ஒரு உத்வேகமூட்டும் திரைப்படம்!
உண்மைக்கதைகளைத் திரைப்படம் ஆக்கும்போது, இரண்டு விதமான பின்னூட்டங்களை ரசிகர்களிடத்தில் பெற வேண்டியதிருக்கும். முதலாவது, இந்தப் படைப்பில் புனைவு எத்தனை சதவிகிதம் என்பது. இரண்டாவது, இதில் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது என்ன செய்கின்றனர் என்பது குறித்த தேடலை விதைப்பது. அந்த வகையில், ‘யார் இந்த ஸ்ரீகாந்த் பொல்லா’ என்று கேட்க வைக்கிறது ராஜ்குமார் ராவ், ஜோதிகா, ஆலயா, சரத் கேல்கர் நடிப்பில், துஷார் ஹிராநந்தானி இயக்கியுள்ள ‘ஸ்ரீகாந்த்’ திரைப்படம்.
சரி, அந்த அளவுக்கு இந்த படம் என்ன மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறது?
யார் இந்த ஸ்ரீகாந்த்?!
ஆந்திராவில் மச்சிலிப்பட்டினம் அருகேயுள்ள சீதாராமபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் பொல்லா. பிறந்த சில மணி நேரங்களிலேயே, அவருக்குப் பார்வை குறைபாடு இருப்பதைக் கண்டறிகின்றனர் உறவினர்கள். தந்தை உயிரோடு அக்குழந்தையைப் புதைக்க முயல, தாயின் அழுகையே அக்கொடுமையைத் தடுக்கிறது.
இளம்பருவத்தில் படிப்பில் கெட்டியாக இருக்கிறார் ஸ்ரீகாந்த். அது சக மாணவர்களை எரிச்சலில் ஆழ்த்துகிறது. ஒருநாள் ஸ்ரீகாந்தை கிரிக்கெட் விளையாட அழைத்து சண்டையிடுகிறார் ஒரு மாணவர். அவரது கையில் நாணயத்தைத் திணித்து ‘போய் பிச்சையிடு’ என்கிறார். அந்த சம்பவம், ஸ்ரீகாந்தின் மனதில் எழுச்சியை உண்டுபண்ணுகிறது.
பின்னர் ஹைதராபாதில் உள்ள ஒரு சிறப்புப் பள்ளியில் பயில்கிறார் ஸ்ரீகாந்த் (ராஜ்குமார் ராவ்). அங்கு தேவிகா (ஜோதிகா) எனும் ஆசிரியரைச் சந்திக்கிறார்.
ஸ்ரீகாந்தின் தனித்துவத்தை அறிந்து, அவரது கல்விக்கு உதவுகிறார் தேவிகா. ஒருகட்டத்தில் பள்ளியில் இருந்து ஸ்ரீகாந்த் நீக்கப்பட, அவரது கல்வி தொடரவும் வழி வகுக்கிறார்.
பதினோராம் வகுப்பில் அறிவியல் பிரிவில் ஸ்ரீகாந்த் சேர முயல, ‘பார்வைக் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளை அப்பிரிவில் சேர்க்க முடியாது’ என்கிறது ஒரு பள்ளி நிர்வாகம். அதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தனது கல்விச் செயல்பாட்டை உறுதிப்படுத்துகிறார் ஸ்ரீகாந்த்.
கல்லூரியில் சேர்கையிலும் அது தொடர்கிறது. அவரைச் சேர்க்க மறுக்கிறது ஐஐடி நிர்வாகம். அதனால், அமெரிக்காவில் இருக்கும் எம்ஐடியில் விண்ணப்பிக்கிறார் ஸ்ரீகாந்த். அங்கு, அவருக்கு ‘சீட்’ கிடைக்கிறது. அங்கு படிப்பில் மட்டுமல்லாமல், மாற்றுத்திறனாளிகளுக்கான ‘பேஸ்பால்’ ஆட்டத்திலும் ஜொலிக்கிறார்.
அமெரிக்க வாழ்க்கை முறை ஒரு வசதியான எதிர்காலம் காத்திருப்பதை அவருக்கு உணர்த்துகிறது. அந்த நேரத்தில், ஹைதராபாதைச் சேர்ந்த சுவாதி (ஆலயா) அவருக்குச் சமூகவலைதளம் வழியே அறிமுகமாகிறார்.
மருத்துவ உயர்கல்வி பயில ஸ்வாதி அமெரிக்கா செல்ல, அங்கு ஸ்ரீகாந்தைச் சந்திக்கிறார். அவரைத் தன் மனதுக்கு நெருக்கமானவராக உணர்கிறார் ஸ்ரீகாந்த்.
இந்த நிலையில், ஸ்ரீகாந்துக்கு வேலை வாய்ப்பைத் தர பல அமெரிக்க நிறுவனங்கள் முன்வருகின்றன. அப்போது, ‘சிறுவயதில் இந்தியாவின் முதலாவது பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளி குடியரசுத்தலைவர் ஆக வேண்டும் என்று அப்துல் கலாமிடம் சொன்னதை மறந்துவிட்டாயா’ என்கிறார் ஆலயா. அது, ஸ்ரீகாந்தின் வாழ்வைத் தடம் புரட்டுகிறது.
இந்தியா திரும்பும் ஸ்ரீகாந்த், சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்க முயற்சிக்கிறார். முதலில் பார்வைத்திறன் குறைபாடு உடையவர்களுக்கான கம்ப்யூட்டர் கல்வி மையத்தைச் செயல்படுத்துபவர், பிறகு கழிவுகளை மறுசுழற்சி செய்து காகிதம் தயாரிக்கும் ஆலையைத் தொடங்குகிறார். அதற்கு, தொழிலதிபர் ரவி மந்தா (சரத் கேல்கர்) உதவியாக இருக்கிறார்.
ஏற்றமும் இறக்கமும் நிறைந்த ஸ்ரீகாந்தின் வாழ்வில் மீண்டும் ஒரு திருப்பம் நிகழ்கிறது. சக மனிதர்களின் சீண்டல்களுக்கு நடுவே, தன்னைத் தாங்கிப் பிடிக்கும் தேவிகா, ரவி போன்றவர்களிடம் வெறுப்பை உமிழத் தொடங்குகிறார்.
சாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை உணர்வு மெல்ல தலைக்கனமாக மாறுகிறது. அதிலிருந்து ஸ்ரீகாந்த் விடுபட்டு வாழ்வில் உயர்வு அடைந்தாரா என்பதைச் சொல்கிறது இப்படத்தின் மீதி.
படம் முடிவடையும்போது ‘யார் இந்த ஸ்ரீகாந்த்’ என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில், ரியல் ஸ்ரீகாந்தையும் ரீல் ஸ்ரீகாந்தையும் கண்ணில் காட்டுகிறார் இயக்குனர்.
அசத்தும் ராஜ்குமார்!
’கை போ சே’ தொடங்கிப் பல படங்களில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ராஜ்குமார் ராவ். இதிலும் ஸ்ரீகாந்த் ஆகத் தோன்றி நம்மை வசீகரிக்கிறார். முன்பாதியில் அவரது ‘ஹீரோயிசம்’ வெளிப்படுவது போலவே, பின்பாதியில் கொந்தளிப்பும் மூர்க்கமும் நிறைந்த அப்பாத்திரத்தின் இன்னொரு பக்கத்தை நியாயப்படுத்தும் விதமான நடிப்பைத் தந்திருக்கிறார்.
ஆலயா இதில் சுவாதியாகத் தோன்றியிருக்கிறார். அவர் வரும் காட்சிகள் குறைவு என்றாலும், அழகாகவும் பாந்தமாகவும் வந்து போயிருக்கிறார்.
ஜோதிகாவுக்கு இப்படத்தில் ஒரு துணை கதாபாத்திரமாக மட்டுமே இடம்பெற்றிருக்கிறார். ஆனாலும், அப்பாத்திரமாக மட்டுமே உணரச் செய்வதில் தென்படுகிறது அவரது திறமை.
சரத் கேல்கர் பின்பாதியில் வந்து உற்சாகமூட்டுகிறார். இவர்கள் தவிர்த்து அப்துல்கலாமாக வரும் ஜமீல் கான் தொடங்கி ஸ்ரீகாந்தின் தாய், தந்தை, உறவினர்களாக நடித்தவர்கள், உடன் பயில்பவர்கள், நீதிமன்றக் காட்சியில் இடம்பெற்றவர்கள் என்று சுமார் இரண்டு டஜன் பேராவது இதில் முகம் காட்டியிருப்பார்கள்.
பிரதாம் மேத்தாவின் ஒளிப்பதிவு, ஒரு உண்மைக்கதையை கமர்ஷியல் திரைப்படமாக உணரச் செய்யும் வித்தையைச் சரிவர மேற்கொண்டிருக்கிறது.
தேபஸ்மிதா மித்ரா – சஞ்சய் சங்க்லா இணையின் படத்தொகுப்பு பணி, திரையில் சீராகக் கதை விரியவும் மையப் பாத்திரத்தின் உத்வேகத்தை நாம் அனுபவிக்கவும் வழி செய்திருக்கிறது.
தேஜாஸ் அம்ருத்கர், ஜேம்ஸ் நீல்சன் – மிஸ்ராவின் கலை வடிவமைப்பு ஒரு கலர்ஃபுல்லான படம் பார்க்கும் உணர்வை இடையிடையே ஏற்படுத்துகிறது. ரோஹித் சதுர்வேதியின் ஆடை வடிவமைப்புக்கும் அதில் ஒரு பங்குண்டு.
இன்னும் ஒலிக்கலவை, நிறமூட்டுதல் என்று பல பணிகள் மிகச்சரியான முறையில் திரையில் வெளிப்பட்டுள்ளன. சுமித் புரோகித் – ஜக்தீப் சித்து இணை இதில் எழுத்தாக்கத்தைக் கையாண்டுள்ளது. சில காட்சிகள் ‘க்ளிஷே’வாக தெரிந்தாலும், அவை திரையில் ‘ப்ரெஷ்’ஷாக உள்ளன. சில வசனங்கள் தனியாக ‘வாழ்த்து அட்டை’ தயாரிக்கும் விதத்தில் இருக்கின்றன.
விமானத்தில் தனியாக ஸ்ரீகாந்த் பயணிக்க அனுமதி மறுக்கப்படும் காட்சி, நிஜமாகவே அவ்விடத்தில் இருந்தது போன்ற உணர்வை நம்முள் உருவாக்குகிறது.
அது போன்ற பல காட்சிகள் முன்பாதியை நிறைக்க, ஸ்ரீகாந்தின் தொழில் தொடங்கும் முயற்சிகளும் அதன்பிறகு அவரது குணாதிசயங்களில் நிகழும் மாற்றங்களுமாகப் பின்பாதி அமைந்துள்ளது. அதனால், பின்பாதி திரைக்கதையில் பரபரப்பும் வேகமும் குறைந்தாற் போன்ற உணர்வு எழுகிறது.
உத்வேகமூட்டும் இசை!
’கயாமத் சே கயாமத் தக்’ படத்தில் ஆனந்த் – மிலிந்த் தந்த ‘பாப்பா கஹ்தே ஹைய்ன்’ பாடலின் இசையைத் தொடக்கத்திலேயே புகுத்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறார் பின்னணி இசை தந்த இஷான் சாப்ரா. அதன்பிறகு, ராஜ்குமார் ராவ் வரும் காட்சிகள் எல்லாம் ‘ஹீரோயிசம்’ தூள் பறக்கிறது. அது ரசிகர்களிடத்தில் உருவாக்கும் உத்வேகத்தில் பெரும்பங்கு இசைக்கு உண்டு.
தனிஷ்க் பக்சி, சசேத் – பரம்பரா, வேத் சர்மா, ஆதித்ய தேவ் ஆகியோர் இப்படத்தில் பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர்.
விது வினோத் சோப்ராவின் ‘12த் பெயில்’ போலவே, இப்படமும் ஒரு வெற்றியாளரின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. அப்படம் போலவே, இதிலும் யதார்த்தத்தை மீறி சினிமாத்தனம் சில காட்சிகளில் தென்படுகிறது. முந்தையதைப் போலவே, வாழ்க்கை வரலாறு எனும் பேரில் நம்மைப் போரடிக்கவில்லை இந்த ‘ஸ்ரீகாந்த்’.
அந்த வகையில், ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்வில் நிகழ்ந்த சுவையான சம்பவங்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் துஷார் ஹிராநந்தானி. ‘பவர்ஃபுல்’லாக காட்சியாக்கத்தால் அவரது வாழ்வை நம் முன்னே கடை விரித்திருக்கிறார்.
மொத்தக் கதையும் ஸ்ரீகாந்த் பொல்லாவின் ‘வாய்ஸ் ஓவரில்’ வெளிப்படுகிறது. அந்த ஒரு விஷயம் மட்டுமே இத்திரைப்படத்தில் உறுத்தலான விஷயம். அதைத் தவிர்த்துவிட்டால், நம் நினைவலைகளில் ’ஸ்ரீகாந்த்’ என்றென்றும் இடம்பிடிக்கும். முக்கியமாக, விடுமுறையில் குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்துச் செல்லும் வகையில் இப்படம் நிச்சயம் இருக்கும்!
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நடிகர் சங்க கட்டிட பணிக்கு தனுஷ் கொடுத்த ஃபண்ட் – எவ்வளவு தெரியுமா?
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்!
அமெரிக்கா செல்லும் முதல்வர் ஸ்டாலின்
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு ரிசல்ட்: 93.60 சதவீதம் பேர் தேர்ச்சி!