2,100 கி.மீ டிராவல்: தோனியுடன் போட்டோ… சென்னையில் டென்ட் போட்ட வெறித்தனமான ரசிகர்!

Published On:

| By indhu

தோனியை காண டெல்லியில் இருந்து 2,100 கி.மீ. தூரம் சைக்கிளில் பயணித்த இளைஞரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரரான கெளரவ் இந்திய கிரிக்கெட் வீரரான தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர் ஆவார்.

தோனியுடன் புகைப்படம் எடுக்கவேண்டும் என்பது கெளரவின் நீண்ட நாள் ஆசையாகும். இந்த ஆசையின் காரணமாக டெல்லியில் இருந்து சென்னைக்கு சைக்கிளில் தனது பயணத்தை தொடங்கி உள்ளார் கெளரவ்.

2,100 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளில் 26 நாட்களாக பயணித்த கெளரவ், மே 12ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தை வந்தடைந்துள்ளார்.

சென்னை வந்த இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்று அங்கு பேருந்தில் இருந்து தோனி இறங்கியதை கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளார். தோனியிடம் புகைப்படம் எடுக்க கோரிக்கை வைத்தபோது காவலாளிகள் அனுமதி மறுத்துள்ளனர்.

தொடர்ந்து, சென்னையை சேர்ந்த தோனியின் தீவிர ரசிகரான சரவணனை சந்தித்து சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதிய போட்டிக்கான டிக்கெட்டை வாங்கி உள்ளார்.

மேலும், கெளரவ் எதிர்ப்பார்ப்பை அறிந்த சரவணன் டிக்கெட் கொடுத்து போட்டியை பார்க்க அழைத்து சென்றுள்ளார்.

கடந்த மே 12ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியை கண்டு ரசித்த கெளரவ் தோனியுடன் எப்படியாவது புகைப்படம் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், அது நடைபெறவில்லை.

தோனியுடன் புகைப்படம் எடுக்க முடியவில்லையே என மனமுடைந்த கெளரவ், தோனியுடன் புகைப்படம் எடுக்காமல் டெல்லி திரும்ப மாட்டேன் என்று முடிவெடுத்து சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே டென்ட் அமைத்து தங்கியுள்ளார்.

இதுத்தொடர்பாக பேசிய கெளரவ், “சென்னையில் தற்போது தோனி இல்லை என்றாலும், 24ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் பிளே ஆஃப் மற்றும் 26ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தோனி இங்கு வருவார், அவரை எப்படியாவது பார்த்து புகைப்படம் எடுக்க வேண்டும். அதுவரை இங்கேயே தங்கி இருப்பேன்.

மேலும், மற்ற ரசிகர்களை போல் மைதானத்தில் ஏறி குதித்து தோனியை கட்டிப்பிடிக்க தைரியம் இருந்தும் அந்த தவறை நான் செய்ய மாட்டேன். தவறான செயலுக்கு முன்னுதாரணமாக இருக்க மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்து 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“லியோ”வை மிஞ்சிய கமலின் “தக் லைஃப்”… இவ்ளோ கோடி பிசினஸா..?

தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கு : நீதிமன்றத்தில் எடப்பாடி ஆஜர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share