What is the purpose of TN global investors meet

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நோக்கம் என்ன? : டி.ஆர்.பி.ராஜா விளக்கம்!

அரசியல்

இத்தனை லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டது என்பதை தாண்டி தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தரமான வேலைவாய்ப்பினை உறுதி செய்வதே முதலீட்டாளர்கள் மாநாட்டின் முக்கிய நோக்கம் என்று அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நாளையும், நாளை மறுநாளும் (ஜனவரி 7,8) உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் மாநாடு நடைபெற உள்ள நந்தம்பாக்கம் உலக வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் கூட்டரங்கினை மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் கொள்கை அடிப்படையில் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.

அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சமமான தொழில் வளங்களையும், வேலைவாய்ப்பினையும் உருவாக்க இவ்வளவு பெரிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி தற்போது உலக நாடுகளின் மிகப்பெரிய முதலீடுகள் குவிந்து வருகின்றன.

குறிப்பாக உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட், தென்மாவட்டமான தூத்துக்குடியில் ரூ. 16,000 கோடி மதிப்பில் தொழிற்சாலையை அமைக்க உள்ளது.

இதன்மூலம் 3 ஆயிரத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளது. இதுபோன்று சிங்கப்பூர், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் மிகப்பெரிய முதலீடு உறுதியாகியுள்ளது.

ஏற்கெனவே நம்முடன் இணைந்து செயல்படும் 9 கூட்டணி நாடுகள் தனி அரங்கு அமைத்துள்ளன. மற்ற சர்வதேச நாடுகளுக்கு தனி அரங்குகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல ஸ்டார்ட் அப் தமிழ்நாடு, எம்.எஸ்.எம்.இ, தமிழ்நாடு சுற்றுச்சுழல் அமைப்புகளுக்கும் தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாநாட்டில் பொருளாதார நிபுணர்களான முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், ஆரோக்கியசாமி வேலுமணி ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.

இதுவரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் இத்தனை லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டது என்பது மட்டுமே சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் இந்தமுறை அதனையும் தாண்டி படித்த இளைஞர்களுக்கு தரமான வேலைவாய்ப்பினை உருவாக்குவது முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி அனைத்து தமிழ்நாட்டு மக்களின்  எதிர்பார்ப்புக்கு ஏற்ப அடுத்த இரண்டு நாளில் பல லட்சம் கோடி முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு பெறப்பட உள்ளது” என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

களைகட்டிய ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு… பல்சர் பைக் தட்டிச்சென்ற காளையர்!

இந்தியாவில் வின்பாஸ்ட் நிறுவனம் என்ட்ரி: தமிழகத்தில் 16,000 கோடி முதலீடு!

 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *