பட்ஜெட் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துக்கள் மிக மிக மட்டமானவை என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை இன்று (மார்ச் 20 ) சந்தித்தார்.
அப்போது அவர், ”தமிழக பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்கது. முதல் அமைச்சர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடினமாக உழைத்து வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை மக்களுக்கு வழங்கியுள்ளார்.
சென்னை மெட்ரோவுக்கு ரூ.10 ஆயிரம் கோடியும், கோவை மெட்ரோவுக்கு ரூ.9 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை மெட்ரோவுக்கு ரூ.8,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு துறைக்கும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள், புதிய திட்டங்கள், மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளன. குறை சொல்லவேண்டும் என்பதற்காகவே சிலர் செயல்பட்டு வருகின்றனர். மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால், எடப்பாடி பழனிசாமி முழு பட்ஜெட்டையும் கேட்டிருக்கலாம். ஆனால் அவர் கேட்கவில்லை” என்றார்.
மேலும் அவர், “எடப்பாடி பழனிசாமி துரோகத்தாலேயே தன்னை ஒரு தலைவராக காட்ட வேண்டும் என்று நினைப்பவர். கூவத்தூரில் எப்படி முட்டி போட்டு அவர் முதலமைச்சராக ஆனார், எப்படி நம்பிக்கை துரோகத்தால் அந்த பொறுப்பை அவர் தக்கவைத்துக்கொண்டார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
எல்லோருக்கும் எல்லாம் என்ற உன்னத நோக்கத்துடன் பொற்கால ஆட்சி நடத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். எனவே பட்ஜெட் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துக்கள் மிக மிக மட்டமானவை. அவர் அரசியல் செய்யவேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற கருத்துக்களை கூறியுள்ளார்” என்று செந்தில் பாலாஜி கூறினார்.
மேலும், அண்ணாமலை குறித்த கேள்விக்கு, “கடனாளியாகிவிட்டேன் சிறுக சிறுக சேர்த்த பணத்தை எல்லாம் செலவு பண்ணிட்டேன் என்று சொன்னதாக பார்த்தேன். எனக்குத் தெரிந்து ஒரு எட்டு ஒன்பது வருடத்தில் எந்த காவல்துறை அதிகாரியும் 30 கோடி ரூபாய் அளவிற்கு சம்பளத்தை சேர்க்க முடியாது.
ஏனென்றால் அரவக்குறிச்சி தேர்தலில் அவருடைய தேர்தல் செலவு 30 கோடி என நினைக்கிறேன். அவர மாதிரியே ஒரு எக்ஸ்.எல் சீட்டில் நான் பார்த்தேன். சொந்த நிதி எவ்வளவு என இருந்தது என்று பார்த்ததில் நில் (NIL) என்று இருந்தது. சொந்த பணமே செலவு செய்தாரா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் கடனாளி ஆகிவிட்டேன் என்று சொல்கிறார்.
வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார் அந்த நபர். அதெல்லாம் போலீஸ் ஆபீஸராக இருந்து கர்நாடகாவில் சிறுக சிறுக சேர்த்த பணம் என்று கணக்கெடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மகளிருக்கு 29000 ரூபாய்: அண்ணாமலை கோரிக்கை!
“தமிழ், தெலுங்கு அல்ல… அம்பேத்கரே நமது அடையாளம்” : திருமாவளவன்
