இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா நடித்துள்ள படம் ஹிட்லிஸ்ட். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை வடபழநியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், “விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், இருவரும் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கான இயக்குநர்கள். அவர்களது வெற்றிகளை எட்டிப் பிடிக்க முடியுமா என்கிற ஐயம் எனக்கு உண்டு
சினிமா விழா மேடைகளில் பொதுவான விஷயங்களை பேசுவது எனது பழக்கம். அப்படித்தான் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் நான் பேசியதை முழுமையான செய்தியாக வெளியிடாமல் தங்களுக்கு தேவையான சிலவரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு பரபரப்பான செய்தியாக்குகின்றனர்.
கோயிலுக்கு போகாதீங்க சினிமாவுக்கு போங்க என நான் பேசியதை சர்ச்சைக்குரிய செய்தியாக்கி ஆன்மீகத்திற்கு எதிரானவனாக என்னை சித்தரித்து விட்டனர்.
கோயில் எனச் சொன்னது சர்ச்சையும் மசூதியையும் சேர்த்துதான். நான் பிறந்தது இந்து குடும்பத்தில், வளர்ந்த குடும்பம் முஸ்லீம், கல்யாணம் செய்தது கிருஸ்தவ குடும்பம். தியேட்டர்கள் இன்றைக்கு வெறிச்சோடி கிடக்கிறது. ஏனென்றால் எல்லாமே ஒரு போனுக்குள் அடங்கிவிடுகிறது. அதனால் தியேட்டரை மறந்துவிடுகிறோம்.
கோயில், சர்ச், மசூதியை விட சினிமா முக்கியம் என ஏன் கூறுகிறேன் என்றால், இரண்டு பேராக உட்கார்ந்து டிவி பார்த்து விடலாம். ஆனால், நிறைய பேர் உட்கார்ந்து பார்த்தால் தான் அது கொண்டாட்டம். அது போல முதல் கொண்டாட்டம் என்பது தியேட்டர். கோயில், சர்ச், மசூதி இந்த மூன்றும் ஆன்மீகத்தை தேடவைக்கிறது. ஆனால் தியேட்டர், தார்மீகத்தை தேடவைக்கிறது. ஒரு மேடையில் எதையும் முழுமையாக பேசமுடியாது சுருக்கமாக பேசுகிற போது அதில் ஒற்றை கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சாடாதீங்க. கோயிலுக்கும், சர்ச்சுக்கும், மசூதிக்கும் போங்க. தியேட்டருக்கு அடிக்கடி போங்க” என்று மிஷ்கின் தெரிவித்தார்.
இராமானுஜம்