இந்தியாவில் வின்பாஸ்ட் நிறுவனம் என்ட்ரி: தமிழகத்தில் 16,000 கோடி முதலீடு!

Published On:

| By Selvam

vinfast invest in tamilnadu

உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட் தமிழகத்தில் தொழில் துவங்க உள்ளது.

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை (ஜனவரி 7) மற்றும் நாளை மறுநாள் (ஜனவரி 8) உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

வின்பாஸ்ட் தமிழகத்தில் முதலீடு!

இந்த மாநாட்டில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான செயல்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட உள்ளார். 30,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், 450 வெளிநாட்டு பிரதிநிதிகள், 50-க்கும் மேற்பட்ட வர்த்தக தொழில் தலைவர்கள் மாநாட்டில் உரையாற்ற உள்ளனர். இந்த மாநாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்கிறது.

இந்தநிலையில், நாளை நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி மற்றும் பேட்டரி தயாரிக்கும் நிறுவனம் தமிழகத்தில் தொழில் துவங்க 2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது.

vinfast invest in tamilnadu

வியட்நாமை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் வின்பாஸ்ட் நிறுவனம், தென்மாவட்டமான தூத்துக்குடியில் ஆலை அமைக்கிறது.

முதல் கட்டத்திற்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்கிறது. ஆலையின் கட்டுமான பணிகள் இந்த ஆண்டே துவங்குகிறது.

வின்பாஸ்ட் நிறுவனம் தமிழகத்தில் தொழில் துவங்குவதன் மூலம் 3,000 முதல் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது.

அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் மின்சார வாகன கார்கள் மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை வின்பாஸ்ட் நிறுவனம் அமைக்கவுள்ளது.

இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல்.

தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் வின்பாஸ்ட் நிறுவனத்தாருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்னும் இதுபோன்ற பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் நிறுவனங்கள் 31,000 கோடி முதலீடு!

அதேபோல சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனங்கள் ரூ.31,000 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் உயர் கமிஷனர் சைமன் வாங் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “சிங்கப்பூரில் உள்ள செம்கார்ப், கேபிட்டல்லேண்ட், ஒய்சிஎச் மற்றும் புளூ பிளானட் போன்ற பிரபலமான நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளன.

தமிழகத்தின் உள்கட்டமைப்பு, ஐடி பார்க், தளவாடங்கள் ஆகிய துறையை மேம்படுத்துவதாக இந்த முதலீடு இருக்கும்.

சென்னையில் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.31,000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிளாம்பாக்கத்தில் உடனே மெட்ரோ பணி… : அன்புமணி வலியுறுத்தல்!

வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது ஆதித்யா எல் 1

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share