ஜூலை 26 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் : அமைச்சர் பொன்முடி

Published On:

| By Balaji

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், ஜூலை 26ஆம் தேதி முதல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று(ஜூலை 19) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, ”திருவள்ளுவர் பல்கலைகழகத்தில் பணியாற்றிய கவுரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டதற்கு விரிவுரையாளர்கள் நேரில் வந்து நன்றி தெரிவித்தனர். கடந்த ஆட்சி காலத்தில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய குழு அமைக்கப்பட்டது. முறைகேடு காரணமாக அந்த குழு கலைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கவுரவ விரிவுரையாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய தேர்வு நடத்தப்படும். அதுகுறித்து பின்னர் அறிவிக்கப்படும். தற்போது அனைத்து கல்லூரிகளிலும் உள்ள கவுரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து பணியாற்றலாம்” என்று பேசினார்.

பிளஸ் 2 மதிப்பெண் வெளியீடு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிளஸ் 2 தேர்வு முடிவுகளை இன்று காலை வெளியிட்டார். இன்று மாணவர்கள் தேர்வு மதிப்பெண்களை ஆன்லைன் மூலம் தெரிந்து கொண்டாலும், முறையாக ஜூலை 22ஆம் தேதிமுதல்தான் மதிப்பெண் பட்டியல் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

அந்த மதிப்பெண்கள் மாணவர்களுக்கு சென்றடைந்தவுடன், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரி உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கும். மாணவர்கள் ஜூலை 26 ஆம் தேதியில் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிற காரணத்தால், அவர்களுக்கும் கால அவகாசம் வழங்கும் வகையில் ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களுக்கு ஏற்ப அந்தந்த கல்லூரிகளில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பங்களின் அடிப்படையில் DOTE மூலம் மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யப்படும். சேர்க்கைக்காக எல்லா கல்லூரிகளும் தயாராகலாம்” என்று தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அமைச்சர் ”அதுகுறித்து பிறகு அறிவிக்கப்படும். நிதிநிலை அறிக்கையில் பாருங்கள்” என்று கூறினார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share