�தயாரிப்பு கலாநிதி, வெளியீடு உதயநிதி: பீஸ்ட்- டுக்கு தடை: கேட்கும் ஜவாஹிருல்லா

Published On:

| By admin

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியிருக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் நடித்திருக்கிறார். ஏப்ரல் 14-ஆம் தேதி வெளிவந்த இந்த படம் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துவதாக இருப்பதாகவும் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில்,
“வலதுசாரிகள் வடமாநிலங்களில் வளர்த்து வைத்துள்ள மதவாத மனப்பான்மையை தமிழகத்தில் அணுவளவும் நுழையவிடாமல் ஆற்றலோடு தங்களின் அரசு ஆற்றிவரும் பணிகளால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது.

அதேநேரம், அதை குலைப்பதற்காகவும், தங்களின் அரசியல் பிழைப்பிற்காகவும் மதவாத பாசிஸ்டுகள், அரசுக்கு பல்வேறு இடையூறுகளையும் சமூகத்தில் பல குழப்பங்களையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

திரையுலகையும் இந்த தீயோரின் களமாக மாற்றும் முயற்சிகள் நெடுங்காலமாகவே நடந்து வருகின்றன.

விஸ்வரூபம், துப்பாக்கி உள்ளிட்ட பல திரைப்படங்கள் முஸ்லிம் சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கோடு எடுக்கப்பட்டு பெரும் குழப்பங்களுக்கு வித்திட்டன.

முஸ்லிம் சமுதாயமே பயங்கரவாத சமுதாயமாக மேற்கண்ட படங்களில் காட்டப்பட்டன. இடைக்காலத்தில் சிறிது நின்றிருந்த இந்த இழி செயலுக்கு தற்போது “பீஸ்ட்” என்ற படத்தின் மூலம் புத்துயிர் ஊட்டப்பட்டு உள்ளது.

குவைத் மற்றும் கத்தார் நாடுகளில் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளது. மனிதநேயப் பணிகளிலும், பேரிடர் கால மீட்புப் பணிகளிலும் தம் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் முன்னணியில் நிற்கும் முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப் படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள பீஸ்ட் திரைப்படத்தை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து அமைதியின்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

எனவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் பீஸ்ட் திரைப்படத்தை திரையிட தடை விதிப்பதோடு, வெறுப்பு அரசியலை தூண்டும் படங்களை யார் எடுத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார் ஜவாஹிருல்லா.

திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலின் குடும்ப உறுப்பினரான சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ள படத்தை, முதல்வரின் மகன் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share