தனிச்செயலாளர் தினேஷ் குமார் தந்தை மறைவு: ஸ்டாலின் அஞ்சலி!
முதல்வர் ஸ்டாலினின் தனிச்செயலாளர் தினேஷ் குமாரின் தந்தை டி.வி.ரவி மே 12-ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் முதல்வர் ஸ்டாலின் தினேஷ் குமாரை போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “எனது தனிச் செயலாளர் தினேஷ்குமாரின் தந்தையார் – நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரைச் சேர்ந்த டி.வி. ரவி நேற்று இரவு மறைவெய்திய செய்தியால் வேதனையடைந்தேன்.
தன்னை வளர்த்து, சான்றோனாக்கிய தந்தையை இழந்து தவிப்பது எந்தவொரு மகனுக்கும் எளிதில் ஆற்றிவிட முடியாத துயரமும், ஈடு செய்துவிட முடியாத இழப்புமாகும்.
உயிர்கொடுத்து, உற்றதுணையாய் விளங்கிய தந்தையை இழந்து தவிக்கும் தினேஷ்குமாரின் துயரைப் பகிர்ந்துகொள்கிறேன். அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
மறைந்த டி.வி.ரவியின் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் நேற்று இறுதிச்சடங்கு நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள் மறைந்த டி.வி.ரவியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் ராசிபுரம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்தநிலையில், தினேஷ் குமாருக்கு ஆறுதல் சொல்வதற்காக முதல்வர் ஸ்டாலின், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி ஆகியோர் இன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் சேலம் சென்றனர்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் உள்ள தினேஷ் குமார் இல்லத்திற்கு சென்று மறைந்த டி.வி.ரவியின் திருவுருவப் படத்திற்கு இருவரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் தினேஷ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆன்மீகத்திற்கு எதிரானவனா நான்? – மேடையில் கொந்தளித்த மிஷ்கின்
2,100 கி.மீ டிராவல்: தோனியுடன் போட்டோ… சென்னையில் டென்ட் போட்ட வெறித்தனமான ரசிகர்!