கடந்த ஆண்டு ஒரு சில இடங்களில் நடந்த தவறுகளை மிகைப்படுத்தி தகவல்கள் பரப்பப்பட்டதால் அதனை தவிர்க்கும் விதமாக இவ்வாண்டு கரும்பு வழங்கவில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் விளக்கம் அளித்தார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள கூட்டுறவு அலுவலகத்தில் இன்று(டிசம்பர் 27)நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கலந்துகொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கிராமப்புற மக்களின் அடிப்படை வசதிகளை மாற்றினால் மட்டும் போதாது, மக்களின் பொருளாதாரத்தை , வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என அரசு எடுக்கும் முயற்சிகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் துறை கூட்டுறவு துறை.
புதிதாக துறையின் பொறுப்பேற்றுள்ள காரணத்தால் தொடர்ந்து ஆய்வு கூட்டங்களை நடத்தும் கடமையை செய்து வருகிறோம். மாவட்டங்களில் இருந்து வந்துள்ள கூடுதல் பதிவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
பொங்கல் தொகுப்பை மக்களிடம் கொண்டு சேர்க்கும் கடமை கூட்டுறவுத் துறைக்கு இருக்கிறது. அதை எவ்வாறு கொண்டு சேர்ப்பது, திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தப்படுகிறது” என்றார்.
அப்போது பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “கடந்த காலங்களில் பொங்கல்தொகுப்பு வழங்கிய போது குறைகள் சுட்டிக்காட்டிப்பட்டது.
ஒரு சில இடங்களில் நடந்த தவறுகளை மிகைப்படுத்தி தகவல்கள் பரப்பப்பட்டதால் அதனை தவிர்க்கும் விதமாக கரும்பு கொள்முதல் செய்யப்பட வில்லை என கூறிய அமைச்சர்,கரும்பு கொள்முதல் குறித்து பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கைகள் வந்துள்ளது.
இதுகுறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுக்கப்படும். மேலும் கரும்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் தான் முடிவு எடுக்க வேண்டும்,முதல்வர் தான் முடிவு எடுக்கும் இடத்தில் இருக்கிறார். நாங்கள் செயல் படுத்தும் இடத்தில் இருக்கிறோம்.
பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு டோக்கன் இதுவரை வழங்கப்பட்ட வில்லை, அதற்கான முறையான அறிவிப்பை நாங்கள் வெளியிடவில்லை.
டோக்கன் வழங்கப்படுவது குறித்து இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தெரிவிக்கப்படும். 3 லட்சம் சக்கரை அட்டைகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும்” என்று அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார்.
குடிநீரில் மனித கழிவு: அதிர்ச்சியில் பட்டியலின மக்கள்
கால்பந்து இறுதிப்போட்டியில் தவறு செய்து விட்டேன்: ஒப்புக்கொண்ட நடுவர்!