‘மோடி திமிர்பிடித்தவர்’ : மேகாலயா ஆளுநர்!

politics

‘பிரதமர் மோடி திமிர்பிடித்தவர்’ என்று மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் கூறிய வீடியோ ஒன்று வைரலாகி தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் நேற்று (ஜனவரி 2) ஹரியானா மாநிலம் தாத்ரியில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அதுதொடர்பான வீடியோ இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ‘நான் சமீபத்தில் பிரதமரைச் சந்தித்த போது, வேளாண் சட்டங்கள், விவசாயிகள் குறித்துப் பேச ஆரம்பித்தேன். பேச ஆரம்பித்த 5 நிமிடங்களிலேயே எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுவிட்டது. அவரிடம் சொன்னேன்… 500 விவசாயிகள் இறந்துவிட்டார்கள் என்று. அதற்கு அவர், எனக்காகவா இறந்தார்கள் என கேட்டார்.

ஆமாம்… நீங்கள் தான் இந்த நாட்டின் ராஜா என்று சொன்னேன். இதையடுத்து சண்டைபோட்டுவிட்டுக் கிளம்பிவிட்டேன். அப்போது அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கச் சொன்னார். அவர் மிகவும் திமிர்பிடித்தவர்

தொடர்ந்து அமித்ஷாவைச் சந்தித்தேன். அவர் பேசும்போது, அவர்(மோடி) எதோ பேசிவிட்டார் விடுங்கள். தொடர்ந்து என்னைச் சந்தியுங்கள் என்றார்” என்று கூறுகிறார்.

இந்த விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. ஆளுநரின் வீடியோவை காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, இது பிரதமரின் அனைத்து குணங்களையும் காட்டுவதாக விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, “மேகாலயாவின் ஆளுநர், விவசாயிகள் பிரச்சினையில் பிரதமர் ‘திமிர்பிடித்தவர்’ என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரதமரை ‘பைத்தியம்’ என்று அழைத்ததாகவும் ஆன் ரெக்கார்டாக கூறியிருக்கிறார்.

அரசியலமைப்பு அதிகாரிகள் ஒருவரையொருவர் இவ்வளவு அவமதிப்புடன் பேசுகிறார்களா?

நரேந்திர மோடி ஜி இது உண்மையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கருத்துகள் தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் சத்ய பால் மாலி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

இன்று என்டிடிவிக்கு அவர் அளித்த பேட்டியில், “பிரதமர் நான் பேசியதைக் கேட்கத் தயாராக இல்லை. கவலைகளை வெளிப்படுத்தும் போது நிராகரித்தார். அமித்ஷாவை சந்திக்கச் சொன்னார். அமித்ஷாவைச் சந்தித்தேன். அமித்ஷா மோடியை மிகவும் மதிக்கிறார். பிரதமரை மக்கள் தவறாக வழிநடத்துகிறார்கள் என்று அமித்ஷா சொன்னார். மூன்று வேளாண் சட்டங்கள் மீதான சர்ச்சையை ஒரு நாள் பிரதமர் புரிந்து கொள்வார் என்று கூறினேன். அமித்ஷா பிரதமரைப் பற்றி எதுவும் தவறாகக் கூறவில்லை என்று தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, இவ்விவகாரத்தில் மோடி மற்றும் அமித்ஷா தங்களது மவுனத்தைக் கலைக்க வேண்டும். ஆளுநர் மாலிக் பொய் சொல்லியிருந்தால் இன்றே அவரை பதவி நீக்கம் செய்து, அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யுங்கள். அவர் பொய் சொல்லவில்லை என்றால், பிரதமரும் உள்துறை அமைச்சரும் தாமாக முன் வந்து விவசாயிகளின் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *