப்பட்டு வரும் கடல்நீரைக் குடிநீராக்கும் புதிய சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் கிழக்குக் கடற்கரைச் சாலை, நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் மற்றும் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே, மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் முதல் நிலையம் முன்னாள் முதல்வர் கலைஞரால் 2010ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
இரண்டாவது நிலையமாக நெம்மேலியில் 805. 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2013ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 19) தமிழக முதல்வர் ஸ்டாலின் , 1259 .38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்காக நடைபெற்று வரும், கடல்நீரை உள் வாங்கும் ஆழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட நீர்த்தேக்க தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட நீர் உந்து நிலையம், வடிகட்டப்பட்ட கடல் நீர்தேக்கத் தொட்டி போன்ற கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, இப்பணிகளை ஏப்ரல் 2023க்குள் முழுமையாக முடித்திட வேண்டும் என அதிகாரிகளிடம் முதல்வர் அறிவுறுத்தினார்.
மேலும், இத்திட்டத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திலிருந்து பல்லாவரம் வரை குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த குழாய் பதிக்கும் பணிகளையும் மூட்டுக்காடு பகுதியில் முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்திட்டத்தின் வாயிலாகப் பெறப்படும் குடிநீர் மூலம், தென்சென்னைப் பகுதிகளான உள்ளகரம்-புழுதிவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், புனித தோமையார் மலை, பல்லாவரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப வழித்தடப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 9 லட்சம் மக்கள் பயனடைவர்.
இந்நிகழ்வில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
**-பிரியா**
�,