கமல்ஹாசனின் 234வது படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்குகிறார். அந்த படத்திற்கு தக் லைஃப் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
நாயகன் படத்தின் வெற்றிக்கு பின் கமல்ஹாசனும் மணிரத்னமும் கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் படம் என்பதால் தக் லைஃப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.
இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவு, படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
கமல ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தக் லைஃப் படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தில் நடிகை த்ரிஷா, நடிகர் சிம்பு, நடிகர் கௌதம் கார்த்திக், நடிகர் ஜோஜூ ஜார்ஜ், நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, நடிகை அபிராமி, நடிகர் நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தின் புரோமோ வீடியோக்கள், போஸ்டர்கள், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
முதலில் இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவியும் நடிகர் துல்கர் சல்மானும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இருவருமே இந்த படத்தில் இருந்து விலகியதால், நடிகர் துல்கர் சல்மானின் கதாபாத்திரத்தில் தற்போது நடிகர் சிம்பு நடித்து வருகிறார்.
சமீபத்தில் தக் லைஃப் படத்தில் சிம்பு கதாபாத்திரத்திற்கான அறிமுக வீடியோ வெளியாகி வைரல் ஆனது.
நடிகர் ஜெயம் ரவி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தற்போது நடிகர் அசோக் செல்வன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தக் லைஃப் படத்தின் பிசினஸ் குறித்து ஒரு புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
ஏபி இண்டர்நேஷனல் மற்றும் ஹோம் ஸ்கிரீன் என்டர்டைன்மென்ட் ஆகிய இரு நிறுவனங்கள் தக் லைஃப் படத்தின் சர்வதேச திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் தக் லைஃப் படத்தின் உரிமையை MG அடிப்படையில் 63 கோடி ரூபாய்க்கு பிசினஸ் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கு முன் நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தின் ஓவர்சீஸ் உரிமை 60 கோடி ரூபாய்க்கு பிசினஸ் ஆனது குறிப்பிடத்தக்கது. தற்போது தக் லைஃப் படம் அதற்கும் மேல் பிசினஸ் செய்து புதிய சாதனை படைத்திருக்கிறது.
விக்ரம் படத்தின் மெகா வெற்றியினாலும், இந்தியன் 2 படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பினாலும், மணிரத்னம் – கமல் காம்போ என்பதினாலும், தக் லைஃப் படத்திற்கான பிஸ்னஸ் அமோகமாக இருப்பதாக நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கு : நீதிமன்றத்தில் எடப்பாடி ஆஜர்!
யார் அடுத்த பிரதமர் என்பதை ஜெகன்மோகன் ரெட்டியும், நவீன் பட்நாயக்கும் தீர்மானிக்கப் போகிறார்களா?