நாடாளுமன்றத்தில் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத திருணமூல் காங்கிரஸ் பெண் எம்.பி.யான மஹூவா மொய்த்ரா, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். நவம்பர் 2 மக்களவை நெறிமுறைகள் குழுவின் முன் ஆஜரான மஹூவா மொய்த்ரா, நெறியற்ற கேள்விகளை தன்னிடம் அக்குழு கேட்டதாக சொல்லி விசாரணையின் பாதியிலேயே வெளியேறினார். MP Mahua Moitra shocking complaint
என்ன விசாரணை? என்ன கேள்விகள்? என்ன விவகாரம்…?
நாட்டையே உலுக்கி வரும் தொழிலதிபர் அதானி விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியிடம் நேருக்கு நேர் கேள்விகளை அடுக்கினார் காங்கிரசின் ராகுல் காந்தி. இதற்கு பரிசாக ராகுல் காந்தியின் எம்.பி. பதவியே, ஒரு அவதூறு வழக்கின் அடிப்படையில் பறிக்கப்பட்டது. சில மாதங்களில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அதைத் திரும்பப் பெற்றுள்ளார் ராகுல்.
இதேபோல நாடாளுமன்றத்தில் தொழிலதிபர் அதானி பற்றி கடுமையாக பேசியவர்தான் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா.
திருணமூல் பெண் எம்பி மீதான புகார்!
இந்த நிலையில், ‘அதானி பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் லஞ்சம் பெற்றுள்ளார் மஹூவா. இதன் அடிப்படையில் மஹூவாவின் எம்பி.பதவியையே தகுதி நீக்கம் செய்யலாம்’ என்று புதிய புகாரை சில மாதங்களூக்கு முன் கிளப்பினார் பாஜக எம்பி.யான வழக்கறிஞர் நிஷிகாந்த் துபே. இது தொடர்பாக அவர் மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மக்களவையில் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை எம்.பி.க்கள் பதிவிடுவதற்காக ஒவ்வொரு எம்.பி.க்கும் மக்களவை இணைய தளத்துக்கான லாக்-இன் வழங்கப்பட்டிருக்கும். இந்த வகையில் மஹூவா மொய்த்ரா எம்.பி.க்கு வழங்கப்பட்ட லாக்-இன் பாஸ்வேர்டை அவர் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தினிக்குக் கொடுத்திருக்கிறார் என்பதுதான் அவர் மீது சொல்லப்பட்ட புகார்.
சீரியசான இந்த புகார் மீது மக்களவை நெறிமுறைகள் குழு விசாரணை நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் மக்களவை நெறிமுறைகள் குழுவின் முன் அக்டோபர் 31 ஆம் தேதி ஆஜராகி விசாரணையை எதிர்கொள்ளுமாறு மஹூவா மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் மஹூவா, இந்த சம்மன் தனக்கு கிடைப்பதற்கு முன்னே ஊடகங்களுக்கு கிடைத்தது எப்படி என்று கேள்வி எழுப்பினார். அந்த சம்மனின் அடிப்படையில் அக்டோபர் 31 ஆஜராகாமல் நவம்பர் 5ஆம் தேதி ஆஜராக அவகாசம் கேட்டார். ஆனால் நவம்பர் 2 ஆம் தேதி ஆஜராகியே தீர வேண்டும் என்று மக்களவை நெறிமுறைகள் குழு கேட்டுக் கொண்டதால் நவம்பர் 2 ஆம் தேதி நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் முன் விசாரணைக்கு ஆஜரானார் மஹூவா.
விசாரணை என்ற பெயரில் வார்த்தை ரீதியான துகிலுரிப்பு- வெளிநடப்பு!
விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே பாதியிலேயே கோபமாக வெளியேறினார் மொய்த்ரா. அவரோடு மக்களவை நெறிமுறைகள் குழுவில் இடம்பெற்றிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளியேறினார்கள்.
நெறிமுறைகள் குழு என்ற பெயரில், நெறியற்ற கேள்விகளை குறிப்பாக தனது பெண் என்ற பாலினத்தை மையமாக வைத்து கேள்விகள் கேட்டதாக பொங்கியிருக்கிறார் மஹூவா.
இதுகுறித்து அவர் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “மகாபாரதத்தில் துரியோதனன் திரௌபதியின் துகில் உரிந்ததை போல, பெண் என்ற அடிப்படையில் என் மீது வார்த்தை ரீதியான துகிலுரிப்பைப் போல கேவலமான கேள்விகளைத் தொடுத்தார் நெறிமுறைகள் குழுவின் தலைவரான பாஜக எம்பி வினோத் சோங்கர்.
என்னிடம் நெறிமுறையற்ற, இழிவான, பாரபட்சமான முறையில் நடந்துகொண்டார் குழுவின் தலைவர். கேரக்டர் அசாசினேஷன் எனப்படும் என் மீதான பெண் என்ற அடிப்படையில் அவதூறு கட்டமைக்கும் முயற்சிகளில் இறங்கினார். அவரது நடத்தை குறித்து உங்களுக்குத் தெரிவிக்கவே இன்று மிகுந்த வேதனையுடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் மஹுவா மொய்த்ரா.
தொழிலதிபர் எப்படி உங்களுக்கு டியர் ஆனார்? அவரது மனைவிக்கு இது தெரியுமா?
மேலும் இது தொடர்பாக தி இந்து ஆங்கில இதழுக்கு மஹுவா மொய்த்ரா விரிவான பேட்டியளித்துள்ளார்.
அதில், “நவம்பர் 2 வியாழக் கிழமை பிற்பகல் 12 மணிக்கு நான் மக்களவை நெறிமுறைகள் குழு கூட்டத்துக்குள் அழைக்கப்பட்டேன். அதன் பின் குழுவின் தலைவர் பாஜக எம்பியான வினோத் சோங்கர் ஏற்கனவே தான் எழுதி எடுத்து வந்த காகிதங்களுடன் வந்தார். எனது தரப்பு வாதத்தையோ எனது ஸ்டேட் மென்ட்டையோ சொல்வதற்கு நான் அனுமதிக்கப்படவே இல்லை. மக்களவை நெறிமுறைகள் குழுவில் இடம்பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதை சுட்டிக் காட்டிய பிறகே நான் பேச அனுமதிக்கப்பட்டேன்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. குழுவின் தலைவரான பாஜக எம்பி வினோத் சோங்கர் தன் கையில் நிறைய கேள்விகள் அடங்கிய தாள்களை வைத்திருந்தார். குழுவின் பிற உறுப்பினர்களை கூட கேள்விகள் கேட்க விடாமல் அவரே கேட்டார்.
இந்த விசாரணைக்கு அடிப்படையான விஷயங்களே இரண்டுதான். ஒன்று நான் எனது லாக் இன் பாஸ்வேர்டை இன்னொருவருக்கு கொடுத்தேனா என்பதும், நான் குறிப்பிட்டவரிடம் இருந்து பரிசுகள் பெற்றேனா என்பதும்தான்.
ஆனால் என்னிடம் மக்களவை நெறிமுறைகள் குழுவின் தலைவர் வினோத் சோங்கர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா?
‘நீங்க குறிப்பிட்ட அந்த நபரை அதாவது தொழிலதிபர் ஹிராநந்தினியை டியர் ஃப்ரண்ட் என்று அழைத்துள்ளீர்கள். அவர் உங்களுக்கு எப்படி டியர் ஆனார்? இது அவரது மனைவிக்குத் தெரியுமா? நீங்கள் நள்ளிரவு வரை யார் யாருடன் அதிகமாக போனில் பேசுவீர்கள்… நீங்கள் நள்ளிரவு வரை யார் யாருடன் போனில் பேசியிருக்கிறீர்கள் என்பதற்கான விவரங்களை 24 மணி நேரங்களுக்குள் இந்த கமிட்டியிடம் தர வேண்டும்’ என்றார்.
நான் குறுக்கிட்டு, ‘நீங்கள் என்னை விபச்சாரி என்று சொல்லலாமா என கேட்கிறிர்களா?’ என்று கேட்டேன். MP Mahua Moitra shocking complaint
எந்தெந்த ஹோட்டல்களில் யாருடன் தங்கினீர்கள்?
பிறகு குழுவின் தலைவர் என்னிடம் கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் பயணம் செய்த நாடுகள், நகரங்களின் விவரங்களைக் கேட்டார். அங்கே நான் தங்கிய ஹோட்டல்களின் விவரங்களையும் கேட்டார். யார் யாரோடு தங்கினேன் என்ற விவரங்களையும் கேட்டார்.
அப்போதுதான் மக்களவை நெறிமுறைகள் குழுவில் இடம்பெற்றிருக்கும் ஐந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இதைக் கண்டித்து வெளி நடப்பு செய்தார்கள். நானும் வெளி நடப்பு செய்தேன்” என்று மனம் திறந்து கூறியிருக்கிறார்.
அதானி பற்றி கேட்டால், அந்தரங்கம் பற்றி கேட்கிறார்கள்!
மேலும் மொய்த்ரா, “மோடிக்கும் அதானிக்கும் இடையிலான உள் விவகாரங்கள் குறித்து தொடர்ந்து பேசி வரும் சில கட்சிகளில் திரிணமூல் காங்கிரஸ் முக்கியமானது. இதுபற்றி தொடர்ந்து பேசிவரும் எம்பிக்களில் நானும் ஒருத்தி.
ராகுல் காந்தியை எப்படி நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றினார்களோ, எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியை என்ன செய்தார்களோ, அதேபோல என்னையும் செய்ய முயற்சிக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து நான் ஆரம்பத்தில் இருந்தே எங்கள் தலைவர் மம்தா பானர்ஜியுடன் பேசி வருகிறேன்” என்று கூறியிருக்கிறார் மஹூவா மொய்த்ரா.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் இன் பகிர்ந்தது சரியா?
’அதெல்லாம் சரி… மக்களவைக்கான உங்கள் லாக் இன் பாஸ் வேர்ட் ஏன் தொழிலதிபர் ஹிரா நந்தினியிடம் இருக்க வேண்டும்?’ என்ற கேள்விக்கு,
“அவர் எனது நண்பர். அந்த அடிப்படையில் நான் அவரிடம், நாடாளுமன்றத்தில் கேட்க வேண்டிய கேள்விகளை அவரது அலுவலகத்தில் உள்ள செயலாளர் மூலம் டைப் செய்து தரச் சொல்லி கேட்டேன். இதில் வேறு எதுவும் நடக்கவில்லை.
நான் நாடாளுமன்றத்தில் 61 கேள்விகளை எழுப்பியுள்ளேன். அவற்றில் 9 கேள்விகளே அதானி பற்றியவை. நான் அதானி பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதை விட எனது சமூக தளங்களிலும், வீடியோக்களிலும், பேட்டிகளிலுமே அதிகமாக அம்பலப்படுத்தியிருக்கிறேன்.
நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகள் மூலமாக எந்த வித ரகசிய தகவல்களையும் பெற முடியாது. மேலும் எம்பியின் லாக் இன் யார் யாரிடம் இருக்க வேண்டும் என்று எந்த விதிமுறைகளும் இல்லை. எம்பியின் லாக் இன் அவரது உதவியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களால் கையாளப்படும். ஒரு எம்.பி.யின் லாக் இன் என்பது குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு பேரால் கையாளப்படுகிறது. அப்படிப் பார்த்தால் அனைத்து எம்.பி.க்களின் லாக் இன் சுமார் மூவாயிரம் முதல் நான்காயிரம் பேரால் கையாளப்படுகிறது. எனவே இது பிரச்சினையே அல்ல. அவர்களுக்கு நான் அதானி பற்றி தொடர்ந்து பேசுவதுதான் பிரச்சினை. அதனால்தான் இந்த விஷயத்தை வைத்து என்னை மடக்க முயற்சிக்கிறார்கள்.
நான் மீண்டும் எனது கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு கடந்த முறை வெற்றி பெற்றதை விட இரு மடங்கு அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் வருவேன்” என்று கூறியுள்ளார் மஹூவா மொய்த்ரா.
திமிர் பிடித்தவர் மஹுவா மொய்த்ரா: பாஜக பதிலடி!
இதேநேரம் மஹுவாவின் குற்றச்சாட்டுகளை பாஜக எம்பியும் நெறிமுறைக் குழுவின் உறுப்பினருமான அபராஜிதா சாரங்கி மறுத்துள்ளார்.
”குழு கூட்டத்தின் போது மஹுவா மொய்த்ரா திமிர்பிடித்தவராக, முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். மொய்த்ரா ஒரு போலி கதையை உருவாக்கி, அவர் ஏதோ பாதிக்கப்பட்டவர் போல நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறார்” என்றும் குற்றம் சாட்டினார் அபராஜிதா சாரங்கி.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள மக்களவை நெறிமுறைகள் குழுவின் தலைவர் வினோத் சோங்கர், “குற்றச்சாட்டுகள் தொடர்பான கேள்விகள்தான் மஹுவா மொய்த்ராவிடம் கேட்கப்பட்டன. பதில் அளிக்கவோ, மறுக்கவோ உரிமை அவருக்கு அளிக்கப்பட்டது. ஆனால், விசாரணையில் இடையூறுகளை ஏற்படுத்தவே, இந்த சலசலப்பு அவரால் உருவாக்கப்பட்டது. நெறிமுறைக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பற்றி அவர் பயன்படுத்திய வார்த்தைகள் ஒரு எம்.பி.யாகவும், ஒரு பெண்ணாகவும் சற்றும் பொருத்தமற்றவை” என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் மக்களவை நெறிமுறைகள் குழுவின் அடுத்த கூட்டம் நடக்கும்போது இன்னும் பல பரபரப்புகள் இருக்கின்றன. MP Mahua Moitra shocking complaint
–வேந்தன்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
4 மாவட்டங்களில் இரவு வரை கனமழை நீடிக்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!