என்.பி.ஆருக்கு தகவல்கள் அளிக்காதீர்: திமுக கூட்டணி தீர்மானம்!

politics

எஎன்.பி.ஆர் கணக்கெடுப்புக்கு தகவல்கள் அளிக்க வேண்டாம் என்று திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் சிஏஏவுக்கு எதிராக மிகப்பெரிய பேரணியை டிசம்பர் மாதம் சென்னையில் நடத்தினர்.

இந்த நிலையில் அடுத்தக்கட்ட போராட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்த திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜனவரி 24) சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில், திமுகவின் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆரை அமல்படுத்தியதன் மூலம் மக்களை போராட்டக் களத்தில் தள்ளி, பொருளாதாரச் சீரழிவுகளில் இருந்து தேசிய அளவில் கவனத்தைத் திசை திருப்பவும் – தனது பிற்போக்கு அடிப்படைவாத சித்தாந்தத்தை நிறைவேற்றவும் மத்திய பா.ஜ.க. அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, “குடியுரிமைச் சட்ட விதிகளின் அடிப்படையில் என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகியவற்றைத் தயாரித்து – இந்தியாவின் பாரம்பரியமான பன்முகத் தன்மையைச் சிதைத்து – வேற்றுமையில் ஒற்றுமை கண்டு நல்லிணக்கம் போற்றும் மக்கள் மத்தியில் – பேதத்தையும், பிளவையும் உண்டாக்கி – தமது அடிப்படைவாதச் சித்தாந்தத்தை ஈடேற்றுவதற்குத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசையும், சுயநலத்தோடு அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க அரசையும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது” என்று தீர்மானத்தில் கூறியுள்ளதோடு,

“தமிழ்நாட்டில் என்.பி.ஆர்-ஐ அனுமதிக்கமாட்டோம் என்று முதலமைச்சர் பழனிச்சாமி அமைச்சரவை கூட்டத்தை உடனடியாக கூட்டி தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும். இத்துடன் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படுமானால், அதுகுறித்து, எவ்வித தகவல்களையும் அளிக்க வேண்டாமென பொதுமக்களை அனைத்துக் கட்சிகளின் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது” என்று வேண்டுகோளும் வைக்கப்பட்டுளது.

மேலும், “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும், என்.ஆர்.சிக்கு வழிகோலும் என்.பி.ஆர் தயாரிப்பதை நிறுத்தக் கோரியும், அனைவரது எதிர்வினைச் சிந்தனைகளையும் ஒருமுகப்படுத்தி, மாபெரும் மக்கள் இயக்கம் ஒன்றை முன்னெடுக்கும் வகையில், 2020 பிப்ரவரி 2ஆம் தேதி (ஞாயிறுக்கிழமை) முதல் பிப்ரவரி 8ஆம் தேதி (சனிக்கிழமை) வரை “கையெழுத்து இயக்கம்” நடத்திடுவது என்றும்; அப்படிப் பெறப்பட்ட கையெழுத்துப் படிவங்களை, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் – குடியரசுத் தலைவர் அவர்களைச் சந்தித்து அளித்து, தமிழக மக்களின் ஏகோபித்த எண்ணத்தின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவது என்றும்; அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது” என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் இயக்கமான “கையெழுத்து இயக்கத்திற்கு” அனைத்துத் தரப்பு மக்களும், தங்கள் ஆதரவை வழங்க வேண்டுமென அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *