உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று (மே 14) வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் 7ஆம் கட்டமாக ஜூன் 1ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இங்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் இன்று (மே 14). இதை முன்னிட்டு பிரதமர் மோடி நேற்றே வாரணாசி வந்துவிட்டார்.
இன்று வேட்புமனுவை தாக்கல் செய்வதை முன்னிட்டு கங்கை நதிகரைக்கு வந்த பிரதமர் மோடி தசாஷ்வமேத் படித்துறையில் வழிபாடு செய்தார்.
வேத மந்திரங்கள் முழங்க, கங்கைக் கரைக்கு தீபாராதனை காட்டினார். பால் அபிஷேகம் செய்து மலர் தூவி, தாமரையை தண்ணீரில் விட்ட பிரதமர், கங்கையை கும்பிட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். கால பைரவர் கோயிலிலும் வழிபாடு செய்தார்.
அங்கிருந்து வாராணசி தொகுதி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பிரதமர் மோடி, உறுதிமொழி படிவத்தை படித்துவிட்டு வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்தயநாத் ஆகியோரும் வந்திருந்தனர்.
பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்வதை முன்னிட்டு, பாஜக தலைவர்கள் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி,கே.வாசன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் சென்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “பிரதமர் மோடி 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக வருவார் என்பதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
எங்கள் கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். இந்த வெற்றிக்கு பிறகு பிரதமரின் கீழ் இந்தியா வல்லரசாக மாறப் போகிறது . விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறப் போகிறது” என்று கூறினார்.
வாரணாசியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கு : நீதிமன்றத்தில் எடப்பாடி ஆஜர்!
யார் அடுத்த பிரதமர் என்பதை ஜெகன்மோகன் ரெட்டியும், நவீன் பட்நாயக்கும் தீர்மானிக்கப் போகிறார்களா?