நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் குறித்து நாளைக்குள் மாவட்ட ஆட்சியர்கள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாகப் பெய்த கனமழையின் காரணமாக பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. குறிப்பாகச் சென்னை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் மழை நின்றும் தேங்கியுள்ள மழைநீர் வடியாத சூழல் இருக்கிறது. இதற்கு, நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டியதுதான் காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்தச் சூழலில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நேற்று முன்தினம் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்டு அவற்றை அகற்ற வேண்டும் என்று 2018ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை அரசு தீவிரப்படுத்த வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ. ரவீந்திரன், அரசு பிளீடர் முத்துக்குமார், சிறப்பு அரசு பிளீடர் அனிதா ஆகியோர் ஆஜராகி நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா சார்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்தனர்.
அதில், “ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆக்கிரமிப்புகள் தொடர்பாகத் தொடர் கண்காணிப்பு நடந்து வருகிறது. நீர்நிலைகளை ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கும் முன்னோடி திட்டத்தை சிட்லபாக்கம் ஏரியில் முதல்கட்டமாக அமல்படுத்த உள்ளோம்.
அதேபோன்று நீர்நிலைகளில் ஆக்கிரமித்துக் குடியிருந்தவர்களுக்கு மறுகுடியமர்வு செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்துக் கடந்த மாதம் தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆக்கிரமிப்பாளர்களுக்கு மின் இணைப்பு , குடிநீர் இணைப்பு தரப் படமாட்டாது.
சம்பந்தப்பட்ட நிலத்தைப் பதிவு செய்வதற்கு முன்னால் பதிவுத் துறை அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. நீர்நிலை புறம்போக்கு இடங்களில் எந்தவித அரசு அலுவலகங்களும் கட்டப்படாது. நீர்நிலைகளின் எல்லைகளை நிர்ணயித்து எல்லைக் கற்கள் நடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மனுதாரர்கள் தரப்பில், தனியார் ஆக்கிரமிப்பு மட்டுமல்லாமல் நீர்நிலைகளிலேயே குப்பை கொட்டும் மைதானம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் ஆகியவை அமைத்து அரசும் ஆக்கிரமித்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். தவறும்பட்சத்தில் தலைமைச் செயலாளரை ஆஜராக உத்தரவிட்டு விளக்கம் கேட்க நேரிடும். ஆக்கிரமிப்புகளை அகற்ற இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவிட்டும் போதிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இந்த விஷயத்தில் நீதிமன்றம் இனி சமரசமாகக் கருணை காட்டாது என்று கூறி வழக்கு விசாரணையை டிசம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ஒருவாரம் மட்டுமே நீதிமன்றம் அவகாசம் கொடுத்த நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார் தலைமைச் செயலாளர் இறையன்பு. நீர்வளத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் சட்டத் துறை இயக்குநர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அப்போது, வருவாய்த் துறை ஆவணங்களின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகளின் விவரங்கள், அவற்றில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள விவரங்கள் ஆகியவற்றைக் கணக்கெடுப்பு செய்து விரிவான அறிக்கையை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் நீர்வளத் துறை வழங்கியுள்ள படிவங்கள் I, II, மற்றும் III-ல் பூர்த்தி செய்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளருக்கு 4.12.2021-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.
மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் பற்றாளராகச் செயல்பட்டு மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து அறிக்கைகளைப் பெற்று நீதிமன்றத்தில் 07.12.2021-க்குள் அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.
மாவட்ட ஆட்சியர்கள் எந்த சுணக்கமும் காட்டாமல் இரவு, பகலாகக் கணக்கெடுப்பு நடத்தித் தெளிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியாளர்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்குவது குறித்த பட்டியலை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
**-பிரியா**
�,