நாடாளுமன்ற மக்களவை வளாகத்தில் இன்று பார்வையாளர்கள் மாடத்திலிருந்து குதித்த இரண்டு நபர்கள் வண்ண வெடிகுண்டு வீசினர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட சாகர் ஷர்மா, மனோ ரஞ்சன் ஆகிய இருவரையும் பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்தனர்.
அதேபோல, நாடாளுமன்ற வளாகத்தில் வண்ண வெடிகுண்டுகளை கையில் ஏந்தியபடி கோஷமிட்ட நீலம், அமோல் ஷிண்டே ஆகிய இரண்டு பெண்களையும் பாதுகாப்பு படைவீரர்கள் கைது செய்துள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரிடமும் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர்களது சொந்த ஊர்களுக்கு புலனாய்வு துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
மக்களவையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஹரியானாவை சேர்ந்த நீலம் சகோதரர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “நீலம் டெல்லி சென்றது எங்களுக்கு தெரியாது. படிப்பிற்காக ஹிசாரில் இருக்கிறார் என்பது மட்டுமே எங்களுக்கு தெரியும். மூன்று நாட்களுக்கு முன்பு ஹரியானா வந்து எங்களை பார்த்துவிட்டு நேற்று தான் திரும்பினார். எம்.பில் வரை படித்துள்ளார். மேலும் நெட் தேர்வில் தேர்சி பெற்றுள்ளார். இன்னும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.
நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். மேலும், டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்திலும் பங்கெடுத்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாடாளுமன்ற தாக்குதல்: நான்கு பேர் கைது!
மக்களவையில் நுழைந்த இருவர் : எம்.பி.க்கள் மீது வண்ண புகை வெடி வீச்சு!