நாடாளுமன்றத்தில் வெளிப்படும் நாட்டு மக்கள் சீற்றம்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

இந்திய மக்களாட்சி வரலாற்றில் சென்ற வாரம், பலவகைகளிலும் விழுமியங்கள் பின்னடைவை சந்தித்த வாரம். இப்போதெல்லாம் இவை தொடர்ந்து நடப்பவைதான் என்பதால் பழகிப்போகிறது. ஒரு சாதாரண அறிவுறுத்தல் கடிதம் கொடுத்து நெறிப்படுத்த வேண்டிய சங்கதியை உள்நோக்கத்துடன் பெரிது படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினரின் பதவியைப் பறித்தது ஆளும் கட்சி.

அதிலும் குறிப்பாக அவர், மஹுவா மொய்த்ரா, ஆளும் கட்சிக்கு இணக்கமான பெருமுதலீட்டிய சக்தியான அதானியைக் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பியவர். அப்படிப்பட்டவரின் கேள்வி கேட்கும் உரிமையைப் பாதுகாப்பதுதானே மக்களாட்சியில் முக்கியம்? அதற்குத்தானே நாடாளுமன்றம்? அவர் யார் சொல்லி கேட்டால் என்ன? கேள்விகள்தானே முக்கியம்?

அதற்கு அடுத்த கட்டமாக உச்ச நீதிமன்றம் காஷ்மீர் மாநிலத்தின் விசேஷ அந்தஸ்து பறிப்பான விதி 370 நீக்கம், அதன் மாநில அந்தஸ்தையே நீக்கியது, மாநிலத்தை தன்னிச்சையாக மூன்றாகப் பிரித்து யூனியன் பிரதேசங்களாக்கியது ஆகிய ஒன்றிய அரசின் எதேச்சதிகார செயல்பாடுகள் அனைத்தையும் அங்கீகரித்தது. இது கூட்டாட்சி தத்துவத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் செயல் என இந்திய மக்களாட்சியின் மீது அக்கறை கொண்டவர் அனைவரும் கூறியுள்ளனர்.

ஆனால், இதையெல்லாம் விட மிக அபூர்வமான ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. அது என்னவென்றால், எளிய பின்னணியைச் சேர்ந்த நாட்டின் வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த இளம் வயதினர் ஆறு பேர் திட்டமிட்டு நாடாளுமன்றத்தில் புகுந்துள்ளனர். நாடாளுமன்ற மக்களவை நடந்துகொண்டிருக்கும்போதே உறுப்பினர் இருக்கைகள் மீது தாவிக்குதித்த அவர்கள் வண்ணப் புகையை உருவாக்கியுள்ளனர். பகத் சிங்கும், தோழர்களும் காலனீய கால நாடாளுமன்றத்தில் 1929ஆம் ஆண்டு குண்டு வெடிக்கச் செய்த பிறகு, இதுதான் அவைக்குள்ளேயே நடந்துள்ள அத்துமீறி புகுதல், தடை விளைவித்தல், தாக்குதல்.

தாக்கியவர்கள் தங்களை பகத்சிங் ரசிகர்கள் என்ற பெயரில்தான் ஃபேஸ்புக் குழுவாக அமைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், இவர்கள் நோக்கம் யாரையும் காயப்படுத்துவதோ, பொருட்களை சேதப்படுத்துவதோ போலத் தெரியவில்லை. வெடி பொருட்களையோ, விஷப்புகையையோ அவர்கள் கொண்டு செல்லவில்லை. சாதாரண வண்ணப்புகையைத் தான் அவர்கள் உருவாக்கியுள்ளனர். கவனம் ஈர்க்கவே அப்படி செய்ததாகக் கூறியுள்ளனர். தாக்குதலை சட்டம் ஒழுங்கில் அக்கறையுள்ள நாமனைவரும் கண்டிக்கும் நேரத்தில், இது அரசாளுபவர்களுக்கு விடப்பட்டுள்ள மிக முக்கியமான எச்சரிக்கை எனலாம். எப்படி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

உண்மையாகச் சிந்தித்துப் பார்த்தால் மஹூவா மொய்த்ரா பதவி பறிப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றுக்கும், நாடாளுமன்றத் தாக்குதலுக்கும் ஓர் ஆழமான தொடர்பு உள்ளது. கவனிக்க; நேரடித் தொடர்பு அல்ல. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து அது நடக்கவில்லை; தாக்குதலை நிகழ்த்தியவர்கள் இரண்டாண்டுகள் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் இப்போதுதான் விரிவாக வெளியாகத் தொடங்கியுள்ளது. புலனாய்வும் நடக்கிறது.

இந்த சம்பவங்களுக்கு இடையிலான ஆழமான தொடர்பாக நாம் காணக்கூடியது மக்களுக்கு மக்களாட்சியின் மீதுள்ள நம்பிக்கை குறைகிறது என்பதுதான். அது குறையாமல் காப்பதுதான் மூன்று மன்றங்களின் பணி. நாடாளுமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம் ஆகியவைதான் அந்த மூன்று மன்றங்கள். இவற்றில் என்ன நடக்கிறது என்பதே கேள்வி.

நாடாளுமன்றத்தின் பணி என்ன?

நாடாளுமன்றம் என்ற தமிழ்ச்சொல் அதன் அடிப்படை நோக்கத்தை தெளிவாகக் கூறி விடுகிறது. அந்த மன்றம்தான் நாட்டை ஆள்கிறது. மக்களின் பிரதிநிதிகள் அந்த அவையில் கூடி ஆட்சி குறித்து, நிர்வாகம் குறித்து, சட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். அதுதான் அதன் முக்கிய நோக்கம்.

ஆங்கிலத்தில் நாடாளுமன்றம் ‘பார்லிமென்ட்’ என்றழைக்கப்படுகிறது. அதன் மூலச்சொல் லத்தீனில் உரையாடுதல், கலந்து பேசுதல் என்பதைக் குறிப்பதாகும். பார்லே, பர்லாரே என்றால் ஃபிரெஞ்சு, இத்தாலிய மொழிகளில் பேசுதல். இந்தப் பணியினை நாடாளுமன்றம் மறந்து போய்விட்டது எனலாம்.

அதற்கு முக்கிய காரணம் ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளைப் புறக்கணிப்பதாகும். எப்படி ஓர் ஆளும் கட்சி உறுப்பினர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரோ, அதேபோல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் எதிர்க்கட்சி உறுப்பினர். எப்படி பிரதமரை ஒரு தொகுதி மக்கள் தேர்ந்தெடுத்தார்களோ, அதேபோலத்தான் ஒவ்வோர் உறுப்பினரையும் வெவ்வேறு தொகுதி மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற கட்சி, பிரதம அமைச்சரை தேர்ந்தெடுக்கிறது. அவர் அமைச்சரவையை அமைக்கிறார். அதன் பிறகு ஆட்சியதிகாரம் அந்தக் கட்சியிடம் சென்று விடுகிறது. அவர்களுக்கு நாடாளுமன்ற பெரும்பான்மை இருப்பதால் எந்த சட்டத்தையும் இயற்றலாம் என்பது சாத்தியமாகிவிடுகிறது. இதை முன்னிட்டு எதிர்க்கட்சிகளை அது உதாசீனம் செய்தால் மக்களாட்சி பெரும்பான்மைவாதமாக சீரழிந்து விடுகிறது.

அப்படியானால் ஆளும் கட்சி என்ன செய்ய வேண்டும்? முக்கியமான சட்டங்களை இயற்றினால் எதிர்க்கட்சிகளின் ஒப்புதலைப் பெற முயற்சி செய்ய வேண்டும். பொது மன்றத்தில் நிறைய விவாதிக்க வேண்டும். கூடிய அளவு கருத்தொப்புமையை உருவாக்க வேண்டும். அதில் ஓரளவு பலன் தெரிந்த பிறகே சட்டமாக இயற்ற வேண்டும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் எதையும் சட்டமாக்கிவிடலாம் என நினைக்கக் கூடாது.

எதிர்க்கட்சிகளுக்கு விமர்சிக்கவும், கேள்விகளை எழுப்பவும் தாராளமாக இடமளிக்க வேண்டும். அவை ஒத்திவைப்பைக் கோரினால் ஒத்திவைக்க வேண்டும். எங்களிடம் பெரும்பான்மை இருக்கிறது, எங்கள் இஷ்டப்படி அவையை நட த்துவோமே தவிர, நீங்கள் கோருகின்றபடி செய்ய மாட்டோம் என்ற அகந்தை நாடாளுமன்றத்தை கேலிக்கூத்தாக்குகிறது.

நாடாளுமன்ற தாக்குதலைக் குறித்தே விவாதிக்க மறுத்து, விவாதத்தைக் கோரிய எதிர்க்கட்சி உறுப்பினர்களை, தமிழ்நாட்டைச் சேர்ந்த தி.மு.க உறுப்பினர் கனிமொழி, காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி உட்பட பலரை இடைநீக்கம் செய்துவிட்டார்கள். நாடாளுமன்றமே தாக்கப்பட்டால் கூட உறுப்பினர்கள் கேள்வி கேட்கக் கூடாதா என்ன? இப்படி நாடாளுமன்றத்தை பொருளற்றதாக்கினால் மக்கள் ஏன் சீற்றமடைந்து உள்ளே புக மாட்டார்கள்?

ஆளும்கட்சியிடம் ஆட்சி செய்யும் அதிகாரம் இருக்கிறது. எதிர்க்கட்சிகளிடம் அது கிடையாது. அவற்றிடம் உள்ள ஒரே வாய்ப்பு நாடாளுமன்றத்தில் கேள்விகளைக் கேட்பதுதான்; கண்டனங்களை தெரிவிப்பதுதான். அதற்கு முழு உரிமை அளிக்கும்போதுதான் நாடாளுமன்றம் அதற்குரிய பயனை முழுமையாக அடையும்.

வெறும் வாக்கெடுப்புகளில் பெரும்பான்மை கட்சி சட்டங்களை இயற்றும் இயந்திரத்தனமான செயல்பாட்டுக்கா ஆயிரம் கோடி ரூபாயில் நாடாளுமன்றக் கட்டடம்? அதற்காகவா இத்துணை செலவு செய்து தேர்தல்? எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களும், கண்டனங்களும் முழுமையாக ஒலிக்க அனுமதிப்பதும், ஆளும்கட்சி அதற்கு சிரத்தையுடன் பதில் சொல்வதும்தான் மக்களாட்சி.

பத்தாண்டுக் கால நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி, நாடாளுமன்றத்தின் இருண்ட காலம் எனலாம். பிரதமர் மிகக் குறைவான நாட்களே நாடாளுமன்றத்திற்கு வருவதை வழக்கமாகக் கொண்டார். வந்தாலும் பெரும்பாலும் பேச மாட்டார். கேள்விகளை எதிர்கொள்ள மாட்டார்.

சட்டங்கள் பல நாடாளுமன்ற நிலைக்குழுக்களால் பரிசீலிக்கப்படாமலேயே அவைக்கு வரும். அங்கும் அவற்றின் மீது போதிய விவாதம் இல்லாமலேயே வாக்கெடுப்பில் நிறைவேற்றப் படும். எதிர்க்கட்சிகளைப் பேசி, விவாதித்து இணங்க வைக்கும் முயற்சி என்பதை நினைத்துக் கூட பார்ப்பதில்லை.

அதாவது பொதுவான பொது நன்மை குறித்த சிந்தனை அடிப்படையில்தான் ஆட்சி நடக்க வேண்டும் என்பதே மறக்கப்பட்டு, பெரும்பான்மை அடிப்படையில் ஆட்சி நடக்கலாம் என்பது எழுதப்படாத நியதி ஆகிவிட்டது. அதற்குப்பின் நாடாளுமன்றத்தை மக்கள் எப்படி நம்புவார்கள்?

நீதிமன்றத்தில் நடப்பவையும் நம்பிக்கை தருவதில்லை

காஷ்மீரின் மாநில அந்தஸ்தை பறித்து அதை மூன்று ஒன்றிய ஆட்சிப் பகுதிகளாக மாற்றியபோது நாடாளுமன்றத்தில் பேசிய முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நீதிமன்றம் ஒருபோதும் இதை ஏற்காது என்று கூறினார்.

ஏனெனில் வெளிப்படையாகவே இது கூட்டாட்சி தத்துவத்துக்கு சவால் விடுவதாக உள்ளது என்பதுதான். மாநில சட்டமன்றத்தின், மக்களின் விருப்பத்தைக் கேட்காமல் ஒன்றிய அரசு அதை மூன்றாகப் பிரிப்பது என்பதெல்லாம் எதேச்சதிகாரப் போக்குக்கே வழிவகுக்கும் என்பது வெளிப்படையானது.

ஆனால், உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் வழங்கிய தீர்ப்பு ஒப்புக்குக் கூட அதைக் கண்டிக்கவில்லை. ஒரு நீதிபதி மட்டும் மாற்றுக் கருத்தினை கூறியிருந்தாலும், லடாக் பகுதி ஒன்றிய ஆட்சிப் பகுதியாக ஆக்கியதை நீதிமன்றம் கேள்வி கேட்கவே இல்லை; அதை அனுமதித்துள்ளது. இது எந்த ஒரு மாநிலத்தையும் ஒன்றிய அரசு பிளந்து அதில் ஒரு பகுதியை ஒன்றிய ஆட்சிப் பகுதியாக்கலாம் என்பதற்கு முன்னுதாரணமாக மாறுகிறது.

இப்படி மக்களின் விருப்பத்திற்கு மாறாக, அதைத் தெரிந்துகொள்ளாமல், அரசு தன்னிச்சையாக நடக்குமென்றால் மக்கள் தங்கள் எதிர்ப்பை எப்படித் தெரிவிப்பது என்ற கேள்வி எழும். நீதிமன்றம் மக்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும். அரசு தான் தோன்றித்தனமாக செயல்பட்டால் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை அளிக்க வேண்டும்.

The anger of the People expressed in the Parliament

பொது மன்றத்தில் நடப்பது என்ன?

மக்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டிய மற்றொரு மக்களாட்சியின் தூண் ஊடகங்களால் வழி நடத்தப்படும் பொது மன்றமாகும். அதில் மக்களின் அதிருப்தி முழுமையாக வெளிப்பட வேண்டும். அவர்களது தேவைகளைக் கூறுவதற்கு ஊடகங்கள் முக்கிய இடம் கொடுக்க வேண்டும். ஆட்சியின் மீதான விமர்சனங்களையும் முதன்மைப் படுத்த வேண்டும்.

ஆனால் ஊடகங்களும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக, ஆட்சியின் புகழ்பாடுவதாகவே மாறுகின்றன. தேச பக்தி என்ற பெயரில் அரசின் மீதான விமர்சனங்களை ஊடகங்கள் முதன்மைப்படுத்த மறுக்கின்றன. எளிய மனிதர்களின் குரல்கள் இவற்றில் வெளிப்படுவதில்லை.

இளைஞர்கள் கடும் வேலைவாய்ப்பின்மையைச் சந்திக்கிறார்கள்; அவர்கள் மனம் வேதனைப்படுகிறது. ஆட்சியாளர்களின் பிழைகளால் மணிப்பூரில் பெரும் கலவரம் மூள்வதைப் பார்க்கிறார்கள். பெண்கள் அவமானப்படுத்தப்படுவதை, அதை அரசும், ஊடகங்களும் மறைக்க முயல்வதைப் பார்க்கிறார்கள். அரசின் எதிர்வினை அவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. விவசாயிகள் பெருந்திரளாக அரசுக்கு எதிராகப் போராடுவதைப் பார்க்கிறார்கள். அரசு அவர்கள் குரலுக்குச் செவி சாய்ப்பதாகத் தெரிவதில்லை.

மக்களிடையே, குறிப்பாக லட்சிய நோக்குள்ள இளைஞர்களிடையே அதிருப்தி பெருகுகிறது. அவர்கள் தேர்தலையும், வாக்குரிமையையும் மட்டுமே நம்பியிருக்க முடிவதில்லை. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வருகிறது. அதில் கொடுக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில்லை. குறிப்பாக நரேந்திர மோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்றுதான் வாக்குறுதி கொடுத்தார். பத்தாண்டுகளில் அது சிறிதும் நிறைவேற்றப்படவில்லை.

மக்களே நேரடியாக நாடாளுமன்றத்தில் புகுந்து குரல் கொடுத்தல்!

நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு மைசூரைச் சேர்ந்த ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்தான் அனுமதி கொடுக்க பரிந்துரை அளித்துள்ளார். அவர் பரிந்துரை அளித்த மைசூரைச் சேர்ந்த அந்த இளைஞரின் குடும்பத்தாரும், இளைஞரும் அவருக்காக தேர்தலில் ஆதரவு திரட்டியுள்ளனர். ஆனால், பாஜக ஆட்சி அந்த இளைஞருக்குக் கடும் அதிருப்தி அளித்துள்ளதாகத் தெரிகிறது. அதனால் அந்த நாடாளுமன்ற உறுப்பினரையே பயன்படுத்தி மன்றத்தின் உள்ளே சென்று நேரடியாக குரல் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

இது நிச்சயம் விரும்பத்தக்கதல்ல. இது குழப்பத்துக்குத்தான் இட்டுச் செல்லுமே தவிர தீர்வுக்கல்ல. எனவே நாம் அந்த இளைஞர்களைக் கண்டிக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாட்டுக்காக ஆளும்கட்சியையும் நாம் கடுமையாக கண்டிக்க வேண்டும். புதிய கட்டடத்தின் வடிவமைப்பிலேயே இப்படி பார்வையாளர் மாடத்திலிருந்து உள்ளே குதிக்க வாய்ப்பிருக்கும்படி செய்தது அபத்தமான பிழையாகும்.

ஆனால், பிரச்சினை எப்படி மக்களை நாடாளுமன்றத்தில் புகாமல் தடுப்பது என்பது மட்டுமல்ல. எப்படி அவர்கள் அப்படி ஒரு செயலைச் செய்ய நினைக்கத் தேவையில்லாமல் ஆட்சி செய்வது என்பதுதான். எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும், நீதிமன்றங்களும் மக்களாட்சியின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும். ஆளும்கட்சியிடம் அதிகாரம் குவிந்திருப்பதான தோற்றம் வரக் கூடாது.

நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே வண்ணப் புகையைப் பரப்பிய நீலம் என்ற பெண் எழுப்பிய முழக்கம் நம் கவனத்துக்குரியது. படித்த பெண் அவர். அரசுப் பணிக்காக தேர்வுகள் எழுதுபவர். அவர் முழக்கமிட்டது என்ன? “தானாஷாஹி நஹி சலேகி!” என்பதுதான் அந்த முழக்கம். சர்வாதிகாரம் செல்லாது என்று அதன் பொருள். அதாவது சர்வாதிகாரத்தை அனுமதிக்க மாட்டோம் என்று முழங்குகிறார்.

எந்த தீவிரவாத இயக்கத்தையும் சேராத ஒரு பெண் நீலம். அவருக்காக, அவரை தீவிரவாதியாகக் கருதி தண்டிக்க வேண்டாமென, அவர் ஊர் சபையில் தீர்மானம் எல்லாம் இயற்றியுள்ளார்கள். அப்படி ஓர் எளிய குடிநபர் “சர்வாதிகாரத்தை அனுமதிக்க மாட்டோம்” என முழக்கமிடுகிறார் என்றால், நம் மக்களாட்சியில் என்ன பிரச்சினை என்பதை ஆள்பவர்கள் சிந்திக்க வேண்டும். ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.  

கட்டுரையாளர் குறிப்பு:

The anger of the People expressed in the Parliament by Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: பட்டாணி பக்வான்

கொம்பன் தென் மாவட்டத்துல எறங்கிட்டான் மாமா: அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *