இந்திய சுதந்திரத்துக்கு 75 வயது நிறைந்தது! வளர்ந்து செழிக்கட்டும் இந்தியக் கூட்டாட்சி குடியரசு!

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

நள்ளிரவில் பெற்ற சுதந்திரம் என்று உலகினரால் அழைக்கப்பட்ட நிகழ்வு; ஆங்கிலேய அரசின் ஆட்சி முடிவுக்கு வந்து, சுதந்திர இந்திய அரசிடம் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட நாள், உலகின் ஆகப்பெரிய மக்கள் தொகுதிகளில் ஒன்று மக்களின் பூரண சுயாட்சி என்ற புதியதொரு அரசியல் சகாப்தத்தில் அடியெடுத்து வைத்து எழுபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன.

மிக விரிவான அளவில், மானுடவியல் பார்வையில், உலக வரலாற்றுப் பின்னணியில் பார்க்கையில் இந்த எழுபத்தைந்து ஆண்டுகளின் இந்தியக் குடியரசுப் பயணம் வெற்றிகரமானது, மகத்தானது. ஒவ்வோர் இந்தியக் குடி நபரும் பெருமை கொள்ளத்தக்கது.

இந்த வெற்றிக்கு காரணங்கள் என்ன என்று ஆழமாக பரிசீலித்தால் தேசியம் என்ற கருத்தியலோ, தேசம் என்ற கருத்தாக்கமோ முக்கிய காரணங்களல்ல என்று புரிந்துகொள்ளலாம். அது எளிய மக்களின் மகிழ்ச்சிக்கான ஓர் அடையாளம்; திருவிழா. இந்த மகத்தான வெற்றியின் அடிப்படை இந்தியக் குடியரசு என்ற அடையாளமும், அதன் அரசியல் அமைப்பு சட்டமும்தான் என்றால் மிகையாகாது.

ஏனெனில் நாம் மகிழ்ச்சியடைவது எதற்காக, எதை வெற்றி என்று குறிக்கிறோம் என்பதுதான் இந்த சரியான காரணத்தைச் சுட்டிக் காட்டும்.

வயது வந்தவர்கள் அனைவரும் ஒரு நபருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் வாக்களித்து தங்கள் ஆள்பவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற புரட்சிகர நடைமுறையை அரசியல் நிர்ணய சட்டம் நடைமுறைப்படுத்தியது. “எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இன்னாட்டு மன்னர்” என்பது விதியானது.

இந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் பெருமளவில் மக்கள் பங்கேற்று வாக்களிக்கும் தேர்தல்கள் நடந்துள்ளன. ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகள் அகற்றப்பட்டு, மாற்றுக் கட்சிகள் ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ளன. இடையில் பதினெட்டு மாத காலம் ஆகஸ்ட்,1975 முதல் பிப்ரவரி 1977 வரை நிலவிய நெருக்கடி நிலை காலம் தவிர்த்து பிற எல்லா காலங்களிலும் மக்கள் பிரிவினர், தொகுதிகள் தங்கள் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதும், போராடுவதும் சாத்தியமாகவே இருந்துள்ளது.  

இதன் விளைவாக ஏழ்மை, பசி, பிணி ஆகியவற்றிலிருந்து பெருவாரியான மக்கள் தொகுதிகள் விடுதலையடைந்துள்ளன; பிரமாண்டமான ஆணாதிக்க நுகத்தடியை நெகிழ்த்தி பெண்கள் கல்வி கற்பதும், பல்வேறு துறைகளில் சிறந்து, முதன்மை பெற்று விளங்குவதும் சாத்தியமாகியுள்ளது; இந்தியாவின் பழம்பெரும் மானுடப் பிழையான பார்ப்பனீய ஜாதீயவாதம் என்ற பிற்போக்கு சிந்தனையைக் கடந்து பல்வேறு மக்கள் பிரிவினரும் சேர்ந்து வாழும், சேர்ந்து இயங்கும், பல்வேறு துறைகளிலும் சிறப்புப் பெறும் வாய்ப்புகள் பெருகியுள்ளன. ஒரு பழங்குடி இனத்துப் பெண் இந்தியக் குடியரசின் தலைவராக வீற்றிருக்கிறார் என்பது முக்கியத்துவமற்ற குறியீடல்ல. அது குறிப்பிட்டு நிற்பது தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் மானுட தர்மத்தின் ஆற்றலையே.

இதை படிக்கும்போது இன்னும் நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் நிலவுகின்றனவே என்று தோன்றும். இன்னும் ஜாதி கடந்து மணம் புரிவோரை ஆணவக்கொலை செய்வது நிகழ்கின்றதே, இன்னும் கடுமையான ஏற்றத்தாழ்வுகளும், உழைப்புச் சுரண்டலும் நிலவுகின்றனவே, இன்னும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றனவே என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் எழலாம். உண்மைதான். இன்னும் சமூகம் முற்றிலும் மாறிவிடவில்லை. ஆனால் அது மாற முடியும் என்ற சாத்தியத்தை இந்திய அரசியலமைப்பு ஏற்படுத்தியுள்ளது; கணிசமாக மாற்றியும் காட்டியுள்ளது. அந்த அரசியலமைப்பைத்தான், குடியரசைத்தான் நாம் கொண்டாடுகிறோம்.

இப்படியோர் அரசியலமைப்பு, அதற்கான சட்ட வடிவம் உருவாகக் காரணமானவர்கள் மூன்று மாமனிதர்கள். ஒன்று மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, இரண்டு ஜவஹர்லால் நேரு, மூன்று பாபா சாகேப் அம்பேத்கர்.

வெகுஜன விழிப்புணர்வை அரசியலின் மையமாக்கி, அனைத்து மட்டங்களிலும் எளிய மக்களின் அரசியல் உரிமையே, சுயாட்சி என்ற உரிமையே முக்கியம். இதை படிக்கும்போது இன்னும் நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் நிலவுகின்றனவே என்று தோன்றும். இன்னும் ஜாதி கடந்து மணம் புரிவோரை ஆணவக்கொலை செய்வது நிகழ்கின்றதே, என்ற தத்துவத்தை வளர்த்தெடுத்தவர் காந்தி. ஏராளமான சமூக முரண்களை உள்ளடக்கிய ஒரு சுதந்திரக் குடியரசை உருவாக்க முடியும் என்பதை அறிவாலும், ஆற்றலாலும், தன் வசீகரமிக்க தலைமையாலும் நிகழ்த்திக் காட்டியவர் ஜவஹர்லால் நேரு. எல்லா முரண்பாடுகளுடனும் அளவற்ற முதிர்ச்சியுடன் உரையாடி, அந்தக் குடியரசின் அடித்தளமான சட்ட வரைவை வகுத்து தந்த மேதை அண்ணல் அம்பேத்கர். அப்படியோர் அரசியலமைப்பு சட்டமும், குடியரசும் உருவாகியிராவிட்டால் சுதந்திரம் என்ற சொல்லுக்குப் பொருளற்றுப் போயிருக்கும்.

அப்படியானால் 1950 ஜனவரி 26ஆம் தேதி நாம் குடியரசான தினத்தைக் கொண்டாடினால் போதுமே, சுதந்திர தினம் எதற்கு என்று கேட்க முடியாது. நமது அரசியலமைப்பு சட்டத்தை நாமே உருவாக்கிக்கொள்ளும் சுதந்திரத்தைப் பெற்ற நாள் 1947 ஆகஸ்ட் 15 என்பதை மறந்துவிட முடியாது. அந்த அரசியல் சுதந்திரமே அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை என்பதால் சுதந்திர தினத்திலும் நாம் இந்தியக் குடியரசு என்பதை எண்ணியே கொண்டாட வேண்டும்.

கூட்டாட்சிக் குடியரசு என்பதே இந்தியாவின் எதிர்காலம்!

இந்தியா சுதந்திரமடைந்தபோது எழுதப்படிக்க தெரிந்தவர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. மொத்த மக்கள்தொகையில் பதினாறு சதவிகிதம்தான் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். அதனால் அரசியலமைப்பை உருவாக்குவதில் அவர்களில் ஆங்கிலம் தெரிந்தவர்களே ஈடுபட்டார்கள்.

அவர்கள் ஒன்றுபட்ட இந்தியக் குடியரசு உலக அரங்கில் வலுவாக இருக்கும் என்று நினைத்தார்கள். மேலும் இந்தியாவின் கடந்த காலத்தில் இந்தியா முழுவதுமே குறுநில மன்னர்களே நிறைந்திருந்ததால் இந்தியா மீண்டும் அப்படி தங்களுக்குள் போரிட்டுக்கொள்ளும் சிறிய நாடுகளாக போய்விடக் கூடாது என்று நினைத்தார்கள். அதனால் இந்திய தேசியம் என்ற கருத்தியலையும், இந்திய தேசம் என்ற கருத்தாக்கத்தையும் இந்தியக் குடியரசின் அடிப்படையாக வலியுறுத்தினார்கள்.

ஆனால் அனைத்திந்திய மக்கள் தொகுதி என்பது ஓர் அரசியல் யதார்த்தமல்ல. இந்தியாவின் நீண்ட நெடிய வரலாற்றில், அளப்பரிய பன்மை கொண்ட பண்பாட்டு சூழலில் அப்படி ஒரு தொகுதி உருவாகியதில்லை. இந்தியாவில் பல பகுதிகளிலும் ஜாதி அமைப்பு இருந்தாலும், ஒவ்வொரு பிரதேசத்திலும் அதன் கட்டமைப்பும், உள் உறவுகளும் மாறுபட்டிருக்கும்.

பார்ப்பனர்கள் என்ற அடையாளத்தில் வரும் ஜாதிகளே கூட ஒவ்வொரு பிரதேசத்திலும் வித்தியாசமான கலாச்சார நடைமுறைகள் கொண்டவர்கள். இவர்கள் பேசும் மொழி, வழிபடும் தெய்வங்கள், சடங்காச்சாரங்கள் பலவும் மாறுபட்டவை. பொதுவான சில கூறுகள், புராணங்கள் இருந்தாலும் கணிசமான வித்தியாசங்களும் அவற்றில் இருக்கும். ஓரளவு பொதுத்தன்மை கொண்ட பார்ப்பனர்களே இப்படியென்றால், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்று வரும்போது அளப்பரிய பன்மைத்துவத்தையே நாம் காண முடியும். நாட்டார் தெய்வங்களும், அவர்களுக்கான புராணிகங்களும் அளப்பரியவை. இந்து என்ற ஒற்றை மத அடையாளத்தாலோ, இந்தி என்ற ஒற்றை மொழியாலோ அவர்களை ஒற்றை மக்கள் தொகுதியாக மாற்றிவிட முடியாது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போதே இந்த உண்மை பட்டவர்த்தனமாகவே விளங்கியது. காங்கிரஸ் தலைவர்கள் தங்களுக்குள் ஆங்கிலத்தில் உரையாடுவதன் மூலமே அரசியல் புரிதலை உருவாக்கிக் கொள்ள முடிந்தது. ஆனால், அவர்கள் மக்களுடன் அவரவர் பகுதிகளில் புழங்கும் மொழியில் பேசித்தான் அணிதிரட்ட வேண்டி இருந்தது. உதாரணமாக கவிஞர் நாமக்கல் ராமலிங்கமும், ஆந்திர அரசியல்வாதியான புலுசு சாம்பமூர்த்தியும் வேலூர் சிறையில் அடுத்தடுத்த அறையில் இருந்தார்கள். நெருங்கி பழகினார்கள். அவர்கள் உரையாடல்கள் ஆங்கிலத்தில்தான் இருந்தன. சாம்பமூர்த்தியின் தூண்டுதலில்தான் நாமக்கல் கவிஞர் மலைக்கள்ளன் நாவலை எழுதினார். காங்கிரஸ் கட்சியே மொழிவாரி பிரதேசங்களின் அடிப்படையில்தான் கட்சி அமைப்பை வைத்திருந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்பதுதான் அதன் பிரதேச அலகாக இருந்தது. பின்னாளில் நாடு மொழிவாரி மாநில அரசுகளாக அமைக்கப்பட வேண்டியது இன்றியமையாத நிர்வாக தேவையாக மாறியது.

அச்சு ஊடக பெருக்கமும், பள்ளிக் கல்வி, உயர்கல்வி அமைப்புகளின் பெருக்கமும் தமிழ் மொழி பேசும் மக்கள் தொகுதி என்பதை பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே கட்டமைக்கத் தொடங்கின. தமிழ் மொழியின் தொன்மையும், தமிழக நிலப்பகுதியின் பண்பாட்டுக் கூறுகளும் இணைந்து தமிழ் மொழி பேசும் மக்கள் தொகுதிக்கு முழுமையான திராவிட வரலாற்று அடையாளத்தை வழங்கியது.

இந்தியக் குடியரசின் அங்கமாக இருந்தாலும், கடந்து எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் தமிழ் மாநிலம் என்பது எட்டு கோடி மக்களைக் கொண்ட, தனித்துவமிக்க அரசியல் கட்சிகளைக் கொண்ட ஓர் அரசாக உருவெடுத்துள்ளது. அதன் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிப் பாதையை, பொருளாதார அறிஞர்கள் திராவிட மாடல் எனப் போற்றுகின்றனர். அதற்கு அடித்தளமான திராவிட-தமிழ் மக்கள் என்ற அரசியல் தொகுதியைக் கட்டமைத்த மாமனிதர்கள் தத்துவதரிசி பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் ஆவார்கள். இந்தியக் குடியரசு ஒரு கூட்டாட்சிக் குடியரசு என்பதை நிறுவி, மாநில சுயாட்சி என்ற மக்களாட்சி லட்சியத்தை இந்தியக் குடியரசுக்கு உருவாக்கி அளித்தவர்கள்.

ராணுவம், பணம் அச்சடித்தல், வெளியுறவு ஆகிய மூன்று மட்டும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலும், பிற அரசு பொறுப்புகள் அனைத்தும் மாநில அரசுகளிடமும் இருப்பதுதான் மாநில சுயாட்சி. இத்தகைய சுயாட்சி-கூட்டாட்சி என்பதன் தேவையை உணர்த்தும் வகையில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசும் தனிப்பட்ட மக்கள் தொகுதிகளின் அரசியல் உணர்வுகளின் களமாக நிலைபெற்றுவிட்டதை  நம்மால் சுலபமாக காணமுடியும்.  

ஒன்றியக் குடியரசும், மாநில அரசுகளும்

உதாரணமாக உத்தரப்பிரதேசத்தையும், பீஹாரையும் எடுத்துக்கொள்வோம். இரண்டு மாநிலங்களிலுமே ராம் மனோஹர் லோஹியா (1910-1967) என்ற தரிசனமிக்க  சோஷலிஸ்ட் கட்சி தலைவரின் தாக்கத்தால் உருவான பிற்படுத்தப்பட்டோர் அணிகளான கட்சிகள் எழுபதுகளில் ஜெயப்பிரகாஷ் நாராயண் என்ற சோஷலிச தலைவரின் இயக்கத்தால் வலுவடைந்தன.

முதலில் 1977இல் ஜனதா கட்சி என்றும், பின்னர் ஜனதா தளம் என்றும் இந்த அரசியல் அணியாக்கம் ஒன்றுபட்டு  இயங்கினாலும் இவை தற்போது உத்தரப்பிரதேசம், பீஹார், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தனித்தனி மாநில கட்சிகளாகவே நிலைபெற்றுள்ளன. பீஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் (லாலு பிரசாத் யாதவ்/தேஜஸ்வி யாதவ்) என்றும், ஐக்கிய ஜனதா தளம் (நிதிஷ் குமார்) என்றும் இரு பெரும் கட்சிகளாக வேரூன்றியுள்ளன. உத்தரப்பிரதேசத்திலோ சமாஜ்வாதி ஜனதா கட்சி (முலாயம் சிங் யாதவ்/அகிலேஷ் யாதவ்) என்று நிலைபெற்றுள்ளது.  கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவ கெளடா/ குமாரசாமி தலைமையில் அது மதச்சார்பற்ற ஜனதா தளம் என்ற பெயரில் இயங்குகிறது.

இதனால் பெறப்படுவது என்னவென்றால் மக்கள் பங்கேற்கும் அரசியல் என்பது அந்தந்த நிலப்பகுதிகளின் சமூக கட்டமைப்பு, பண்பாட்டு வரலாறு, கலாச்சார முரண்கள், ஒருங்கிணைக்கும் மொழி ஆகியவை சார்ந்துதான் அமையும். அதுவே மக்களாட்சியின் உண்மையான முரண் களம். அந்த முரண் களமாக உருவாகும் மக்கள் தொகுதிகளே மாநில அரசியலையும், அரசையும் வடிவமைக்கின்றன. அத்தகைய மாநில அரசுகளின் ஒன்றிய அரசாகவே இந்தியக் குடியரசு அமைந்துள்ளது. நமது அரசியலமைப்பு சட்டம் அவ்வாறே பெயரிட்டுள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ஆனால் அரசியலமைப்பு சட்டம் எழுதப்பட்ட காலத்தில் மக்களாட்சி நடைமுறையும், அனைத்து மக்களும் வாக்களிக்கும் தேர்தல்களும் நடைபெற்றிராத காரணத்தால் ஒன்றிய அரசிடம் அதிக அதிகாரங்களைக் கொடுத்துவிட நேர்ந்தது. இந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் அரசியலின் மையம் மாநிலங்களே என்பதும், மாநில அரசுகளே மக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்ற முடியும் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி எனத் தெளிவடைந்துள்ளது. அதனால் மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது என்பது இந்தியக் குடியரசை வலுவான கூட்டாட்சிக் குடியரசாக வடிவமைப்பதற்கு இன்றியமையாததாகும். அதற்கு மாறாக இந்திய ஒன்றிய அரசாங்கத்தை ஒற்றை அரசாகவும், நூற்று முப்பது கோடி மக்களையும் ஒற்றை மக்கள் தொகுதியாகவும் மாற்ற நினைப்பது வரலாற்றை முடக்கும் பக்குவமற்ற செயலாகும். அத்தகைய போக்கு குடியரசு என்ற தத்துவத்தை பலவீனப்படுத்துவதிலேயே முடியும்.

குடியரசுப் பற்றே தேச பக்தி!

குடியரசு என்ற மக்களாட்சியின் விளைபொருளின் மீது நாம் கொள்ளும் பற்றினை தேச பக்தியாக மட்டும் சுருக்கிக்கொள்ள தேவையில்லை. ஏன் இவ்வாறு கூற வேண்டியுள்ளது என்றால் நாம் ஒரு மக்கள் தொகுதியை தேசிய இனம் என்று கூறும்போது பொதுவான பண்புகளைக் கற்பிக்க வேண்டியுள்ளது.

பன்மைத்துவ தேசம் என்று சொன்னாலும் அதை ஒருங்கிணைப்பது எது என்ற கவலை ஏற்படுகிறது. ஏதாவது ஒரு சில அம்சங்களை பொதுவானதாக, ஒருங்கிணைப்பதாக எண்ணும்போது, அந்த அம்சங்களைப் பகிர்ந்துகொள்ளாத மக்களை அந்நியர்களாகக் கருதும்படி ஆகிறது. உதாரணமாக இந்துத்துவம் என்ற அரசியல் கருத்தை உருவாக்கிய சாவர்க்கர் இந்தியன் என்று கூறிக்கொள்பவர் தனது புண்ணிய பூமியாக இந்திய நிலப்பரப்புக்கு வெளியே உள்ள இடங்களை கருதக்கூடாது என்று வரையறை செய்தார்.

இது மெக்காவை புனிதத்தலமாகக் கருதும் இஸ்லாமியர்களையும், ஜெருசலேமை, வாடிகனை புனிதத் தலமாக கருதும் கிறிஸ்துவர்களையும் இந்தியர்கள் என ஏற்றுக்கொள்ள இயலாத தன்மையை உருவாக்குகிறது. இதுவே மத அடையாள அரசியல் என்ற பிற்போக்கு வாதமாகும். ஒரு நவீன குடியரசு என்ன கோர வேண்டும்? “எந்த ஒரு குடி நபரும் இந்தக் குடியரசின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறாரா? குடியரசுக்கு உட்பட்ட மக்கள் தொகுதிகளின் நலனுக்கு பங்களிக்கிறாரா?” என்பதைத்தானே கோர வேண்டும்? அவர்கள் எந்த தலத்தை புனிதமானதாகக் கருதினால்தான் என்ன? உதாரணமாக அமெரிக்காவில் வாழும் இந்தியர் காசியை புனிதத் தலமாக கருதினால் அவர் அந்த நாட்டின் குடி நபர் ஆக மாட்டாரா? ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கைக்கும் அவர்  மக்கள் தொகுதியில் பங்கேற்பதற்கும் என்ன தொடர்பு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? ஆகையால் தேசியம், தேசிய இனம் ஆகிய கற்பிதங்களிலிருந்து விடுபடுவதே அரசியல் முதிர்ச்சியாகும்.

சுருங்கச்சொன்னால் தேசியத்தின் பிரச்சினை அது ஒற்றை அடையாளத்தையே தனி நபர் அடையாளமாகவும், குடி நபர் அடையாளமாகவும் ஒரு சேர மாற்றுவதுதான். ஆனால் மக்களாட்சி தத்துவம் வழங்கும் கொடை தனி நபர் அடையாளத்தையும், குடி நபர் அடையாளத்தையும் வேறுபடுத்தி பார்க்கும் சாத்தியம்.

என்னுடைய தனி நபர் அடையாளம் தமிழன் என்பதுதான்; நான் நாத்திகன்; குறள் நெறியை வாழ்வியல் நெறியாக பயில்பவன்; என்னுடைய குடி நபர் அடையாளம் என்பது இந்தியன். ஏனெனில் நான் இந்தியக் குடியரசின் அரசியல் சாத்தியங்களை நம்புகிறேன், நேசிக்கிறேன். அதன் மீது பற்று கொண்டுள்ளேன். என் நண்பர் மலையாளி; முஸ்லிம்; ஹஜ் யாத்திரை சென்றவர்; அவரும் இந்தியக் குடியரசின் மீது பற்றுக்கொண்ட குடி நபர். அதன் வளர்ச்சிக்காக தன் உழைப்பை நல்குபவர். இதில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை புரிந்துகொள்வதே அரசியல் முதிர்ச்சி.

தனி நபர்களின் பன்மை அடையாளம்; வரலாறு சமைக்கும் மக்கள் தொகுதிகளின் வலுவான மாநில அரசுகள்; அவற்றின் ஒன்றியமான இந்தியக் கூட்டாட்சிக் குடியரசு என்பதே சரியான அரசியல் பாதை. அத்தகைய இந்திய கூட்டாட்சிக் குடியரசு உலகுக்கே வழிகாட்டும் நல்லரசாக மாற இந்த நன்னாளில் வாழ்த்துகிறேன்!  

கட்டுரையாளர் குறிப்பு

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

சிறப்புக் கட்டுரை: நவீன சென்னையை வடிவமைத்த கலைஞர்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.