கோடி ஓட்டு கிடைத்தால் குவாட்டர் மது ரூ.70 : பா.ஜ.க. தலைவரின் பகீர்!

politics

ஒரு கோடி பேர் வாக்களித்தால், குவாட்டர் அளவு மது 70 ரூபாய்க்கு விற்கப்படும் என்று ஆந்திர மாநிலத் தலைவர் ஒருவர் பகிரங்கமாக பொதுமேடையில் பேசியிருக்கிறார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேற்று பா.ஜ.க.வின் சார்பில், மக்கள் கோப சபை எனும் பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் சோமு வீர் ராஜுதான், இப்படிப் பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். வரும் 2024ஆம் ஆண்டு அந்த மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக பா.ஜ.க. முன்கூட்டியே தயாரிப்புப் பணிகளில் இறங்கிவிட்டது. இதுவரை ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமாக இருந்துவந்த பா.ஜ.க., அந்த நிலைப்பாட்டைக் கைவிட்டு, எதிர்ப்பக்கம் சென்று பேசத்தொடங்கியிருக்கிறது. ஆளும் கட்சிக்கு எதிரான பிரச்சாரத்தையும் முடுக்கிவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே ’மக்கள் கோப சபை’ கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான பிரகாஷ் ஜவடேகர், இந்த விஜயவாடா கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டார். பல மாநிலங்களில் கையாளும் உத்தியையே பா.ஜ.க. இங்கும் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது.

மறைந்த காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ராஜசேகரின் மகனான ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் அணுக்கமாக இருந்துவந்த நிலையில், இப்போது அவர் வாரிசு அரசியல் செய்வதாக பா.ஜ.க. தரப்பு புகார் வாசிக்கிறது. கூடவே தெலுங்கு தேசம் கட்சி மீதும் பா.ஜ.க. இதே குற்றச்சாட்டை வைத்துள்ளது.

இரண்டு கட்சிகளுமே வாரிசு அரசியலில் மூழ்கி, பெருமளவு ஊழலில் திளைத்துப்போய் இருப்பதாகவும் பா.ஜ.க. மட்டுமே இந்தக் கட்சிகளுக்கு மாற்று என்றும் ஊழல்மிகுந்த, அழிவுப்பாதையில் செல்லும் ஜெகன் மோகனின் ஆட்சியை வீழ்த்தவும், அடுத்த ஆட்சியை அமைக்கவும் பா.ஜ.க.வால் மட்டுமே முடியும் என்றும் ஜவடேகர் பேசினார்.

முன்னதாகப் பேசிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் சோமு வீர் ராஜு, ”ஆந்திரத்தில் மோசமான மது வகைகள் அதுவும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. பிரபலமான மதுவகைகளும் கிடைப்பதில்லை. ’ஸ்பெசல் ஸ்டேட்டஸ்’, ’கவர்னர் மெடல்’ போன்ற பெயர்களில் அவை விற்கப்படுகின்றன. கேட்டால், மதுவிலக்கு என காரணம் சொல்கிறார்கள். ஆனால், பிராந்தியை முழுவீச்சில் தயாரித்து விற்கிறார்கள். மாநிலத்தில் ஒரு கோடி பேர் குடிப்பதாக புள்ளிவிவரம் சொல்கிறது. அந்த ஒரு கோடி பேரும் எங்களுக்கு வாக்களித்தால், நாங்கள் ஆட்சிக்கு வந்து (குவாட்டர் அளவு) மது விலையை 70 ரூபாயாகக் குறைப்போம். கூடுதல் வருவாய் கிடைத்தால், அதையும் 50 ரூபாய் அளவுக்குக் குறைப்போம்.” என்று கூறினார்.

சோமுவின் இந்தப் பேச்சுக்கு பல தரப்பினரும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் அவரின் பேச்சுக்கு ஏராளமானவர்கள் எதிர்ப்பாகவும் சிலர் ஆதரவாகவும் காட்டமான கருத்துகளை வெளிப்படுத்திவருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருந்தாலும், 2024 தேர்தலுக்கான கவன ஈர்ப்பு ஒரே நாளில் பா.ஜ.க.வுக்கு கிடைத்திருக்கிறது என்றும் அந்த மாநிலத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

**-முருகு**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *